Published : 03 Mar 2020 09:35 AM
Last Updated : 03 Mar 2020 09:35 AM

விசில் போடு 21: வாயை மூடி பேசவும்!

‘தோட்டா’ ஜெகன்

நாட்டுல மக்கள் மூச்சுவிடாமகூட வாழ்த்திடுவாங்க. ஆனா, வாயில இருந்து பேச்சு இல்லாம வாழமாட்டாங்க. பல வகையான பலகாரங்கள் பரிமாறப்பட்ட விருந்தில் வெறும் வெள்ளை சோறை மட்டும் தின்பதை போலத்தான் பேச்சில்லாமல் வாழ்வது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் நிகழ்வுகளும் நினைவுகளும் பேச்சினால்தான் கோக்கப்படுகிறது. ஒருவனது தரமும் குணமும் அவனது பேச்சுக்களால்தான் பார்க்கப்படுகிறது.

பிறந்து சில வருடங்களில் வார்த்தைகளை மென்று விழுங்கி பேச ஆரம்பிக்கும் நமது பிறவிப் பயணம், வாழ்க்கையின் இறுதி நாட்களில் அதேபோல பேச முடியாமல் வார்த்தைகளை மென்று முழுங்கி சொற்கள் அறுந்து முடிந்தும் போகிறது. சொற்கள் வெறும் சொற்கள் அல்ல, அவை சிந்தினால் அள்ள முடியாத மாணிக்கக் கற்கள்.

வக்கணையான சிறப்பு

சிலரோட பேச்சு நம்மைக் கட்டிப்போடும். சிலரோட பேச்சு நம்மை வெட்டிப்போடும். சிலருடைய பேச்சைக் கேட்டால் நமக்கே சுத்திபோட தோணும். சில பேரு பேசுறாங்கன்னு தெரிஞ்சா நாலு தெரு சுத்தி போகத் தோணும். பேசுவதும் பேச்சாற்றலும் ஒரு கலை. தங்களது பேச்சால் வாழ்க்கையில் முன்னேறி தங்கள் வாழ்க்கையைப் பூங்காவனமாய் மாற்றி வாழ்ந்தவர்களும் இருக்காங்க. அதே பேச்சால, நல்லா இருந்த வாழ்க்கையைப் பாலைவனமாக்கி தரம் தாழ்ந்து வீழ்ந்தவர்களும் இருக்காங்க.

தமிழர்களைப் பொறுத்தவரை பேச்சு என்பது பிறப்புரிமை மட்டுமல்ல, வாய்க்கு நல்ல வக்கணையான சிறப்புரிமையும்கூட. சூரியனைக்கூட நேருக்கு நேராய் நோக்கி கண் கூசாமல்கூட நிற்பான். ஆனால், நொடி நேரம்கூட பேசாமல் இருக்க மாட்டான் தமிழன். தமிழகத்தில் மட்டும்தான் பேசிபேசியே ஆட்சியைப் பிடிக்க முடியும்.

பட்டிமன்றம் கேட்கப் போயிட்டு, மேடைல யாராவது பேசிக்கிட்டு இருந்தாலும் நம்மாளுங்க கீழ உட்கார்ந்து பேசிக்கிட்டுதான் இருப்பாங்க. அட, பாடையில ஒருத்தர் படுத்துக்கிடந்தாலும் நம்மாளுங்க பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டுதான் இருப்பாங்க. ஆடு மேய்க்கப் போயிட்டு, பேச ஆளு இல்லன்னு ஆட்டைக் கூப்பிட்டு, அரசியல்வாதிங்க பண்ணுன கூத்தை கேளுன்னு அரசியல் பேசுற அப்புச்சிங்க எல்லாம் இன்னமும் இந்த மண்ணுல சும்மா கின்னுன்னுதான் இருக்காங்க.

வாய் என்ற வெப்பன்

இசையின் மகத்துவம் அதற்கு முன்னாலும் பின்னாலும் வரும் மௌனத்தில் இருக்கிறது என்பார்கள். அது போல் பேச்சின் மகத்துவமும் நாம் சொல்லும் சொல்லுக்கு முன்பின் இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்தே இருக்கிறது. பேச்சினால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

சில சமயம் பேசாமல் இருந்தாலே பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். பிரச்சினைகளை முடிப்பதுபோல் நமது பேச்சு இருக்க வேண்டுமே தவிர, புதிதாகப் பிரச்சினைகளை உருவாக்குவதுபோல இருக்கக் கூடாது. நம்மாளுங்கப் பஞ்சாயத்து பேசுறேன்னு, சும்மா கத்திக்கிட்டு இருந்தவனுங்கள கடைசியில கத்தில குத்திக்கிட்டு சாக வச்சுடுவானுங்க.

எதைப் பேசணும், எப்போ பேசணும், எப்படி பேசணும் என்பதையெல்லாம் அடுத்தவர் அனுபவத்தி லிருந்து கற்றுக்கொள்பவனே அறிவாளி. உதாரணமாக, பேசித்தான் பாடம் நடத்த முடியும். ஆனால், பாடம் நடத்தும்போது பேசக்கூடாது. சினிமா தியேட்டரில் நூறு பேர் ஆர்வமா படம் பார்க்கும்போதுதான் நம்மாளுங்க, அடுத்து என்ன நடக்கும்னு சீனை சொல்லி, வாய்ங்கிற வெப்பன்னால படத்தோட சஸ்பென்ஸை உடைப்பாங்க.

பேச்சுக்கு ஜி.எஸ்.டி.

இந்தியாவுல எல்லா போர்டுகளுக்கும் ஜி.எஸ்.டிய எடுத்துட்டு அட்வைஸ்க்கு மட்டும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. போட்டா போதும், அதைவிட அதிக வருமானம் வந்துசேரும். சில பேருக்கு நாம தர அறிவுரை என்பது ஊக்கப்படுத்தற மாதிரி இருக்கணுமே தவிர, ஒப்பிடுறேன்னு பேசி அவங்களை ஏக்கப்படுத்துற மாதிரி இருந்திடக் கூடாது.

நாம பேசுற பேச்சு அடுத்தவங்களை உற்சாகமாக்கி சிறகடிச்சு பறக்க வைக்கணுமே தவிர, அவங்க சிறகை ஒடிச்சு உட்காரவைக்கக் கூடாது. நல்லா கவனிச்சு பார்த்தா, நாம பேசுறதுல பாதி அடுத்தனை பத்திதான் இருக்கும், இல்லைன்னா நம்மளை பற்றிதான் இருக்கும். நாம பேசுற பேச்சு அடுத்தவங்க இதயத்துல இறக்கைபோல இறங்கணுமே தவிர, காய்ஞ்ச விறகைபோல இறங்க கூடாது.

தினம் நாம பேசுற பேச்சுல எத்தனை தடவை சத்தியம் பண்றோம்னு எண்ணுனா கை விரலோடு கால் விரலையும் உதவிக்கு கூப்பிடனும். நல்ல உணவை சாப்பிடுறவனுக்கு எதுக்கு பத்தியம்? உண்மையா மட்டுமே பேசுறவனுக்கு எதுக்கு சத்தியம்? பேசுற விதங்களில்கூட பல வகைகள்.

ஒருத்தரு பேசுறது பதினெட்டுபட்டி தாண்டி இருக்கிற பள்ளபட்டிலகூட கேட்கும். இன்னொருத்தரோ, நாக்குல நாலு டன் இரும்பை வச்ச மாதிரி, அவரு காதுக்கே கேட்காத மாதிரி பேசுவாரு. மூச்சு விடாம பேசுறவங்க எல்லாம் ஊருக்குள்ள இருக்காங்க, கருங்கல் குவாரில இருந்து எடுத்த கல்லுங்களைவிட, வயக்காட்டுல இருந்து எடுத்த நெல்லைவிட, இவங்க வாயில இருந்து எடுக்கப்பட்ட சொல்லுங்க அதிகம்.

புடவை புழியுறாங்க

பல பேருதான் பேசுறதை மட்டுமே நியாயப்படுத்தி பேசுவாங்க, சில பேரு அடுத்தவங்களைக் காயப்படுத்தணும்னே பேசுவாங்க. சில பேரு தேவையில்லாம பேசுவாங்க. சில பேரு தங்களுக்குத் தேவைன்னா மட்டும் பேசுவாங்க. பல பேரு வந்தாலே தொணதொணன்னு பேசி, குரூடு ஆயில் கைல கொட்டுனா எப்படி வழவழன்னு இருக்கோ அது மாதிரி நம்மளை வார்த்தைகளாலேயே ஃபீல் பண்ண வச்சுடுவாங்க. லைஃப் இன்சூரன்ஸ்க்கு மார்க்கெட்டிங் பண்ண வராருன்னு தெரிஞ்சு, அவருகிட்ட இருந்து தப்பிக்க மாடில இருந்து குதிச்சு லைஃப்பை விட்டவனெல்லாம் இருக்கான்.

லவ்வருக்கிட்ட பேசக்கூட பல பசங்களுக்குத் தெரியல. பேசி வெட்கப்பட வைக்கிறதை விட்டுட்டு, கண்டதை பேசி அந்தப் பொண்ண துக்கப்பட வச்சு, கடைசில இவங்க பேசுனதுக்கு வெட்கபட்டுக்கிட்டு இருக்காங்க. இதுல காதலிக்கிறப்ப பேசுபேசுன்னு போன்ல வழிஞ்ச பசங்க, கல்யாணத்துக்கு பிறகு ரொம்பப் பேசுறா மச்சான்னு புடவையப் புழியுறாங்க.

சிலர் இருக்காங்க, விஜய் டிவிக்கிட்ட சிக்குன்னு புது படம் டிவிடி மாதிரி திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்வாங்க. புதன்கிழமை பறித்த பூசணிக்காயைப் பத்தி பொழுதுக்கும் பேசினா மட்டும் வெள்ளிக்கிழமை விடியறப்ப அது வெள்ளரிக்காயாவா மாறிடவாபோகுது?

ஒரு முறை பேச இருமுறை யோசின்னு பெரியவங்க சொல்வாங்க. ஆனா நாம எதையுமே யோசிக்காமத்தான் தலைமுறை தலைமுறையா பேசிக்கிட்டு இருக்கோம். பேசறதுக்கு முன்னால யோசிக்கலாம், சில சமயம் பேசிட்டுகூட யோசிக்கலாம், ஆனா, யோசிக்கிறதையெல்லாம் பேசிடக் கூடாது. எங்க பேசணுமோ அங்க பேசாதவன் தோல்வியடையுறான், எங்க பேசக் கூடாதோ அங்க பேசுறவனும் தோல்வியடையுறான்.

பேசத் தெரியாதவனுக்குப் பிரச்சினை தரையில தவழ்ந்து வந்தா, ரொம்ப பேசுறவனுக்கு வானத்துல பறந்து வருது. விடும்வரைதான் வார்த்தைக்கு மதிப்பு. வார்த்தையை விட்டுட்டோம்ன்னா அதுக்கு நாமதான் பொறுப்புன்னு புரிஞ்சு பேசினாலே போதும், எந்நாளும் நம்ம வாழ்க்கை ரொம்ப சிறப்பு.

(சத்தம் கேட்கும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x