Published : 09 Mar 2020 10:35 AM
Last Updated : 09 Mar 2020 10:35 AM

எண்ணித் துணிக: தொழிலுக்கும் கொள்கை முக்கியம் அமைச்சரே!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் என்றாலும் பன்னாட்டு கம்பெனி என்றாலும் அதன் வழியை, வெற்றியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அதை நிர்வகிக்கும் முறை. ஒரு தொழில் எவ்வாறு நடத்தப்படுகிறது, எப்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது, எந்தெந்த விதங்களில் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது ரொம்பவே முக்கியம்.

இதை செயல்படுத்த உதவும் விதிகள், செயல் முறைகளின் கலவையை நிர்வாக ஆட்சிமுறை (Corporate governance) என்கிறார்கள். ஒரு கம்பெனியின் முதலீட்டாளர்கள் முதல் அதன் ஊழியர்கள் வரை, கம்பெனியின் ஊழியர்கள் முதல் அதைச் சார்ந்த சமூகம்வரை அனைத்தையும் பாதிக்கும் கம்பெனியின் உட்புற வெளிப்புற காரணிகள் தான்நிர்வாக ஆட்சிமுறை.

சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் நிர்வாக ஆட்சிமுறை என்பது தொழிலை நேர்ப்படுத்தி, நிர்வகிக்க, அதைத் திறம்பட நடத்தி, செல்ல வகுக்கப்படும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள். இந்தக் கோட்பாடு பெரிய நிறுவனங்களுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் மட்டுமே என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.

சிறு தொழில் முதல் ஸ்டார்ட் அப் வரை எத்தகைய தொழிலானாலும் சரி; எந்தசைஸ் கம்பெனியானாலும் சரி; அதை நேர்ப்படுத்தி நடத்திச் செல்லத் தேவையான சித்தாந்தம்தான் நிர்வாக ஆட்சிமுறை. இது இல்லாமல்தான் பல தொழில்கள் திக்குத் தெரியாமல் தறிகெட்டு தவறிப் போய், தெரிந்தும் தெரியாமலும் திருட்டுத்தனங்கள் செய்து திண்டாடி தெருக்கோடிக்கு வந்து தவியாய் தவிக்கின்றன! ஒழுங்குமுறை, விதி என்று நிர்வாக ஆட்சிமுறை பற்றிக் கூறுவதால் இதை ஏதோ பெரிய கம்பசூத்திரம் என்றோ, என் சின்ன தொழிலில் இந்த பெரிய விஷயத்தை எப்படி செயல்படுத்துவது என்றோ நினைக்காதீர்கள், மலைக்காதீர்கள்.

இந்தக் கோட்பாடு பெரிய அறிவியலும் அல்ல, புரிந்துகொண்டு செயல்படுத்துவது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் செலுத்துவதுபோல் சிக்கலானதும் அல்ல. பயப்படாமல் தைரியமாகத் தொடர்ந்து படியுங்கள். சின்ன விஷயம்தான் பெரிய மாற்றங்களை நிகழ்த்தும்! ஒரு வீடு சுத்தமாக இருந்து அதன் அனைத்து சாமான்களும் அவையவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அனைத்தும் அழகாய் அடுக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டை நிர்வகிப்பவரைப் பற்றி நமக்கு நன்றாக தெரிந்து கொள்ள முடிவதோடு அவர் மீது நல் லெண்ணமும் பிறக்கிறது.

அதேபோல் ஒரு கம்பெனி சரியாக நிர்வகிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளில் தெளிவு இருக்கும் பட்சத்தில் அந்த கம்பெனியின் நிர்வாகத்தின் மீது நன்மதிப்புபிறக்கிறது. அக்கம்பெனி மீது நம்பிக்கை வளர்கிறது. அதனால்தான் நல்ல நிர்வாக ஆட்சிமுறையின் தரத்தைக் கொண்டு கம்பெனிகளின் உள்ளார்ந்த மதிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு நல்ல நிர்வாக ஆட்சிமுறையின் தன்மைகளாகப் பார்க்கப்படுவது நான்கு விஷயங்கள். கம்பெனியின் நேர்மை, கம்பெனியில் ஒவ்வொரு லெவலிலும் திகழும் அக்கவுன்டபிலிடி, மேல்மட்ட நிர்வாகம் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரையில் நிலவும் பொறுப்பு, கம்பெனி முழுவதும் ஊதுபத்தி புகைபோல் பரவியிருக்கும் வெளிப்படைத்தன்மை.

இவை நான்கும் தவறாமல் தாராளமாய் ஒரு கம்பெனியில் தவழத் தேவை ஒருங்கிணைந்த வணிக மேலாண்மை அமைப்பு. இதன் மூலமே கம்பெனிக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக, மறைக்கப்படாமல், அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதனாலேயே என்ன நடந்தது, என்னென்ன நடக்கிறது என்ற கண்டறிதல் (Transparency) அனைவருக்கும் எளிதாகிறது. நிர்வாக ஆட்சிமுறை செயல்கள் சிலவற்றை படித்தால் உங்களுக்கு இக்கோட்பாடு இன்னும் தெளிவாய்புரியும். கம்பெனியின் கொள்கைகள், நடைமுறைகள், செயல்முறைகள் எல்லாம் தெளிவாக எழுதப்படுவதுடன் யார் யாருக்கு என்ன பங்கு என்ன பொறுப்புகள் என்பது வரையறுக்கப்படுவது.

கம்பெனியில் `கான்ஃப்ளிக்ட் ஆஃப் இன்ட்ரஸ்ட்’ கொள்கைகள் சரியாக வகுக்கப்பட்டு கம்பெனியில் பணிபுரிபவர்கள் கம்பெனியின் சப்ளையர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரோடு இருக்கும் வணிக ரீதியான உறவுகளை மற்றவர்கள் கேட்பதற்கு முன்பாகவே ஒளிவுமறைவில்லாமல் விளக்கும் கொள்கைப்படி நடப்பது.

கம்பெனிகளில் நிர்வாக ஆட்சிமுறை சரியாக வகுக்கப்படாமல் இருந்தாலோ தெளிவாக எழுதப்பட்டும் அவை செயல்படுத்தப்படாமல் இருந்தாலோ என்ன ஆகும் என்பதற்கு நம்மூர் வங்கிகள் பலருக்கு கடன் தந்த முறையையும் அவர்கள் அதை திருப்பித் தராமல் வெளிநாட்டு ‘ஷேத்ராடனம்’ மேற்கொண்டு, திரும்பி வரமாட்டேன் என்று பெப்பே காட்டுவதையும் அதனால் திருப்பித் தராமல் நிற்கும் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை அரசாங்கத்திடம் கையேந்தும் அவலத்தையும் நினைத்துப் பாருங்கள். உங்கள் ஸ்டார்ட் அப்பில் அந்த பிராப்ளம் ஸ்டார்ட் ஆகி வளராதிருக்க உங்கள் தொழிலுக்கென்று நிர்வாக ஆட்சிமுறை கொள்கைகளை வகுத்துக்கொள்ளுங்கள்.

நாம் பள்ளியில் சேரும் போது ‘ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்’ என்ற புத்தகத்தை தந்து இப்படித்தான் பள்ளியில் நடந்துகொள்ள வேண்டும் என்றது ஞாபகம் இருக்கிறதா? நிர்வாக ஆட்சிமுறை என்பது கிட்டத்தட்ட அதுதான். யார் யாருக்கு என்ன பங்கு, யார் என்னென்ன முடிவுகள் எடுக்க வேண்டும், எடுக்க முடியாது, கம்பெனி பற்றிய விஷயங்களை எந்தெந்தெ நேரத்தில் எப்படி செய்வது, செய்யக்கூடாது என்ற ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ். அதன்படி நடந்தால் பள்ளியில் நீங்கள் எடுத்தீர்களோ இல்லையோ குறைந்ததது உங்கள் ஸ்டார்ட் அப் சென்டம் எடுக்கும். அப்படி ஒன்றை வகுத்துக்கொள்ளாமல் தொழிலை நடத்தினால் ஃபெயில் ஆகும் சாத்தியக்கூறு அதிகம். எப்படி வசதி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x