Published : 07 Mar 2020 11:18 AM
Last Updated : 07 Mar 2020 11:18 AM

சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் வீடுகள்

சுபா. எஸ்

நம் நாட்டில் இன்றும் உயர்ந்தோங்கி நிலைத்து நிற்கும் பெரிய கோட்டைகளும் அரண்மனைகளும் மாளிகைகளும் இன்று நாம் கட்டுவதுபோல் சிமெண்ட் கல்வையாலும் கட்டுக்கம்பிகளாலும் கட்டப்பட்டனவா? இல்லை, இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களான மண்ணையும் கற்களையும் பயன்படுத்தித்தான் கட்டப்பட்டன. சிமெண்ட் கட்டிடங்களைவிடக் காலத்தைக் கடந்து அந்தக் கட்டிடங்கள் கம்பீரமாக நிற்கின்றன.

மண்ணால் கட்டப்பட்ட நம் பாரம்பரிய வீடுகள், இன்னமும் உறுதியாக, காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கின்றன. ஆனாலும், நாகரிகம் என்ற பெயரிலும் நவீனம் என்ற பெயரிலும் நாம் அதிகமாக கான்கிரீட் கட்டிடங்களையே நம்பி, அவற்றையே கட்டிவருகிறோம். இதனால் மண்வீடுகள் போன்ற மரபுசார்ந்த முறையிலான வீடுகளை நாம் இழந்துவருகிறோம்.

மண் வீடுகள் என்றவுடன் அது மிகவும் பழங்காலத்தைச் சார்ந்தது என்ற கண்ணோட்டத்துடன், அவை இந்தக் காலத்துக்கு ஒத்துவருமா என்று நினைத்துவிடாதீர்கள். இந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் மிக நவீன வடிவமைப்பில், வீட்டின் தோற்றம் கண்ணைவிட்டு அகலாதவகையில் அழகான தளங்களுடன் மிகவும் உறுதியானதாகவும் அவற்றை உருவாக்கலாம். நமது பண்பாட்டையும் மேற்கத்திய வடிவமைப்பையும் இணைத்து அழகுணர்வுடன்கூடிய மண் வீடுகளை இப்போது உருவாக்க முடியும்.

இந்த முறையில் வீடுகளைக் கட்டும் கலைஞர்களின் எண்ணிக்கை முன்னைவிட இப்போது குறைந்துவிட்டதே தவிர, அத்தகைய கலைஞர்களே இல்லாமல் போய்விடவில்லை. தங்கள் முன்னோரிடமிருந்து இந்த வித்தையைக் கற்ற கலைஞர்கள் இன்னும் குறைந்த அளவில் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நமது பண்பாட்டைப் பேணிக்காக்கும் வகையிலான மண் வீடுகளை இன்னும் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மண்ணால் வீடு கட்டுவதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. மண்ணையும் களிமண்ணையும் குழைத்து அதன் மூலம் சுவரை எழுப்பலாம். இந்தச் சுவர்களுக்கு இடையில் பழைய செய்தித்தாள்களை வெப்பத்தடுப்புக்குப் பயன்படுத்தலாம். இன்னொரு முறையில் மண்கலவையுடன், வைக்கோல் அல்லது கோரைப்புற்களைச் சேர்ப்பதன் மூலம் உறுதிவாய்ந்த வீடுகளைக் கட்டலாம்.

மற்றொரு முறையில், மண்ணால் செங்கற்கள் செய்து, அதையும் மண் கலவையையும் சேர்த்து வீடுகள் கட்டலாம். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கமரூதின் பின் முகமது என்பவர் மண், சிமெண்ட், மரம் அல்லது இரும்பு சேர்த்து ஒரு புதுவகையான சிமெண்ட்டைக் கண்டுபிடித்துள்ளார். இதைப் பயன்படுத்தியும் மண்வீடுகள் கட்டலாம்.

தரைத் தளத்துக்கும் சுவருக்கும் மண்ணைப் பயன்படுத்தலாம், மேற் கூரைக்கு என்ன செய்வது? மூங்கில்களையோ பழைய மரங்களையோ கொண்டு சட்டம் அமைத்து, அதன் மேல் கோரைப்புற்களைப் படர்த்தியோ ஓடுகளைக் கொண்டோ எளிதாகக் கூரையமைக்கலாம். மலைப் பகுதி என்றால், இரும்புத் தகடுகளைப் பயன்படுத்தி, அதன் மேல் மண்ணும் புற்களும் கலந்த கலவையைப் பயன்படுத்தலாம்.

மண்ணால் வீடு கட்டுவதை, அறிவியல் தொழில்நுட்பம் என்பதைவிட ஒரு கலை என்றுதான் சொல்ல வேண்டும். சரியான கலவையில், முறையாகக் கட்டினால், இந்த மண்வீடுகள் மிகவும் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். அது மட்டுமின்றி இவை நிலநடுக்கத்தையும் தாங்கும் தன்மை கொண்டவை. மேலும், இவற்றில் எந்த வேதிப் பொருட்களும் இல்லாததால், சுற்றுச்சூழலுக்கும் இவை மிக உகந்தவை.

மண்வீடுகள் இயற்கையாகவே, வெப்ப காலத்தில் குளுமையாகவும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். சிமெண்ட் வீடுகளுடன் ஒப்பிடும்போது, இதைக் கட்டுவதற்கு ஆகும் செலவும் மிகக் குறைவு. இந்த வகை வீடுகள் கட்டுவதற்குப் பெரிய தொழில்நுட்பம் தேவையில்லாததால், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களால், கட்ட முடிவதால், இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது.

நம் மனத்தின் உண்மையான மகிழ்ச்சி இயற்கையுடன் ஒத்து வாழ்வதில் இருக்கிறது. எனவே, வீடுகளின் வடிவமைப்பு இயற்கைக்கு இணக்கமானதாக இருக்க வேண்டுமேயன்றி, அதனுடன் ஒருபொழுதும் போட்டி போடுவதாக இருக்கக் கூடாது.

இயற்கை வளத்தை அழித்து, நாம் இருப்பிடம் அமைப்பது சரியானதா என்பதை யோசிக்க வேண்டும். உண்மையான சொத்து நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையில் உள்ளது, நாம் வசிக்கும் வீட்டில் அல்ல. அந்த இயற்கையை, நம் முன்னோரைப் போன்று பாதுகாத்து, வருங்கால சந்ததிக்கு அளிப்பதற்கு இந்த மண்வீடுகள் நமக்கு நிச்சயம் வழிகாட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x