Published : 11 Mar 2020 11:52 AM
Last Updated : 11 Mar 2020 11:52 AM

மாய உலகம்: அறிவியல் என்றால் என்ன?

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விடையைத் தருவார்கள்.

ஜே.பி.எஸ். ஹால்டேன் என்ன சொல்வார் தெரியுமா? நீர் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு மீன் என்ன விடை கொடுக்குமோ, வேர் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு மரம் என்ன விடை கொடுக்குமோ, வானம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு பறவை என்ன விடை கொடுக்குமோ, அதே விடையைத்தான் நானும் கொடுப்பேன். எது பிரிக்க முடியாதபடி என்னுடன் கலந்திருக்கிறதோ, எதை என்னிடமிருந்து பிரித்தால் நான் இல்லாமல் போவேனோ அதுதான் அறிவியல்.

அறிவியல் என்றால் ஒரு குழந்தையைப் போல் தொட்டதற்கெல்லாம் கனவு காண்பது. ஒவ்வோர் இலையிலும் யார் கோடுகளை வரைகிறார்கள்? நான் இங்கே அமர்ந்து அதையே உற்று பார்த்துக்கொண்டிருப்பதை ஆந்தை அறியுமா? ஒரு கொக்கு தன் இரையைப் பாய்ந்து பற்றிக்கொள்ளும்போது மகிழுமா? சுகமாக நீந்திக்கொண்டிருந்த என்னைப் பிடித்துவிட்டாயே என்று மீன் அழுமா? ஒரு பட்டாம்பூச்சிக்கு வண்ணம் என்றால் என்னவென்று தெரியுமா? உடலைச் சுருட்டிக்கொள்ள ஒரு மரவட்டைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? அப்போது அதற்கு வலிக்குமா?

அறிவியல் என்பது இரவெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொண்டிருப்பது. இரு கைகளிலும் பனியை அள்ளி வைத்துக்கொண்டு முழுக்க உருகி வழியும்வரை நடுங்கிக்கொண்டே இருப்பது. மணலில் கோடு கிழித்துக்கொண்டே ஒரு நத்தை நகர்வதை நாள் முழுக்கக் கன்னத்தில் கை வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது. குனிந்து ஒரு மண் புழுவுடன் அல்லது வெட்டுக்கிளியுடன் அல்லது ஆமையுடன் கதை பேசுவது. பறவைகள் தன் கூட்டைக் கட்டி முடிக்கும்வரை நிதானமாகக் காத்திருப்பது. முட்டையை உடைத்துக்கொண்டு ஒரு புதிய உயிர் புறப்பட்டு வருவதைக் கண்களில் நீர் வரும்வரை பார்த்துக் கொண்டிருப்பது.

அறிவியல் என்றால் அறிவு. உணர்வு. புதிர். புதிருக்கான சாவி. அறிவியல் என்றால் ஆயிரம் கேள்விகள். ஆயிரம் விடைகள். ஆயிரம் மலர்கள். கோடிக் கிருமிகள். அறிவியல் என்றால் சிறிய விதை. அறிவியல் என்றால் ஆலமரம். அறிவியல் என்றால் மின்னும் சிறு நட்சத்திரம். அறிவியல் என்றால் ஒரு பேரண்டம்.

அறிவியல் என்பது ‘கூ’ என்று கத்தியபடி, புகை வழிய வழிய ஒரு நாள் என் வீட்டு வாசலில் வந்து நின்ற ரயில் வண்டி. குழந்தையாக இருந்தபோது ஏறிக்கொண்டேன். இன்றுவரை இறங்கவில்லை. ஜன்னல் அருகில் அமர்ந்து விரித்த கண்களுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு நாள் ரயில் என்னைக் காட்டுக்கு அழைத்துச் சென்றது.

ஒரு நாள் போர்க்களத்துக்கு. ஒரு நாள் பூங்காவுக்கு. மறுநாள் அமெரிக்காவுக்கு. இன்னொரு நாள் இந்தியாவுக்கு. நாளை எங்கு வேண்டுமானாலும் அது என்னை அழைத்துச் செல்லக்கூடும். அறிவியல் என்பது நீண்டு கொண்டே செல்லும் ஆச்சர்யம்.‌ முடிவில்லாத பயணம்.

அறிவியலுக்கு எல்லைகள் இல்லை. ஓநாயும் ஆமையும் மைனாவும் தும்பியும் நீங்களும் நானும் அதற்கு ஒன்றுதான். எல்லா நிறமும் நல்ல நிறம்.‌ எல்லா உயிரும் நல்ல உயிர். எந்த ஒரு மனிதரை விடவும் இன்னொரு மனிதர் மேலானவரோ கீழானவரோ இல்லை. ஒரு பழங்குடிக்கும் நகரவாசிக்கும் இடையில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில், ஓர் ஆப்பிரிக்கருக்கும் அமெரிக்கருக்கும் இடையில், ஒரு கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் அறிவியல் காண்பதில்லை.

அறிவியலுக்கு தேசமோ மொழியோ இனமோ மதமோ சாதியோ கிடையாது. உண்மையை மட்டுமே அது தேடிச் செல்கிறது. உண்மையின் ஒளியிலும் அந்த ஒளி அளிக்கும் கதகதப்பிலும்தான் அது உயிர்த்திருக்கிறது.

நீ மட்டுமல்ல நானும் இயற்கையின் ஓர் அங்கம்தான் என்கிறது அறிவியல். நானும் உன் சமூகத்திலிருந்தே தோன்றுகிறேன். உன் சமூகத்தின் சாயலையே கொண்டிருக்கிறேன். உன் பிரச்சினைகளே என் பிரச்சினைகளாகவும் இருக்கின்றன. ஓர் ஓவியம் எப்படி உன்னை மகிழ்விக்குமோ, ஒரு கதை எப்படி உன் வாழ்வைப் பேசுமோ, ஒரு கவிதை எப்படி உன்னை உயர்த்துமோ, அவ்வாறு நானும் உன் வாழ்வைப் பிரதிபலிக்க விரும்புகிறேன். உன் துயரங்களை, வலிகளைப் போக்க விரும்புகிறேன். உன்னை மகிழ்விக்கவும் உயர்த்தவும் விரும்புகிறேன் என்கிறது அறிவியல்.

என் அறிவியல் பணிவானது. எத்தனை பெரிய சாதனைகளைச் செய்தாலும் அது குனிந்த தலையுடன் இருக்கும். வானத்தையே எட்டிப் பிடித்தாலும் அதன் கால்கள் நிலத்தில்தான் பதிந்திருக்கும். ஒவ்வொரு கணமும் கற்றுக்கொண்டே இருக்கும். கிடைக்கும் ஒவ்வொரு துண்டு வெளிச்சத்தையும் சேமித்துக் கொண்டே இருக்கும். நான் இன்னும் ஒரே ஒரு எறும்பைக் கூட முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா என்று கைகளைக் கட்டிக்கொண்டு நம்மைப் பார்த்துக் கேட்கும்.
அதேநேரம் யாருக்காகவும் எதற்காகவும் தன் அடிப்படைகளை அறிவியல் விட்டுக் கொடுக்காது. எதற்கும் அஞ்சாது. ஒருபோதும் வளையாது.

நீ என்னிடமிருந்து என்னவெல்லாம் பெற்றுக்கொண்டாய் என்று அறிவியல் ஒரு போதும் கேட்காது. என்னவெல்லாம் மற்றவர்களுக்கு வழங்கினாய், எதையெல்லாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டாய் என்றே கேட்கும். நீ உன்னிடமே வைத்திருக்கும் எது ஒன்றும் தேங்கிப் போகும். அள்ளி எடுத்து வெளியே பரப்பு என்கிறது என் அறிவியல்.

டார்வின் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு கிரேக்க நாடகமும் எனக்கு முக்கியம். உயிரியல் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு அரசியலும் எனக்கு முக்கியம். கணிதம் உனக்கு ஒரு கண் என்றால் மனிதன் இன்னொரு கண்ணாக இருக்கட்டும் என்கிறது அறிவியல்.

இந்தப் பேரண்டத்தின் ரகசியங்களை எல்லாம் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதல்ல என் நோக்கம். அது சாத்தியமும் இல்லை. ஒரே ஒரு மெழுகுவர்த்தியை நான் ஏற்றிவைக்க விரும்புகிறேன். ஒரே ஒரு துண்டு வெளிச்சத்தை என் சக உயிர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரே ஓர் அடி முன்னால் எடுத்து வைக்க விரும்புகிறேன். அப்படி எடுத்து வைக்கும்போது என் சக மனிதர்களையும் என்னுடன் இணைத்து அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.

என்னிடம் உள்ள அறிவு கூட்டறிவு. என்னிடம் உள்ள செல்வம் எண்ணற்ற பல தொழிலாளர்களின் உழைப்பால் உருவானது. எண்ணற்ற பல ஆசிரியர்கள் அருளியதே என் கல்வி. என் கல்வியை, என் அறிவை, என் செல்வத்தை என் மக்களுக்காக நான் விட்டுச் செல்ல விரும்புகிறேன். அவர்களுக்காகவே இவற்றைத் திரட்டினேன் என்பதால், அது அவர்களுக்குச் சொந்தமானது.
அறிவியல் என் நிலா. வியப்புடன் கண் சிமிட்டியபடி அதையே பார்த்துக்கொண்டிருக்கும் சிறு நட்சத்திரம் நான்.

- மருதன், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x