Published : 04 Mar 2020 09:36 AM
Last Updated : 04 Mar 2020 09:36 AM

உச்சிமலையில் ஒளிரும் ரத்தினம்

கொ.மா.கோ. இளங்கோ

செண்பகக் காட்டை ஒட்டிய மலைப் பகுதியில் அரிய மூலிகைகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. மாணவர்கள் மலையைச் சுற்றிப் பார்க்கச் செல்வது வழக்கம்.

பள்ளித் தோழிகளுடன் மலைக்குச் சென்றாள் ஜிமா. மலையேற்றப் பயிற்சி புதுமையாகவும் சாகசம் நிறைந்ததாகவும் இருந்தது. மலையுச்சியிலிருந்து விழும் அருவிகள், தூரத்திலிருந்து பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.

ஏலத் தோட்டத்தை அடைந்தபோது பலரும் களைத்திருந்தனர். அதனால் ஓய்வெடுக்க விரும்பினர். ஆனால், ஜிமாவும் சாபிராவும் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். டிப்பி ரோபோவை எடுத்துக்கொண்டாள் ஜிமா.

அவர்களுடன் வழிகாட்டியாக வந்தார் வேலன் மாமா. உச்சிமலையில் சில இடங்கள் சமதளமாக இருந்தன. முட்டைக்கோஸ், அன்னாசி, காலிஃப்ளாவர், மிளகு போன்றவற்றைப் பயிரிட்டிருந்தனர். ஒவ்வொன்றையும் படம் பிடித்துக்கொண்டாள் ஜிமா.

அவர்கள் ‘மிளாப்பாறை’ பகுதியைக் கடந்தபோது திடீரென்று ‘கின்ங்…கின்ங்’ என்ற எச்சரிக்கை ஒலி கேட்டது. எல்லோரையும் திடுக்கிட வைத்தது. ஜிமா பையிலிருந்த டிப்பியை வெளியே எடுத்தாள்.

“ஜிமா, இங்கிருந்து சுமார் ஐநூறு மீட்டர் தூரத்தில் ஒரு யானை சுற்றிக்கொண்டிருக்கிறது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இடது பக்கம் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்தது டிப்பி.

வேலன் மாமா மூக்கால் மோப்பம் பிடித்தார். யானை லத்தி அருகில் இருக்கிறதா என்று சோதித்தார். ”எனக்கு ஒண்ணும் தெரியலையே, டிப்பி எப்படிச் சொல்லுது?” என்று கேட்டார்.

“அதையும் டிப்பியிடமே கேட்கலாம்” என்று ஜிமா சொன்னவுடன், “குறிஞ்சி ரேடார் காட்டு விலங்குகளைக் கண்காணித்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அடர்ந்த காட்டுக்குள் விலங்குகள் நடந்தால்கூட அது கண்டுபிடித்து தகவலை அனுப்பி வைத்துவிடும்.”

டிப்பி சொன்ன அறிவுரையை ஏற்று, மாற்று வழியில் திரும்பி நடந்தார்கள். தரையில் கால் பதியாதபடி துள்ளி ஓடிய மான்களைப் பார்த்து வியந்தாள் சாபிரா.

ஏலக்காய் மூட்டையை முதுகில் ஏற்றிக்கொண்டு ஒருவர் வந்தார்.

“கொழந்தைகளா, இருட்டு நேரத்தில் வடக்குப் பாதையில் போக வேணாம். நாகம் ரத்தினம் கக்கிக்கிட்டிருக்கும். கிழக்குப் பாதையில் போயிருங்க” என்று எச்சரித்தார்.

ஜிமாவுக்கும் சாபிராவுக்கும் ரத்தினத்தைப் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால், வேலன் மாமா ஒப்புக்கொள்ளவில்லை. மூவரும் தங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

“நாகம் ரத்தினம் கக்கும் என்பதெல்லாம் கதை” என்றாள் ஜிமா.

“ஆமாம். நானும் படித்திருக்கேன். பகல் நேரத்தில் போய்ப் பார்த்துட்டு வந்துடலாம்” என்றாள் சாபிரா.

மறுநாள் உதவியாளர் ஒருவரை அழைத்துக்கொண்டு நாகம் ரத்தினம் கக்கிய இடத்துக்கு இருவரும் சென்றார்கள்.

அந்தப் பகுதி அடர்த்தியான மரங்களால் சூழப்பட்டிருந்தது. சூரிய வெளிச்சம் சிறிதும் வராததால் பகலிலேயே இரவு போல் காட்சியளித்தது.

சற்றுத் தொலைவில் ஒரு பெரிய மரம் விழுந்து கிடந்தது. அதன் மீது மஞ்சளும் பச்சையுமாக ஏதோ மின்னிக்கொண்டிருந்தன.

“நாகம் ரத்தினம் கக்குவது உண்மைதான் போல! என்னமா ஜொலிக்குது!” என்றாள் சாபிரா.

அருகில் சென்ற ஜிமாவை உதவியாளர் தடுத்தார். தூரத்திலிருந்தே கேமராவில் படம் எடுத்தாள். அப்போது சில ரத்தினக் கற்கள் துள்ளிக் குதித்தன. பயந்து பின்வாங்கினார்கள் ஜிமாவும் சாபிராவும்.

“பயப்படாதீங்க. அது தவளைதான். அது மேல ரத்தினக்கல் விழுந்திருக்கும்போல” என்றார் உதவியாளர்.

மூவரும் திரும்பி நடந்தனர். “நாகம் எப்படி ரத்தினம் கக்கும்?” என்று கேட்டாள் ஜிமா.

“டிப்பிதான் இருக்கே. அதுகிட்ட கேட்டுப் பார்க்கலாமே?”

“மறந்துட்டேன். டிப்பி, நாகம் ரத்தினம் கக்குமா?.”

“நாகம் உணவைத்தான் கக்கும். ரத்தினத்தைக் கக்காது. இப்ப நீங்க பார்த்ததாகச் சொல்லும் ரத்தினக்கற்கள், கற்கள் அல்ல. மட்கிப் போன மரங்களில் இருந்து பூஞ்சைகள் வளர்ந்துள்ளன. இந்தப் பூஞ்சைகள் ஒளிரக்கூடியவை. இந்தியாவில் மேற்குத் தொடச்சி மலைகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன.

இவற்றுக்கு ஃபாக்ஸ்ஃபையர் (Foxfire) என்று பெயர். பெயர் இப்படி இருந்தாலும் நரிக்கும் நெருப்புக்கும் பூஞ்சைக்கும் தொடர்பில்லை. இந்தப் பூஞ்சைகளின் ஒளி குளிர்ச்சியாக இருக்கும்” என்று சொல்லி முடித்தது டிப்பி.

“ஓ... அப்படியா! அழகாக விளக்கம் தந்தே டிப்பி. நன்றி” என்றாள் ஜிமா.

“இது என் கடமை” என்று அமைதியானது டிப்பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x