Published : 08 Mar 2020 12:02 PM
Last Updated : 08 Mar 2020 12:02 PM

பெண்கள் 360: நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்ட ரம்யா ஹரிதாஸ் 

தொகுப்பு: ரேணுகா

கேரளாவின் ஆலத்தூர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்யா ஹரிதாஸ், பட்டியலினத்தைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

அப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜாஸ்கவுர் மீனா தன்னைப் பின்பக்கத்திலிருந்து தோள்பட்டையில் தாக்கியதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரம்யா புகார் அளித்துள்ளார். அதில், ‘மார்ச் 2-ம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா என்னைத் தாக்கினார். நான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவள், பெண் என்பதால் இதுபோன்ற தாக்குதல் என் மீது நடத்தப்படுகிறதா? இந்த நிகழ்வு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கோரியுள்ளார்.

மகப்பேறு விடுப்பு ரத்து

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற மத்திய அரசு ஊழியருக்கு இரண்டாம் பிரசவத்துக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் ஆயிஷா பேகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஆறு மாதகால மகப்பேறு விடுப்பு எடுத்தேன்.

பின்னர் இரண்டாம் முறையாகக் கருவுற்று, மூன்றாம் குழந்தையைப் பெற்றேன். குழந்தையைப் பராமரிக்க ஆறு மாதக்கால விடுப்பு எடுத்தேன். இந்த விடுப்புக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மறுத்துவிட்டனர்.

எனவே, இரண்டாம் பிரசவத்துக்கான மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையைத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, தீர்ப்பு வழங்கினர்.

இந்தத் தீர்ப்பில் மனுதாரர் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையில் பணிபுரிவதால் அவருக்கு மத்திய சிவில் சர்வீஸ் மகப்பேறு விடுமுறை விதிகள் மட்டுமே பொருந்தும். இந்த விதிகளின்படி இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். மனுதாரருக்கு முதல் பிரசவத்திலேயே இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டதால் இரண்டாம் பிரசவத்துக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க முடியாது. இதுபோன்ற அபூர்வமான வழக்குகளில் விதிகளைத் தளர்த்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

எண்ணிக்கை குறையுமா?

வயதான பெண்கள் முதல் பச்சிளம் குழந்தைவரை இன்றைக்குப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அச்சத்தை உண்டாக்குகிறது. பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடப்படும் நாட்டில்தான் பாலியல் வன்முறையாலும் பெண்கள் சிதைக்கப்படுகிறார்கள்.

இந்த இரு முரண்களை 13 நிமிடக் குறும்படமாக எடுத்திருக்கிறார் வங்காள இயக்குநர் பிரியங்கா பானர்ஜி. கஜோல், ஸ்ருதி ஹாசன், நேகா தூபியா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்துள்ள ‘தேவி’ குறும்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

சிறிய அறையில் பல்வேறு சமூக, கலாச்சார, பழக்கவழக்கங்களைக் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவருக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாதவர். ஆனால், இவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது பாலியல் வன்முறை என்ற கொடூரமான கயிறு.

அவர்கள் தங்கியுள்ள அறையில் மேலும் ஒருவர் தங்குவதற்கான அழைப்புமணி ஒலிக்கிறது. திறந்தால், கஜோலின் கையை ஒரு பெண் குழந்தை பிடிக்கிறாள். அவளும் அந்தச் சிறு அறையின் உறுப்பினராகிறாள். பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் சமூகத்தின் கோர முகம், பார்வையாளர்களை அச்சுறுத்துகிறது.

வரலாற்றில் முதன் முறையாக...

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்ற வழக்கை விசாரிக்க, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் 157 ஆண்டுகால வரலாற்றில் மூன்று பெண் நீதிபதிகள் ஒன்றிணைந்த அமர்வு சர்வதேச மகளிர் தினத்தைக் கவுரவிக்கும் வகையில் தற்போதுதான் அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x