சேதி தெரியுமா? - 11/08/2015

சேதி தெரியுமா? - 11/08/2015
Updated on
2 min read

அமலுக்கு வந்த ஒப்பந்தம்

இந்தியா-வங்கதேசம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நில எல்லை ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி 7,110 ஏக்கரை உள்ளடக்கிய 51 நிலத்திட்டுகளை இந்தியாவிடம் அளித்துவிட்டு, 17,160 ஏக்கரை உள்ளடக்கிய 111 நிலத்திட்டுகளை வங்கதேசம் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒப்பந்தம் இப்போது நடைமுறைக்கு வந்தது. வங்கதேசம் உருவானபோது இரு நாடுகளுக்கும் இடையிலான நில எல்லை, சர்ச்சைக்கிடமான வகையில் பிரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் அமலானதால் உலகின் மிகப் பெரிய எல்லைப் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

சசிபெருமாளின் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலை பகுதியில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆகஸ்ட் 31 அன்று போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென மரணமடைந்தார். செல்போன் கோபுரத்தில் 5 மணி நேரம் நின்றுகொண்டு டாஸ்மாக் கடையை மூடக் கோரி வலியுறுத்திய சசிபெருமாள் போராட்டக் களத்திலேயே மயக்கமடைந்தார். அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஆனால், அவர் முன்பே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தார்கள். சசிபெருமாள் மரணத்தையடுத்து மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற போராட்டங்கள் சூடுபிடித்தன. மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

கலாம் பெயரில் விருது

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் 1 அன்று அறிவித்தார். மறைந்த அப்துல் கலாம் நினைவைப் போற்றும் விதமாக ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது’ என்ற விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகியவற்றுக்குப் பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும். இந்த விருது பெறுபவருக்கு 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

புதிய தொடக்கம்

மத்திய அரசுக்கும் நாகாலாந்து போராட்டக் குழுவான நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கு இடையே டெல்லியில் ஆகஸ்ட் 2 அன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாகாலாந்தில் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்திப் பல ஆண்டுகளாக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் நாச வேலைகளில் ஈடுபட்டுவருகின்றன. அந்த அமைப்புகளோடு மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவந்தது. அதன் தொடர்ச்சியாக தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து என்ற அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் துனின்காலெங் மூவா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள்

மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் 25 எம்.பி.க்களை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து ஆகஸ்ட் 2 அன்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சுமித்ரா மகாஜன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மக்களவைத் தலைவரின் இந்த நடவடிக்கை ‘ஜனநாயகத்துக்குக் கருப்பு தினம்’ என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இந்த இடைநீக்கத்துக்கு எதிராக ஒன்பது கட்சிகள் 5 நாட்களுக்கு அவையைப் புறக்கணித்தன. லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவைப் பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முடக்கிவந்தன.

அம்பலமானது பாகிஸ்தான் சதி

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டு ஏவப்பட்டது என்று பாகிஸ்தான் தேசியப் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் தாரிக் கோசா ஆகஸ்ட் 4 அன்று புதிய தகவல்களை வெளிட்டார். தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மற்றும் லஷ்கர் –இ- தொய்பா தீவிரவாதிகளுக்கு சிந்து மாநிலத்தின் தாட்டா என்ற இடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கிருந்து கடல் மார்க்கமாக அவர்கள் ஏவப்பட்டனர் என்று அந்த முன்னாள் அதிகாரி தெரிவித்தார். கராச்சியில் இருந்து கட்டுப்பாட்டு அறை மூலம் தாக்குதல் வழிநடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கான சதியை இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றங்களில் நிரூபிப்பது சிக்கலானது. எனவே இரு நாடுகளின் சட்ட நிபுணர்களும் அமர்ந்து பேச வேண்டும் என்றும் தாரிக் கோசா யோசனை கூறியிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in