Published : 05 Mar 2020 08:35 AM
Last Updated : 05 Mar 2020 08:35 AM

அகத்தைத் தேடி 22: நாயனாவின் கடவுள்

தஞ்சாவூர்க்கவிராயர்

தமிழக ஆன்மிக வராலாற்றில் பெரிய வேத விற்பன்னரும் தவசிரேஷ்டருமாகிய காவ்ய கண்ட கணபதி முனிவரை ‘நாயனா’ என்றே பக்தர்கள் அழைத்தனர். இதைத் தொடங்கி வைத்தவர் பகவான் ரமணர். ‘நாயனா’ என்று அவர் அழைப்பதைக்கண்டு எல்லோருமே கணபதி முனிவரை ‘நாயனா’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவரது வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் எழுதியவர் அந்நூலுக்கு ‘நாயனா’ என்றே தலைப்பிட்டார்.

இருநூறு வருடங்களுக்கு முன்னர் கும்பகோணத்தின் அருகில் உள்ள வலங்கைமானில் இருந்து ஒரு குடும்பம் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது. அக்குடும்பத்தினர் ஜோதிடம், ஆயுர்வேதம், வேதங்கள் ஆகியவற்றில் வல்லவர்களாக இருந்தனர்.

நீண்டநாட்களாக குழந்தைப் பேறின்றி பிறந்த குழந்தைக்கு அறிவுக்கடவுளான கணபதி என்ற பெயரையே சூட்டினார்கள். குழந்தையோ எது கொடுத்தாலும் சாப்பிட மறுத்தது.

பலவீனமாகவும் இருந்தது. ஆறுவயதுவரை பேச்சும் வரவில்லை. திடீரென்று குழந்தை பேச ஆரம்பித்தது. தங்குதடையின்றி அதுபேசிய அழகு பிரமிக்க வைத்தது. பத்து வயதுக்குள்ளாகவே ஜோதிடத்திலும், கணிதத்திலும் புலமை பெற்ற அதிசயக் குழந்தையாக மாறியது.

காளிதாசனின் படைப்புகளையும் ஏனைய வடமொழிக் காவியங்களையும் படித்ததோடு நின்றுவிடாமல் அதேபோன்று கவிதைகளையும் இயற்றத் தொடங்கியது.

வீட்டைத்துறந்தார்

பதினெட்டு வயதில் கணபதிக்கு, விசாலாட்சியை திருமணம் பண்ணிவைத்தார்கள். விசாலாட்சியும் இறைநாட்டம் மிகுந்தவள். கணபதியின் தேடல் அவருக்குப் புரிந்தது. ஒருநாள் கணபதி வீட்டைவிட்டு தேசாந்திரியாகப் புறப்பட்டுவிட்டார். விசாலாட்சி முகத்திலும் முறுவல். அவரும் மோனத் தவத்தில் மூழ்கிப்போனார்.

கணபதி முனிவரின் தேடல் நிற்கவே இல்லை. நதிதீரங்கள், ஆலயங்கள் எங்கு கண்டாலும் அங்கே தியானத்தில் அமர்ந்துவிடுவார்.

ஒரு முறை கணபதி முனிவருக்கு, காசிக்குச் செல்ல பணம் தேவைப்பட்டது. வடநாட்டில் கர்க்வால் சமஸ்தான மன்னரிடம் சதுரங்க ஆட்டத்தில் வல்லவர்களான எட்டு தலை சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தனர். இந்த எட்டு ஆட்டக்காரர்களையும் ஒரே சமயத்தில் சதுரங்கம் ஆடி, அவர்களை வென்றார் கணபதி முனிவர். அரசன் தட்டு நிறைய பொற்காசுகளைக் குவித்து கணபதி முனிவர் முன்பு நீட்டினான்.

அதிலிருந்து பயணத்துக்குத் தேவையான ஒரே ஒரு காசு மட்டும் எடுத்துக் கொண்டு காசிக்குப் பயணமானார் கணபதி. அங்கு கடுந்தவம் புரிந்தார். அவர்தம் சொந்த ஊரான கலுவராயிக்கு வருமுன்னரே அவர்பெற்ற புகழ் அங்கு சென்றுவிட்டது.

காசியில் சுத்தமான வடமொழிச் சுலோகங்களைச் சொல்லி பிச்சை கேட்கும் அந்த இளைஞனைப் பண்டிதர்கள் பார்த்து வியந்தனர். பண்டிதர்கள் என்ன கேட்டாலும் பதிலாக, அந்தக்கணமே நின்றபடி வடமொழியில் ஒரு செய்யுள் இயற்றி தந்துவிட்டு நகர்வார் கணபதி.

காசி நகரத்துப் பண்டிதர்கள் அவர் புலமையைக் கண்டு வங்காளத்தில் நடைபெறும் ஒரு பெரும் சபைக்கு தத்துவச் சொற்போரில் கலந்துகொள்ள தங்கள் செலவில் அனுப்பிவைத்தனர். கணபதியோடு சொற்போர் நிகழ்த்த முன்வந்தவர் அம்பிகாதத்தர் என்ற பெரும் வடமொழிப் பண்டிதர்.

இருவரும் செய்யுள் வடிவில் சொற்போர் புரிந்தனர். காண்பதற்கு எளியோராகவும் இளைஞராகவும் இருந்த கணபதி வென்றார். அம்பிகா தத்தர் கணபதியை ஆரத்தழுவி ‘காவ்ய கண்டர்’ என்ற பட்டத்தைச் சூட்டினார். தொண்டையில் காவியத்தையே வைத்திருப்பவர் என்பது இதற்குப் பொருள்.

அரண்மனை வேண்டாம்!

மனைவி, தந்தையின் மருத்துவம் என்று மறுபடி இல்லற வாழ்வில் ஈடுபட்டார் கணபதி முனிவர். அரசரிடமிருந்து அரசவையில் இடம்பெற அழைப்பு வந்தது. அதை மறுத்துவிட்டார். தந்தையாரைத் தன் மருத்துவத்தால் குணப்படுத்திவிட்டு அரசரின் அழைப்பை ஏற்று அரண்மனைப் பண்டிதர் ஆனார். ஆனால் விசாலாட்சிக்கு அரண்மனை வாசம் பிடிக்கவில்லை. எளிய கிராமத்து வாழ்க்கையை நாடி தன் தாய் வீட்டிற்கே சென்றுவிட்டார். ஆந்திராவைச் சேர்ந்த சமஸ்தான மன்னர்கள் பலரும் கணபதி முனிவரின் கவிபாடும் ஆற்றலால் கவரப்பட்டு அவரை வணங்கி வரவேற்றனர்.

திருவண்ணாமலை என்றொரு பெயர்

சிறிது காலம் சென்றபின் மன்னர்களை அண்டி வாழ்வதில் மனமின்றி காஞ்சிபுரம் வந்தார். அங்கு யாரோ திருவண்ணாமலை என்று சொன்னது காதில் விழுந்தது. திருவண்ணாமலை சென்று அருணாசலேஸ்வர் முன்பு சிலைபோல் நின்றார்.

நாயனா ஆன முனிவர்

திருவண்ணாமலையில் பகவான் ரமணரைத் தேடிச் சென்று அவரே சரண் என்று அடிபணிந்தார். இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து எத்தனையோ ரிஷிகளைக் கண்டு இறையனுபவம் பெற்றிருந்தாலும் ரமணரிடம் பெற்ற அனுபவத்துக்கு அவை ஈடு இணை ஆகாது என்று உணர்ந்தார்.அதனாலேயே பிராமணசுவாமி என்று அழைக்கப்பட்ட ரமணருக்கு பகவான் ரமணமகரிஷி என்று பெயர் சூட்டினார்.

ரமணரும் கணபதி முனியை நாயனா என்று அன்போடு அழைத்தார். நாயனா, அருணாசலேஸ்வரரைப் புகழ்ந்து ஆயிரம் பாடல்கள் புனைந்தார். ரமணரின் உபதேசங்களை விவரிக்கும் ரமண கீதையை இயற்றினார். இந்து சமய நூல்களில் இடம் பெற்றிருந்த பிற்போக்கு சிந்தனைகள், இடைச் செருகல்கள் என்று எடுத்துரைத்தார். துறவறம் மேற்கொள்ள இல்லறத்தைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினார்.

புரட்சிச் சிந்தனைகள்!

தேவையற்ற மதச் சடங்குகளை நாயனா சாடினார். பெண்கள் தவத்திற்கு உரியவர்கள் அல்ல என்பது பிற்போக்கான கருத்து என்பதை பிரகடனமாகவே வெளியிட்டார். தவத்தில் மூழ்கி தன்னை மறக்காது நாட்டு நிலவரங்களையும் கவலையோடு கவனித்தார். தீண்டாமையை எதிர்த்து கண்டனக்குரல் கொடுத்தார். சனாதனவாதிகளால் கணபதி முனியின் கருத்துக்களைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு தனிப்பட்ட கூட்டத்தின் விருப்பு வெறுப்புகள் சமுதாயச் சட்டமாக மாறக்கூடாது என்றார். தீண்டாமையை எதிர்த்து தனது ஆன்மிக் கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள்அச்சிடப்பட்டும் துண்டுப் பிரசுரங்களாக உலா வந்தன. அரசியல் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க தயங்கவில்லை.1923-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

நாயனாவின் உரையில்பெண்களுக்கு சொத்துரிமை, வேலை உரிமை, வேதம் பயிலும் உரிமை, ஹோமம் நடத்தும் உரிமை என்றெல்லாம் இதுகாறும் பறிக்கப்பட்டிருந்த உரிமைகளை மீண்டும் அளிக்கவேண்டும் என்ற அவர் கருத்து பெரிய சலசலப்பையே உண்டுபண்ணியது. ஆந்திர காங்கிரஸ் அவரை அரசியல் தலைமை ஏற்குமாறு அழைத்தது. அதை ஏற்க மறுத்தாலும் தமிழக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டார். காந்திஜி, பண்டித மோகன் மாளவியா, டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர் நாயனாவின் சொல்லாற்றல் கண்டு வியந்து புகழ்ந்தனர்.

நாயனாவின் கடவுள்

ஆன்மிகத்தில் துளிர்த்து, ஞானத்தில் தோய்ந்து தவத்தில் மலர்ந்து, சமுதாயச் சீரத்திருத்தத்தில் ஈடுபட்டு செய்த தவத்தை எல்லாம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் நாயனா.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x