Published : 07 Mar 2020 10:45 AM
Last Updated : 07 Mar 2020 10:45 AM

விதை முதல் விளைச்சல் வரை 25: பயிர்ப் பாதுகாப்பில் தாவரப் பூச்சிக்கொல்லிகள்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

பயிர்ப் பாதுகாப்பில் மிகவும் முக்கியமானது பூச்சி நோய்க் கண்காணிப்பு. பயிர் விதைத்தது முதல் அறுவடைவரை தொடர்ந்து வயலைப் பார்வையிட்டு பூச்சியையும் நோயையும் தொடக்க நிலையிலேயே அறிவது மிக அவசியம். எந்த ஒரு பூச்சியும் நோயும் ஓரிரு நாட்களில் பயிரை இழக்கும் அளவுக்குச் சேதத்தை உருவாக்குவதில்லை. அதேநேரம் பயிர்களில் பெரும் சேதம் ஏற்படுவதற்குப் பூச்சிகள்தாம் காரணம் என்பது உண்மை. ஆனால், இதைவிடப் பெரிய உண்மை போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதுதான்.

ஆகையால் பூச்சி, நோய் தாக்குதல் பற்றிய அறிகுறிகளை உழவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். சரியான கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக கருவாட்டுப் பொறி வைத்துப் பழ ஈக்களைக் கவர்வதைக் கூறலாம்.

ஏக்கருக்கு 20 என்ற அளவில், ஆறு துளைகள் ( 3 மி.மீ குறுக்களவு) கொண்ட 20 X 15 செ.மீ. அளவு பாலிதீன் பைகள், தண்ணீர் பாட்டிலில் ஒவ்வொன்றிலும் 5 கிராம் ஈர கருவாட்டுத் தூளை வைத்து ஒரு சிறு துண்டுப் பஞ்சினுள் ஓரிரு துளி நூவான் (பூச்சிக்கொல்லி மருந்து) இட்டு பாலிதீன் பைகளை அல்லது தண்ணீர் பாட்டில்களைப் பயிரின் உயரத்தில் குச்சியில் கட்டி விட வேண்டும். இவ்வாறு வைத்து சோளக்குருத்து ஈ, பழ வகை, பூசணி வகை ஆகியவற்றைத் தாக்கும் பழ ஈக்களைக் கவர்ந்திழுத்து அழிக்கலாம். கருவாட்டுத் தூளை 20 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பில் வேம்பின் பெருமையை விவசாயிகள் முழுமையாக உணர வேண்டும். வேம்பில் உள்ள முக்கிய ரசாயனப் பொருளான அஸாடிராக்டின், சலானின் எனும் மூலக்கூறு, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. வேப்பம் பழத்தில் 21 சதவீதம் தோல், 47 சதவீதம் சதை, 19 சதவீதம் ஓடு, 10 சதவீதம் பருப்பு உள்ளது. வேப்பம் புண்ணாக்கில் தழை, மணி, சாம்பல், சுண்ணாம்பு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் தொழு உரத்தில் கிடைப்பதைக் காட்டிலும் கூடுதலாக உள்ளன.

வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் கரைசல் தயார்செய்ய, நன்கு காய்ந்த தூள் செய்யப்பட்ட 5 கிலோ வேப்பங்கொட்டையை ஒரு துணியில் முடிச்சாகக் கட்டி 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு சாற்றை வடிகட்டி, வடிகட்டிய கரைசலுடன் 100 கிராம் காதி சோப்பைக் கலந்து 90 லிட்டர் தண்ணீர் சேர்த்து 100 லிட்டராக ஆக்கவும். இதைக் கைத்தெளிப்பான் மூலம் பயிருக்குத் தெளிக்க வேண்டும்.

வேம்பு சார்ந்த பொருட்கள் வேதிப்பூச்சிக் கொல்லிகளுக்குச் சமமாக வீரியம் உடையவை. பல்வேறு பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வேம்புப் பொருட்களைப் பயிர்ப் பாதுகாப்பு மருந்தாகப் பயன்படுத்தினால் பயிர்களை உண்ணாமல் வெறுத்து ஒதுக்கிவிடுவதால் பயிர் பாதுகாக்கப்படுகிறது. இப்பொருட்கள் தெளிக்கப்பட்ட பயிரை பூச்சிகள் உண்ணும்போது அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், முட்டைகளின் எண்ணிக்கையையும் பொரிக்கும் திறனும் குறைகின்றன.

சில வகைப் பூச்சிகள், பூச்சிக்கொல்லிகளை எதிர்த்துப் பெருகக்கூடிய தன்மையுடையவை. ஆனால், வேப்பம் பொருட்களை எதிர்த்து அவை பெருக முடியாது. வேப்பம் பொருட்கள் நமது கிராமங்களில் தாராளமாகக் கிடைப்பதால் பூச்சிக் கொல்லிகளைப் போல் அதிகப் பணம் செலவழிக்கத் தேவையில்லை. நாமே வேப்பங்கொட்டைகளைச் சேகரித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இதர தாவரப்பூச்சிகள்

1) ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள்: ஆடாதோடா, நொச்சி போன்றவை.

2) ஒடித்தால் பால் வரும் இலை தழைகள்: எருக்கு, ஊமத்தை போன்றவை.

3) கசப்புச் சுவை மிக்க இலை, தழைகள்: வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.

4) உவர்ப்புச் சுவை மிக்க இலை தழைகள்: காட்டாமணக்கு.

5) கசப்பு, உவா்ப்புச்சுவை மிக்க விதைகள்: வேப்பங்கொட்டை, எட்டிக்கொட்டை.

இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

பூச்சித் தாக்குதல் தொடக்க நிலையில் இருந்தால் ஒன்று முதல் இரண்டு சதவீதத் தாவரச்சாறு கரைசலைப் பயன்படுத்தலாம். மாறாகப் பூச்சியின் தாக்குதல் அதிகமாகக் காணப்பட்டால் மூன்று முதல் ஐந்து சதவீத தாவரச்சாறு கரைசலைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சதவீத தாவரச்சாறு கரைசலைத் தயாரிக்க ஒன்று அல்லது பல மூலிகைச் செடிகளின் சாற்றைச் சம அளவு எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மூலிகைச் செடியின் தாவரப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. தொடர்ந்து ஒரே வகை தாவரச் சாற்றைப் பயன்படுத்தினால் அந்தக் குறிப்பிட்ட தாவரச் சாற்றுக்குப் பூச்சிகள் எதிர்ப்புத் திறமையை பெற்றுவிடும். மூலிகை பூச்சிக்கொல்லிகளைக் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

அவ்வாறு பயன்படுத்தினால் சுற்றுச்சூழலில் உள்ள பூச்சிகளின் இயற்கை எதிரிகளையும் அழித்து விடலாம். பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் 2 முதல் 3 முறை இவற்றைப் பயன்படுத்தலாம். பூச்சித் தாக்குதல் தொடக்க நிலையில் இருக்கும்போது அல்லது பயிர்களுக்கு முதல்முறையாகத் தெளிக்கும்போது பயிர்கள் முழுவதும் நனையும்படி நன்கு தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்கள்

தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x