Published : 02 Mar 2020 09:49 AM
Last Updated : 02 Mar 2020 09:49 AM

ஆன்லைன் வர்த்தகத்தை மிஞ்சும் அண்ணாச்சி கடை

ஜெ.சரவணன், saravanan.j@hindutamil.co.in

இன்று மக்களிடையே நுகர்வுஅபரிமிதமான வளர்ச்சியைஅடைந்துள்ளது. பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் எல்லோருமே ஆடை அணிகலன்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். முக்கியமாக ஆன்லைனில்பொருட்களை வாங்கும் கலாச்சாரமும் பெருகிவருகிறது. ஆனாலும், இன்றும்மக்களின் பெரும்பான்மை ஷாப்பிங்முக்கிய கடைத்தெருக்களில்தான் நடந்துகொண்டிருக்கிறது.

சென்னையின் பிரதான வர்த்தக அடையாளமாக இருக்கிறது தி.நகர் ரங்கநாதன் தெரு. இந்த தெருவுக்கு இத்தகைய அடையாளத்தைக் கொடுத்ததே ‘சரவணா ஸ்டோர்ஸ்’ ஸ்தாபனம்தான் என்றால் அது மிகையில்லை. இன்று ஷாப்பிங் பலவித பரிமாணங்களை அடைந்திருந்தாலும், ஷாப்பிங் உலகின் அடையாளமாக இருக்கிறது ‘சரவணா ஸ்டோர்ஸ்’. ஒரு கடையாகத் தொடங்கி இன்று பல கிளைகளுடன் ஆலமரமாக வளர்ந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் வளர்ச்சிக்கு அண்ணாச்சியின் சகோதரர்கள் யோகரத்தினம், செல்வரத்தினம் இருவருமே பக்கபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்த ஆண்டு 50 ஆண்டுகளை நிறைவுசெய்யும் சரவணா ஸ்டோர்ஸின் மகத்தான வளர்ச்சிக்கு சக்சஸ் ஃபார்முலா என்ன என்ற ஆச்சர்யமான கேள்விக்குப் பதில் கேட்போர் பலர். அந்தப் பதிலைத் தேடி ‘இந்து தமிழ் திசை’ சார்பாக நாமும்அதன் நிறுவனர் ராஜரத்தினம் அண்ணாச்சியை அணுகினோம். பன்னாட்டுநிறுவனங்களே வியந்து பார்க்கும் வர்த்தக உத்திகளை, சரவணா ஸ்டோர்ஸின் சக்சஸ் கதையை அண்ணாச்சி சொல்லத் தொடங்கினார். 1970 செப்டம்பர் 4-ம் தேதிபாத்திரக்கடையாக மட்டுமே தொடங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியான முதல் மல்டி ஸ்டோரி ஷாப்பிங் தளமாகஒரு லட்சம் சதுர அடியில் ஐந்து மாடிகட்டிடமாக 1998-ல் வளர்த்து எடுத்தோம்.இன்று சென்னையின் முக்கிய இடங்களில்எல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளது.

மக்களின் தேவை, சந்தையின் போக்குஎல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து சிறு சிறு மாற்றங்களையும் விட்டுவிடாமல் செயல்படுத்தி மக்களின் மனதில் நீங்காதஇடத்தைப் பிடித்ததுதான் இத்தகைய வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம். இதனால் எண் 45, ரங்கநாதன் தெருஎன்ற முகவரி என்றால் இந்தியா முழுவதும் அது சரவணா ஸ்டோர்ஸ் என்று தெரியும் அளவுக்கு அடையாளத்தைப் பெற்றோம்.

சென்னையில் அப்போதெல்லாம் நிறைய இடங்களில் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் இருந்தபோது தி.நகரில் பஸ்டாண்டும், மாம்பலம் ஸ்டேசனும் இருந்தது ரங்கநாதன் தெரு முக்கிய வர்த்தக தளமாக உருவெடுக்க முக்கிய விஷயங்களாக இருந்தன. காலையில் 9மணிக்கு கடை திறக்க, ஏழு மணிக்கெல்லாமே மக்கள் கூட்டம் கடை முன் காத்துக்கொண்டிருக்கும். அப்படி இருந்தது ரங்கநாதன் தெரு. அதன்பிறகு சென்னை விரிவடைந்துகொண்டே இருக்க, நாங்களும் அதற்கேற்ப விரிவடைந்தோம். நிறைய பிராண்டுகள், நிறைய நிறுவனங்கள் இந்த தொழிலுக்குள் வர ஆரம்பித்தன. ஆனால், அத்தனை போட்டிகளையும் தாண்டி சென்னையின் எல்லா பிரதான இடங்களிலும் சரவணா ஸ்டோர்ஸ் கால்பதித்தது. பெரிய அளவில் அப்போதெல்லாம் விளம்பரமெல்லாம் இல்லை. டிவியிலும் பெரிதாக விளம்பரங்கள் கொடுத்ததில்லை. எல்லாமே செவி வழிசெய்தி மூலம் வளர்ந்ததுதான். இப்போது சரவணா ஸ்டோர்ஸில் கருப்பட்டி முதல்கம்ப்யூட்டர் வரை கிடைக்கும். குடும்பசகிதமாக வந்து கல்யாணம், சுப நிகழ்ச்சிகளூக்கு ஒரே இடத்தில் வந்தது சரவணாவில்தான். இந்த கான்செப்ட் வேறு எங்கும் இல்லை. எங்களுடைய வர்த்தக யுத்தியை, ஸ்பேஸ் மேனேஜ்மென்ட் அதாவது பொருட்களைக் காட்சிப்படுத்தும் விதம் உள்ளிட்டவற்றை பல பன்னாட்டுநிறுவனங்கள் ஆய்வு செய்து கற்றுக்கொண்டு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் மக்களையும் அவர்களுடைய வாங்கும் திறனையும் நாங்கள் புரிந்துகொண்டதுதான். அரசு எப்படி மக்களின் பொருளாதார நிலையை வைத்து குறைந்த வருமானம், நடுத்தர வருமானம், அதிக வருமானம் எனப் பிரிக்கிறதோ. அதேபோலத்தான். நாங்களும் மக்களின் வாங்கும்திறனுக்கு ஏற்ப பொருட்களைப் பொசிஷனிங் செய்தோம். 2000-க்கு முன்வரை, குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களுக்கான பொருட்களை வழங்குவதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது. மக்கள் தங்களுடைய குடும்ப சுப நிகழ்ச்சிகளைத் திருப்திகரமாக அவர்களிடம் இருக்கும் பணத்துக்கு ஏற்ப பொருட்களை வாங்கும் இடமாக சரவணா ஸ்டோர்ஸ் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். அது மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. மக்களின் பேராதரவால் தொடர்ந்து தரத்தில் சமரசம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ப பொருட்களை வழங்க முடிந்தது.

2000-க்குப் பிறகு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது, வருமானம் பெருகியது.பல நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தன. மக்களின் டேஸ்ட்டும் ட்ரெண்டும் மாறத் தொடங்கியது. அதற்கேற்பஎங்களை நாங்களும் மாற்றிக்கொண்டோம். காலத்துக்கு ஏற்ப மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு தொடர்ச்சியாக மாற்றங்களைப் புகுத்திக்கொண்டே இருந்தோம்.

ஆன்லைன் வர்த்தகக் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் பாரம்பரிய வர்த்தகர்களின் வியாபாரம் பாதிப்பதாகக்குற்றச்சாட்டு இருக்கிறதே அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டோம்? அதற்கு அவர், “ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆரம்பத்தில் ஒரு மோகம் இருக்கலாம். நிறைய விதவிதமாகக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிற மாதிரி இருக்கலாம். ஆனால், அதுநீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. மொபைலில் மட்டுமே பார்க்கும் பொருள் வந்துசேரும்போது எப்படி இருக்கும் என்று தெரியாது, ஆன்லைனில் வாங்கிய பொருட்களைப் பெரும்பாலும் திரும்பிஅனுப்பும் போக்கு அதிகமாக உள்ளது. இதுபோன்ற பல பிரச்சினைகள் இருக்கிறது.

ஆனால், ஆன்லைன் வர்த்தக சந்தை ஒருபக்கம் இருக்கத்தான் செய்யும். ஓரிரு முறை ஆர்டர் செய்வார்கள். ஆனால், குடும்பம் சகிதமாக பொருட்கள் தேவை என்றால் அதற்கு சரவணா ஸ்டோர் போன்ற கடைகளைத்தான் மக்கள் தேடுகிறார்கள். உடனடியாக பொருள் வாங்க வேண்டும், சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்தும் வாங்க வேண்டும். இதையெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தால் கொடுக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் வர்த்தகத்தை மிஞ்சும் அளவுக்கு மக்களின் டேஸ்ட் மற்றும் ட்ரெண்டை சரவணா ஸ்டோர்ஸில் நாங்கள் புகுத்தி வருகிறோம். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இந்தியாவில் உள்ள சப்ளையர்கள் வந்துவிடுவார்கள். அப்போதைய சந்தை ட்ரெண்டுகளைப் தயாரிப்புகளைக் காட்டுவார்கள். நாங்களும் மக்களின் டேஸ்டுக்கு ஏற்ப தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து கடைகளில் வைப்போம். ஓவ்வொரு வாரமும் சந்தை டிரெண்டோடு சரவணா ஸ்டோர்ஸும் அப்கிரேட் ஆகிக்கொண்டே இருக்கும்” என்றார்.

கடைக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் என்னென்ன விஷயங்களைப் பார்ப்பீர்கள் என்று விசாரித்தோம்?

ஒரு ஏரியாவைத் தேர்ந்தெடுக்கும்போது அங்கு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு இருப்பது மிக முக்கியம். இடத்தை சுற்றி 5 கிமீ பரப்பளவுக்கு வசிக்கும் மக்கள் தொகை என்ன, அங்கு வசிக்கும் மக்களின் பொருளாதாரம் வாழ்க்கைத்தரம் எப்படி, வாங்கும் திறன்என்ன எல்லாவற்றையும் ஸ்டடி பண்ணிதான் இடத்தை தேர்ந்தெடுப்போம். நாம் செய்யும் முதலீடுக்கு ஏற்ற லாபத்தை எடுக்கும் அளவுக்கு ஃபுட்ஃபால் (மக்கள்வருகை) இருக்குமா என்பதைப் பார்த்துதான் இடத்தைத் தேர்ந்தெடுப்போம்.

ஜுவல்லரி வர்த்தகத்தில் இறங்கியிருக்கிறீர்கள் அதைப் பற்றி சொல்லுங்கள் என்றோம். வாடிக்கையாளர்கள்தான் இதற்கும் காரணம். உங்களிடம் எல்லாமே கிடைக்கிறது. நகை ஆபரணங்களும் கொடுத்தால் நன்றாக இருக்குமே அதற்கு வேறு கடைக்குப் போகவேண்டியதில்லையே என்று கேட்டதன்பேரில், ஆரம்பத்திருக்கிறோம். ஆரம்பித்த சில நாட்களிலேயே விற்பனைசிறப்பாக இருக்கிறது. சுப நிகழ்வுகளுக்குத் தேவையான அனைத்துமே ஒரே இடத்தில் கிடைக்கும் அளவுக்கு எல்லாமே இருக்கும்படி திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறோம்.

சரவணா ஸ்டோர்ஸின் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டம், இலக்கு என்ன என்ன வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டோம். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் கடைகளைத் திறக்கும் இலக்கு உள்ளது. புரசைவாக்கத்தில் தொடங்கியுள்ள பிரைடு ஜுவல்லரி ஷாப் போலவே பிறகடைகளின் அருகிலும் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார். சில்லறை வர்த்தகத்தில் யார் வேண்டுமானாலும் வரட்டுமே ஒருகை பார்த்துவிட தயாராகவே இருக்கிறது இந்த அண்ணாச்சியின் கடை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x