Published : 02 Mar 2020 09:50 AM
Last Updated : 02 Mar 2020 09:50 AM

நவீனத்தின் நாயகன் 16 - X.COM வெளியே போ!

எஸ்.எல்.வி. மூர்த்தி, slvmoorthy@gmail.com

பிசினஸுக்குப் பலமான அடித்தளம் போட்டுவிட்டோம் என்று மணவாழ்க்கையில் இறங்கிய ஈலானுக்கு வந்தது ஒரு பூகம்ப அதிர்ச்சி. “கன்ஃபினிட்டி” (Confinity) என்னும் போட்டிக் கம்பெனி. பீட்டர் தீல்(Peter Thiel), மாக்ஸ் லெவிச்சின் (Max Levichin)ஆகிய இருவர். தீல் ஜெர்மனியில் பிறந்தார். ஈலான் போலவே, சிறுவயதில் தென்னாப்பிரிக்காவில் வளர்ந்தார். ஆறாம் வயதில் பெற்றோரோடு அமெரிக்கா வந்தார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் தத்துவமும், சட்டமும் படித்தார். மாக்ஸ் லெவிச்சின், உக்ரைன் நாட்டில் பிறந்தார். பதினாறாம் வயதில் அமெரிக்கா வந்தார். அர்பானாஷாம்பேன் (Urbana Champaign) என்னும் இடத்தில் இருக்கும் இல்லினாஸ் (Illinois) பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றார். இருவரும் இணைந்து கன்ஃபினிட்டி கம்பெனி தொடங்கினார்கள். அப்போது பிரபலமாக இருந்த “பாம் பைலட்” (Palm Pilot) என்னும் கைகளில் வைத்துக்கொள்ளும் சிறிய கம்ப்யூட்டர் வழியாகத் தனிமனிதர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் வசதியை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். பணப் பரிவர்த்தனையில் மட்டுமே குறி வைத்திருந்தார்கள். இன்டர்நெட் வங்கித் தொழிலில் அவர்கள் இல்லை.

ஏலம் விடும்போது நடக்கும் சண்டைபோல் X.com, கன்ஃபினிட்டி இருவருக்குமிடையே தொடங்கியது அன்பளிப்புப் போர். X.com புதிய கஸ்டமர்களுக்கு 20 டாலர்கள் தந்ததால், கன்ஃபினிட்டி 30 டாலர்கள் தந்தார்கள். X.com 30 டாலர்களாக உயர்த்தினார்கள். கன்ஃபினிட்டி 40 டாலர்களாக்கினார்கள். இருவர் மூலதனமும் கரைந்துகொண்டே வந்தது. ஈலானிடம் முதல்கம்பெனியான ஜிப் 2 – வை விற்ற மில்லியன்கள் இருந்தன. இத்தோடு, முதல் வெற்றியால், பணத்தை கொட்டக் காத்திருக்கும் துணிகர முதலீட்டாளர்கள். கன்ஃபினிட்டி-யிடம் பணத் தட்டுப்பாடு. ஈலான் போட்டியை எடை போட்டார். இந்த நிலை தொடர்ந்தால், இரண்டு கம்பெனிகளின் ஆட்டமும் க்ளோஸ். மாறாக, கம்ப்யூட்டர் திறமைசாலிகள் நிறைந்த கன்ஃபினிட்டியும், பணபலம் கொண்ட X.com– மும் சேர்ந்தால், “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” ஆக்‌ஷன் ஸ்டார்ட். நிதி ஆலோசகர்கள் மூலமாக நடந்தது ஈலான், தீல், லெவிச்சின் சந்திப்பு; இணைந்தார்கள். புதிய கம்பெனியின் பெயர் X.com. பணபலத்தால், பெரும்பாலான பங்குகள் ஈலானிடம். “டாயிஷ் வங்கி” (Deutsche Bank), “கோல்ட்மேன் ஸாக்ஸ்” (Goldman Sachs) ஆகிய துணிகர முதலீட்டாளர்களைத் தொடர்பு கொண்டார். கேட்டவுடனேயே வந்து கொட்டியது 100 மில்லியன் டாலர்கள். இரண்டே மாதங்களில் 10 லட்சம் கஸ்டமர்கள். வசந்தம் வந்தது என்று தீலும், லெவிச்சினும் மகிழ்ச்சியின் உச்சியில். சில மாதங்கள் தான் இந்த ஆனந்தப் பயணம். வந்தன, கம்பெனியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் சுனாமிப் பிரச்சினைகள். தான் விடுப்பு எடுத்தால், தீலும், லெவிச்சினும் என்ன செய்வார்களோ என்னும் பாதுகாப்பின்மை. ஈலான் தேனிலவு போகும் திட்டத்தைத் தள்ளிப்போட்டார்.

ஈலான் ஒரு முரட்டுக் குதிரை. பிறரோடு பழகும்கலையின் அரிச்சுவடி கூட அறியாதவராக இருந்தார். தான் சொல்லுவது மட்டுமே சரி என்னும் முரட்டுப் பிடிவாதம்.

தீல், லெவிச்சின் ஆகியோரோடு தினமும் சில்லறை சமாச்சாரங்களுக்கெல்லாம் தகராறுகள். கம்ப்யூட்டர்களில் லினக்ஸ் (Linux), வின்டோஸ் (Windows) என்னும் இரு ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள்* (Operating System). லினக்ஸ் இலவசமாகக் கிடைத்தது. இதில் யாருடைய அனுமதியுமின்றி, எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி விரும்பிய மாற்றங்கள் செய்யலாம். நகலெடுத்துப் பகிர்ந்துகொள்ளலாம். விண்டோஸ், மைக்ரோசாஃப்ட் கம்பெனியிடம் விலை கொடுத்து வாங்க வேண்டும். எந்த மாற்றமும் செய்ய முடியாது. பகிர்ந்துகொள்ளவும் முடியாது.

* கம்ப்யூட்டரில் ஹார்ட்வேரும் (பாகங்கள்) சாஃப்ட்வேரும் இணந்து செயல்பட வேண்டும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னும் இயக்கமுறைமை இயங்கு தளம் மூலம்தான் இது சாத்தியமாகிறது.

ஈலான், விண்டோஸ் பக்கம். அதன் உற்பத்தித் திறன் அதிகம், வேலையை விரைவாக முடிக்க உதவும் என்பது அவர் வாதம். தீல், லெவிச்சின் இருவரும் லினக்ஸ் கட்சி. இந்தக் கருத்து வேறுபாடுகளால் இடைவெளி அதிகமானது. தீல் கம்பெனியிலிருந்து ராஜினாமா செய்தார். லெவிச்சின் கம்பெனி செயல்பாட்டில் அக்கறை காட்டாமல் விட்டேத்தியாக இருந்தார். X.com பொறுப்பு முழுக்க ஈலான் தோள்களில்.

ஈலான் பிசினஸ் செயல்பாட்டில் துடிப்பும், வெறியும் கொண்டவர். ஆனால், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அவர் பலமல்ல. ஆகவே, சாஃப்ட்வேர் பிரச்சினைகள் வந்தபோது, அவரால் எஞ்சினீயர்களுக்கு வழிகாட்டத் தெரியவில்லை. அதே சமயம், பிசினஸ் அமோக வளர்ச்சி. X.com சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் பெருகியது. சமாளிக்க முடியாமல் இணையதளம் அடிக்கடி செயலிழந்தது. இன்டர்நெட் வங்கி என்னும் சித்தாந்தத்திலேயே கஸ்டமர்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்கள். தொழில்நுட்ப ஓட்டைகளைச் சாதகமாக வைத்துப் பல டுபாக்கூர் பேர்வழிகள் ஏமாற்று வேலைகள் செய்து பணம் சுருட்டினார்கள். பிசினஸ் சரியத் தொடங்கியது. நஷ்டம், நஷ்டம். முழுகும் கப்பலைவிட்டு எஞ்சினீயர்கள் வெளியேற ஆரம்பித்தார்கள்.

ஈலான் சக இயக்குநர்களிடம் இந்த விவரங்களைக் கூறவில்லை. தீல், லெவிச்சின் ஆகியோரின் ஆதரவாளர்கள் புரட்சிக் கொடி தூக்கமுடிவெடுத்தார்கள். அவர்களுக்கு ஈலானைக் கண்டால் பயம். சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தார்கள். செப்டம்பர் 2000. ஆஸ்திரேலியாவின் சிட்னி (Sydney) நகரத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. தாமதப்படுத்திய தேனிலவுக்கு இப்போது போக ஈலான் முடிவு செய்தார். புறப்பட்டார். அதிருப்தியாளர்கள் ரகசியச் சந்திப்பு. சதியாலோசனை. ஈலானை சி.இ.ஓ. பதவியிலிருந்து நீக்க வேண்டும், தீலை அங்கே அமர்த்த வேண்டும் என இயக்குநர் குழுவுக்குப் பரிந்துரை. சூழ்ச்சிப் படலத்தை முடித்தபின் அலுவலகம் வந்தார்கள். இரவு மணி பத்தரை.

ஈலானின் ஆதரவாளர் ஒருவர் தற்செயலாக அலுவலகம் வந்தார். புராஜெக்ட் மும்முரமாக நடக்கும்போது, இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம் சர்வ சாதாரணம். அதுவும், இத்தனை தீல் அணியினரும் கூட்டமாக. அவர் மனதில் சந்தேகக் குறுகுறுப்பு. காதுகளைத் தீட்டிக்கொண்டார். ஒருசிலர் கொஞ்சம் ஓவராக சோமபானம் அருந்தியிருந்தார்கள். மூளையில் மயக்கம். நாவில் அதிகச் சுழற்றல். கொட்டின சில உளறல் வார்த்தைகள். ஈலானின் ஆதரவாளருக்குச் சதி புரிந்தது. உடனேயே தலைவருக்கு போன் செய்தார். கொஞ்சம் லேட். ஈலான் மனைவியோடு சிட்னிக்கு விமானம் ஏறிவிட்டார். பதினான்கரை மணிநேரப் பயணம். அதுவரை அவருக்குச் சேதி சொல்ல முடியாது.

ஆதரவாளர் கைக்கடிகாரத்தின் மேல் கண்கள் வைத்து விழித்திருந்தார். நேரம் வந்தது. தடுமாறும் வார்த்தைகளில் சேதியைத் தெரிவித்தார். ஈலான் பதில் சொன்னார், “தாங்க்ஸ். நான் அடுத்த ஃப்ளைட்டில் திரும்பி வருகிறேன்.” அவர் வார்த்தைகளில் தொனித்தது, சொந்தக் கம்பெனியின் தலைமைப் பதவியிலிருந்தே துரத்தப்படுகிறோமே என்னும் அதிர்ச்சியல்ல, சவாலைச் சந்திக்கும் மன உறுதி.

ஈலான் தேனிலவை ரத்து செய்துவிட்டுக் கலிபோர்னியா திரும்பினார். வலியச் சண்டையை விலைகொடுத்து வாங்குபவர் வந்த சண்டையை விடுவாரா? கச்சை கட்டிக்கொண்டு களத்தில். ஒரே ஒரு தற்காப்பு எண்ணம் மட்டும்தான். X.com, பத்து ஆண்டுகளுக்கு முன்னால், நோவா ஸ்காட்டியா வங்கியில் கோடைப்பயிற்சிக்குப் போனபோதே உதித்த கரு, கடந்த ஒரு வருடமாகப் பசி, தூக்கம் மறந்து வியர்வையும், உழைப்பும் சிந்தி வளர்த்த குழந்தை. தன் பதவிக்குப் பாதகம் வந்தாலும், அந்தக் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது.

தீல், லெவிச்சின் இருவரோடும் பேசினார். பிற இயக்குநர்களோடும் ஆலோசனைகள். அவருக்கு சி.இ.ஓ. பதவியைத் திருப்பித்தர யாருமே தயாராக இல்லை. அதே சமயம், அவரைக் கம்பெனிக்கு ஆலோசகராக அமர்த்தினார்கள். அவர் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதும், அல்லாததும் அவர்கள் உரிமை. மனவலியோடு ஈலான் இதை ஏற்றுக்கொண்டார்.

மூன்று மாதங்கள் ஓடின. டிசம்பர் 2000. கம்பெனி வேலைப்பளு இல்லை. மன அழுத்தம் தீர மனைவியோடு சுற்றுலா. முதலில் பிரேசில் நாடு. அடுத்து, அவர் வளர்ந்த தென்னாப்பிரிக்கா. மனைவியின் அருகாமை, தன் இளமைக்கால மன ரணங்களுக்கு மருந்தாக இருக்கும். சில நாட்கள் பிரேசிலில் சொர்க்கம். அடுத்து தென்னாப்பிரிக்கக் காட்டில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கினார்கள். வீடு திரும்பிய சில நாட்களில், அந்த நாட்டுக்கும் அவருக்கும் ஏதோ விளக்கமுடியாத ஒவ்வாமை என்று நிரூபிக்கும் சம்பவம். காய்ச்சல், உடல்வலி, உடல் நடுக்கம், மூட்டுவலி, வாந்தி, தளர்ச்சி. நடக்கவே முடியவில்லை. ஜெஸ்ட்டின் பயந்தார். ஆம்புலன்சில் மருத்துவ மனைக்கு அழைத்துப்போனார். வந்திருப்பது “ஃபால்ஸிப்பரம்” (Falciparum) என்னும் மலேரியா நோய் என்று ரத்தப் பரிசோதனை சொன்னது. இது மிகக் கொடுமையானது. உடனே சிகிச்சை தராவிட்டால், கோமா நிலைக்குத் தள்ளிவிடும். டாக்டர்கள் உடனேயே ஐ.சி.யூ – வில் அட்மிட் செய்தார்கள். “அடுத்த 48 மணி நேரங்களுக்கு எதுவும் சொல்ல முடியாது” என்னும் கைவிரிப்பு. சிகிச்சை பலன் தந்தது. வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால், தேவை ஓய்வு. உடல்நலம் சீராக ஆறு மாதங்களானது. இழப்பு 45 பவுண்ட்கள் எடை. ஈலான் நகைச்சுவையாகச் சொன்னார், “நான் செத்துப் பிழைத்தேன். நான் கற்ற பாடம் என்ன தெரியுமா? விடுமுறை எடுக்காதீர்கள். அது உங்களைக் கொன்றுவிடும்.”

அவர் கற்ற இன்னொரு முக்கிய பாடம் – இனிமேல் தென்னாப்பிரிக்கா பக்கமே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x