Published : 10 Mar 2020 11:51 AM
Last Updated : 10 Mar 2020 11:51 AM

விசில் போடு 22: கல்யாணமாம் கல்யாணம்!

’தோட்டா’ ஜெகன்

‘கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்; ஐநூறு வருஷ தயிர்’ன்னு நாம பெருமையா சொல்லிக்கிட்டாலும், உண்மையில ஒரு கல்யாணம் நடந்து முடிக்கிறவரைக்கும் கல்யாண வீட்டுக்காரங்களுக்கு உடம்புல தங்காது உயிர். தொட்டில்ல தூங்குற குழந்தைகளில் இருந்து பேரன், பேத்தி கல்யாணத்தைப் பார்த்துட்டுதான் நான் போட்டோல ப்ரேமாவேன்னு வருஷ கணக்கா கட்டில்ல படுத்திருக்கிற பெரியவங்க வரைக்கும், ஓடா தேய்ஞ்சு கல்யாண வீட்டுக்காரங்க திருமணத்தை முடிக்கிறதுக்குள்ள, அவங்களை பாடாப்படுத்திடுங்க.

பொண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் வருமா இல்ல பின்னால பெருசா வருத்தம் வருமான்னு பார்த்துட்டு, முன்பெல் லாம் கல்யாண தேதியை ஜோசியர் முடிவு செய்வாரு. இப்பலாம் கல்யாண தேதியை கல்யாண மண்டப மேனேஜர்தான் முடிவு செய்யறாரு. மேரேஜ் ஹாலை தேடி அனுமார் வால் நீளத்துக்கு அலைஞ்ச பிறகே மேரேஜ் வாழ்க்கைல நுழைஞ்சவங்க அதிகம்.

புல்லட்ல பொண்ணு

இந்த சினிமாக்காரங்கதான் ஹீரோயின் அறிமுகத்துக்காக முதல்ல கண்ணோட சேர்த்து புருவத்தைக் காட்டுவாங்க, அதுக்கப்புறம் பெண்ணோட உருவத்தை காட்டுவாங்கன்னா, இப்பவெல்லாம் கல்யாண பொண்ணுங்க அறிமுகமெல்லாம் சினிமாக்காரங்க வயித்துக்குள்ள நைலான் கயித்தைவிட்டு ஆட்டுற மாதிரி இருக்கு. ஒரு பொண்ணு என்னடான்னா மண்டபத்துக்குள்ள புல்லட் ஓட்டிக்கிட்டு வருது, இன்னொரு பொண்ணோ புல்டோசர் ஓட்டிக்கிட்டு வருது. வெறும் பாண்ட்ஸ் பவுடரை மட்டும் பூசிக்கிட்டு மணவறைல உட்கார்ந்த பொண்ணுங்க இப்பவெல்லாம் பத்து பேரை கூட்டிக்கிட்டு குத்து பாட்டுக்கு டான்ஸ் போட்டுக்கிட்டே வந்து உட்காருறாங்க.

மாநகரத்துல வர டிராஃபிக்குக்கு காரணம் ஆட்டோக்காரங்கன்னா, மண்டபத்துல வர டிராஃபிக்குக்கு காரணம் போட்டோக்காரங்க. தலைக்கு மேல ஒரு கேமராவைப் பறக்க விடுறாங்க. அதே சமயம் தரைக்கு அடில நாலு கேமராவை புதைச்சு வைக்கிறாங்க. தூரத்துல இருக்கிறவனுக்கு தாலி கயிறே தெரியாத மாதிரி மண்டபம் முழுக்க கறுப்பு ஒயரா ஓடவிட்டிருக்காங்க. பாவம், பெண்ணோட அப்பா ஏதோ குழப்பத்துல மூக்கை நோண்டிகிட்டு இருக்கிறதையெல்லாம் போட்டோ புடிச்சு கேண்டிட் கேமரான்னு அவருக்கிட்டையே கல்லா கட்டிடுறாங்க.

தோழன், தோழி

மாப்பிள்ளை தோழன், பொண்ணோட தோழி என்னவோ துணை ஜனாதிபதி, துணை முதல்வர் ரேஞ்சுக்கு நினைச்சுக்கிட்டு போயி மாட்டிக்கிறவங்க நிலைமையெல்லாம் ரொம்ப பாவம். கடைசி வரைக்கும் மாப்பிள்ளை மூஞ்சில வர வியர்வையைத் துடைக்கிறதும், பொண்ணோட பட்டுப்புடவை மடிப்பை அடுக்கிறதும்னே காட்சி முடிஞ்சிடும்.

நாலு பேருக்கிட்ட வட்டிக்கடன் வச்சு, நாப்பது பேருக்கிட்ட நன்றிக்கடன் வச்சு, கஷ்டப்பட்டு கல்யாணத்தை நடத்துன, கரெக்ட்டா முகூர்த்தத்துக்கு முக்கால் மணி நேரம் இருக்கிறப்பதான் மாமன், மச்சான் முறைல இருக்கிறவன் எவனாவது, என்னைய மதிக்கல, கொல்லையில தென்னையை வளர்க்கலன்னு மூஞ்சிய காட்டுவான். அரசாங்கத்துக்கு உண்மையான வரி கட்டுனாக்கூட அம்புட்டு கஷ்டமா இருக்காது, மூக்குல நுழைஞ்ச கோபம் முதுகு தண்டை வளைச்சாலும், அதை அடக்கிட்டு, அவசரத்துக்கு அவனுங்களையெல்லாம், சரிகட்டுறதெல்லாம் லட்சத்துல நாய் வாங்கி நாம தின்ன மிச்சத்தை போடுற மாதிரின்னு நினைச்சுக்கிடனும்.

சீட்டுக் கச்சேரி

கல்யாணத்துக்கு கிஃப்ட் வைக்கணும்னாவே நம்மாளுங்க கண்ணை மூடிக்கிட்டு வாங்குறது ரெண்டே பொருள்தான். ஒன்னு எவர்சில்வர் ஹாட்பாக்ஸு, இன்னொன்னு அரை டஜன் கண்ணாடி கிளாஸு. மணமக்கள் எல்லாம் வாரத்துக்கு ஒரு கிளாஸ்ல தண்ணி குடிச்சாலும் வாழ்நாள் முழுக்க தண்ணியாய்க் குடிக்கிறளவுக்கு கண்ணாடி கிளாஸை சேர்த்திடுவாங்க. ஆத்துல புடிச்ச மீனை பொரிச்சா ஒரு அர்த்தம்மா, ஆனா ஆல்ரெடி துவைச்ச துணியை திருப்பி துவைச்சா தப்பும்மா.

பாட்டு கச்சேரி இல்லாத கல்யாணங்கள் நிறைய உண்டு. ஆனா, சீட்டு கச்சேரி இல்லாத கல்யாணமே கிடையாது. கல்யாண வீடுகளுக்குன்னே சில கார்ட்டூன் கேரக்டர்கள் உண்டு. அதுல முக்கியமானது ஆன்சைட் அங்கிள். ஏழு மணி முகூர்த்தத்துக்கு நாலு மணிக்கே ஒருத்தர் வந்து உட்கார்ந்திருப்பாரு. அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு மண்டபத்துல குறுக்கமறுக்க நடந்தபடியே எல்லோரையும் அதட்டிக்கிட்டு இருப்பாரு.

அல்டாப்பு பார்ட்டிங்க

அடுத்த கேரக்டர் அல்டாப்பு ஆன்ட்டி. வந்தோமா, வாழை இலையை வழிச்சு வயிறு நிறைய தின்னோம்மா, வாய் நிறையா சிரிப்பு காட்டி போட்டோவுக்கு போஸ் காட்டி நின்னோம்மான்னு இல்லாம இவுங்க பண்ற அலும்புகள் இருக்கே, அதெல்லாம் எளியவங்களோட எலும்புகளை நொறுக்கிடும். அடுத்தவங்க போட்டிருக்கிற நகையை கண்ணுலயே கிராம் கணக்குல துல்லியமா அளந்திடுவாங்க இந்த ஆன்டீஸ். இந்தப் புடவையதானே நீ சீனுவோட சித்தப்பா பொண்ணு கல்யாணத்துல கட்டியிருந்த? இந்த நெக்லஸை தானே நீ மாதுவோட மச்சினன் பையன் கல்யாணத்துல போட்டிருந்தன்னு, வாழ்நாள் முழுக்க வல்லாரை கீரையை மட்டுமே தின்னு வளர்ந்த மாதிரி, தன்னோட டிபன் பாக்ஸ் வாயால நம்மோட டேட்டாபேஸையே கொட்டும்.

ஒவ்வொரு கல்யாண வீட்டுலையும், நகராத தேரைகூட கதறியே நகர்த்துற ரேஞ்சுல, சமையலை கவனிக்கவே ஒரு சித்தப்பு இருப்பாரு. அன்றைய சுவாசத்தை முழுக்க சமையலறை வாசத்துலையே கலந்துட்ட நல்லவரா இருந்தாலும், அவரு அன்னைக்கு முழுக்க ஓட்டுற படமெல்லாம் ஆஸ்கரு விருதுக்கான ரகம். பல்லாளதேவன் போர்ப்படை தளபதியான பாகுபலி வரிசையா பூனைப்படை வணக்கம் யானைப்படை வணக்கம்னு சொல்ற மாதிரி, சாம்பாரை இலைல ஊத்து புளிக்குழம்பை தலைல கவுத்துடுன்னு பந்தி முழுக்க ரவுண்டு கட்டி சவுண்டு விடுவாரு.

பந்திவாயன்கள்

பரிமாறுற ஆளுங்க எல்லாம், நீ சொல்லாட்டியும் நாங்க சாம்பார் தான்யா ஊத்தப்போறோம், பின்ன சாப்பிடுறவன் இலையில சயனைடா ஊத்தப்போறோம்ன்னு, பொறுப்பா வேலை செஞ்சாலும் ரொம்ப கடுப்போட இருப்பாங்க. பந்திக்கு மோர் வாளி வந்தா போதும், இவர் முந்திக்கிட்டு வாஷ்பேசின் பக்கமா போயிடுவாரு. கை கழுவ வரவங்கக்கிட்ட எல்லாம் பொரியல் எப்படி இருந்திச்சு, அவியல் எப்படி இருந்துச்சுன்னு புதுப்படத்துக்கு ரிவ்யூ கேட்கிற மாதிரி நனைக்காத துணியைத் துவைக்க ஆரம்பிச்சுடுவாரு.

வந்தவர்களை குந்த வச்சு சோறு போட்டதுதான் நம்ம கலாச்சாரம். இப்ப இந்த ‘பப்பட்’ங்கிற பேருல நொந்து போக வச்சு சோறு போட ஆரம்பிச்சுட்டாங்க. பாவம் நம்மாளுங்க, அந்த எட்டு அங்குல தட்டுல, இட்லி, தோசை, பொங்கல், பூரி, ஸ்வீட், காரம், ஊத்தப்பம், இடியாப்பம்னு தக்காளிசோறு, தயிர் சோறுன்னு மொத்தமா வாங்கிக்கிட்டு எதோட டேஸ்ட் எதுன்னே தெரியாம சாப்பிடுவாங்க. முதல் நாலு பலகாரம் வரப்ப பேங்காக் நகரமாட்டம் இருந்த தட்டு, மொத்த பலகாரமும் வரப்ப, குண்டுல சிதைஞ்ச பாக்தாத் நகரமாட்டம் மாறிடும். மொத்தமா எல்லாத்தையும் வாங்கி வங்கிலையா போடப்போறீங்க? ஒவ்வொண்ணா வாங்கி வாயில போடுங்கய்யா போதும்.

மெட்டி மாட்டி பண்ணின கல்யாணங்கள்ல எப்போ கேக்கை வெட்டி கொண்டாட ஆரம்பிச்சமோ, அப்பவே நம்ம கல்யாணங்களின் நிறங்கள் மாற ஆரம்பிச்சுடுச்சு. தாலிய கட்டின கையோட பெத்தவங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்குறது குறைஞ்சு, இப்பலாம் உடனே டிக்டாக் பண்ண ஆரம்பிச்சுட்டோம். கல்யாணங்களின் நிறங்கள் மாறினாலும், கல்யாணங்களின் விதங்கள் மாறினாலும், மேல பார்த்த மாதிரியான மனிதர்களும் நிகழ்வுகளும்தான் கழுதையை வச்சு உழுதா என்ன, நெல்லு வளர்ந்தா போதும்ன்னு இந்த மாறுதல்களிலும் ஓர் ஆறுதல் தருகிறது.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x