Published : 01 Mar 2020 12:00 PM
Last Updated : 01 Mar 2020 12:00 PM

பாடல் சொல்லும் பாடு 06: அகத்தீட்டு விலகுவது எப்போது?

கவிதா நல்லதம்பி

ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒருவிதை
ஒரு காடு
நிலம் நான்
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்

- கவிஞர் அனாரின் ‘நான் பெண்'

பெண் எனும் பேராற்றல்தான் உலகையே இயக்கிக்கொண்டிருக்கிறது என்று நம்பும் நம் சமூகத்தில்தான், ஒரு பெண் Happy to Bleed என்று முழங்கவும் தேவையிருக்கிறது. கல்வியளிக்கும் நிறுவனங்களே பெண் பிள்ளைகளின் உள்ளாடைகளை அகற்றி, அவர்கள் மாதவிடாய்க் காலத்தில் இருக்கிறார்களா எனச் சோதிப்பதை வாய்மூடிப் பார்க்கவும் வேண்டியிருக்கிறது.

வளத்தின் அடையாளம்

நிலமும் நதியும் தீயும் என எல்லாமும் பெண் எனக் கண்டு, அவளின் மறு உற்பத்தி ஆற்றலைக் கொண்டாடியது தாய்வழிச் சமூகம். உலகின் பிற நாகரிகங்களிலும் பூமிக் கடவுளாக, நீர்க் கடவுளாக, சூரியக் கடவுளாக, வளமையின் கடவுளாகப் பெண் வணங்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறாள். வானம் சிந்தும் முதல் துளியைப் பூமித்தாய் தன் மாதவிலக்காகக் கொள்கிறாள்; தான் கருவுறுவதற்கான வளத்தைப் பெறுகிறாள் எனக் கருதும் அசாம் மக்கள், அந்நாளை ‘அம்புபாச்சி’ என்று கொண்டாடுகிறார்கள்.

தாயை முதன்மையாகக் கொண்ட சமூகத்தில், மாதவிடாய், குலப் பெருக்கத்துக்கான ஆதாரமாகப் பார்க்கப்பட்டது. அந்த ரத்தத்தை மரத்தில் பூசினார்கள். உலர்ந்த பிறகு மரத்தில் படிந்திருக்கும் ரத்தத்தை முகத்திலும் உடலிலும் பூசிக்கொண்டார்கள். அந்த ரத்தம் அவர்களைத் தீய சக்திகளிடமிருந்து காக்கும், சண்டையிடுகையில் வெற்றியைப் பெற்றுத்தரும் என்றும் நம்பினார்கள். இந்த வழக்கமே பின்னாளில் நெற்றியில் திலகமிடும் பழக்கமாக, ஆரத்தி எடுக்கும் பழக்கமாக மாறியது.
பெண்கள் தம் நெற்றியில் திலகமிடுவதும் கருவளத்தைக் காண்பிக்கும் குறியீடே என்கிறது மானுடவியல்.

விலக்கப்பட்ட நிகழ்வு

ஆய்வாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாய, ‘உற்பத்தி, இன விருத்தியை ஒன்றாக்கும் மந்திர நம்பிக்கைகள் தாந்த்ரீகத்துடன் தொடர்புடையவை என்றால், மாதவிடாய் ரத்தத்துக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பானதே’ என்கிறார்.
சங்க இலக்கியத்திலும் மாதவிடாய், பூப்பு என்றே அறியப்பட்டது. பூத்தல் ஒரு பெண் இன உற்பத்திக்குத் தயாராக இருக்கிறாள் என்பதைக் காட்டும். பூப்பதும் காய்ப்பதும் கனிவதுமாக இயற்கையின் கூறுகளை உள்ளடக்கியதே பெண்ணின் உற்பத்தி இயல்பு. தலைவியின் பூப்புச் செய்தியை அறிவிக்கச் சிவப்பு நிறம் பயன்பட்டது. பரத்தையரின் காரணமாகத் தலைவியைப் பிரிந்த தலைவனுக்கு, தலைவி பூப்புக்கான காலத்திலிருக்கிறாள் என்பதை உணர்த்த தோழியர் செவ்வணி அணிந்ததை,
“தோள்புதிய உண்ட பரத்தை இல்சிவப்புற நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறை யதுவே” எனும் பரிபாடல் (19-20) சொல்கிறது. இப்படிப்பட்ட மரபில் சமய நிறுவனங்கள் வலுப்பெறத் தொடங்கியதும் உயர்வு தாழ்வு, புனிதம் தீட்டு என்பது போன்ற எதிர்வுகள் பெருகின; மாதவிடாய் பற்றிப் பேசுவதும்கூட விலக்கப்பட்டதாக மாறியது.

தெய்வங்களும் விதிவிலக்கல்ல

சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா தேவி கோயில், செங்கண்ணூர் பகவதி கோயில்களில் நடைபெறும் பூப்புச் சடங்குகள் தேவி மாதவிலக்கானதைக் கொண்டாடும் சடங்குகள். யோனி வடிவத்திலே நிலைகொண்டிருக்கிற காமாக்யா தேவிக்கு நிகழும் மாதவிடாய், தீர்த்தக் குளத்தைச் செந்நிறமாக்குவதாக நம்பப்படுகிறது. அத்தீர்த்த நீரே பிரசாதமாகிறது. செங்கண்ணூர் பகவதி கோயிலில் மாதவிடாயின்போது பகவதி அணிந்திருந்த ஆடையைப் பெறுவதற்குப் பெருந்தலைகளுக்குள் நடக்கும் போட்டி இந்தியப் பிரசித்திபெற்றது. இங்கே ஆண்கள்தாம் பூசாரிகள். பெண்கள் மட்டுமே பூசாரிகளாக இருக்கும் ஆந்திர மாநிலத்தின் தேவிபுரக் கோயிலில் மாதவிடாய்க் காலத்திலும் பெண்கள் பூஜை செய்யும் வழக்கமுண்டு.

நாமிருப்பது மாதவிடாய் என்னவென்று அறியாத புதிர்கள் கொண்ட சமூகமல்ல. நம் குடும்பங்களில் வீட்டுக்கு விலக்கென்று தனித்திருக்கச் செய்வதும், வேலைகள் செய்யவிடாமல் பார்த்துக்கொண்டதும் பெண்ணை மன, உடல் பலவீனங்களிலிருந்து காப்பதற்காகவே; வழிபாட்டுத் தல நீர்நிலைகளில் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் குளிப்பது மறுக்கப்படுவது பொதுநலம் கருதியே என்று நம்புகிற நாம், தீட்டு என்றும் மறுபிறப்பு பயத்திற்கென்றும் குடும்ப நடவடிக்கைகளில் இருந்தும் வழிபாட்டு உரிமைகளிலிருந்தும் பெண்கள் ஒதுக்கப்படுவதை எப்படி ஏற்பது?

மாதா மாதம் தூமைதான்
மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ
வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது
நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா
விளந்தாவாறு பேசடா!
(தூமை - மாதவிடாய், வசவுச் சொல்லாக நம் பண்பாட்டில் எஞ்சியிருக்கிறது)

ஒவ்வொரு மாதமும் தோன்றும் மாதவிடாய், வராமல் நின்றால் பெண் கருவுற்றிருக்கிறாள் என்பதே பொருள். அந்தத் தீட்டில் கலந்தே உயிரும் உடலும் உருவாகிப் பிறப்பெடுக்கிறது. இதில் நாதமும் வேதமும் எங்கிருந்து வந்தன? நற்குலங்கள் என்று கற்பிக்கப்பட்டவை எல்லாம் எங்கிருந்து வந்தன? உயர்வு தாழ்வு பேசும் வேதியர்களே, நீங்கள் எங்கிருந்து பிறந்தீர்கள் என்கிற சிவவாக்கியாரின் தமிழ்ச் சிந்தனை மரபு, இன்று நாம் கொண்டிருக்கும் மூடத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கலகக் குரல்.

பின்னிழுக்கும் பிற்போக்கு

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உடலியற்கூறுகளின் அறிவியலை விளக்குவதில்கூடத் தோற்றுப்போன நம்மைப்
போன்ற வளரும் நாடுகளில்தான் கருப்பைப் புற்றுநோய்களும் இதர பாலியல் தொற்றுக்களும் அதிகரித்துவருகின்றன. வழிபாட்டு உரிமையை இழந்துவிடக் கூடாதென்ற மன அவஸ்தையில் மாதவிடாயைத் தள்ளிப்போகச்செய்ய அல்லது விரைந்து நிகழச்செய்ய மருந்துகளை உட்கொண்டு நலமிழக்கும் பெண்களும் இங்குண்டு.

ஒழுங்கான கழிப்பறைகள் இல்லாத கல்வி நிலையங்கள், பணியாற்றும் நிறுவனங்கள் என எந்தப் பொதுவெளியும் பெண்ணின் உபாதைகளுக்கு ஆசுவாசம் அளிப்பவையாக இல்லை. இன்று ஆணும் பெண்ணும் எல்லாத் தளங்களிலும் நிகராகப் பணிபுரிகிறார்கள். பணியுடன் குடும்பச் சுமைகளும் அதிகரிக்க சூழலியல் விளைவுகளில் சீரற்ற சுரப்பிகளோடு மன அழுத்தத்தில் மாதவிடாய்ச் சீர்குலைவைப் பெண்கள் எதிர்கொண்டுவருகிறார்கள்.

பிட்டும் நல்லெண்ணெய்யிட்ட உளுந்தங்களியும் கொடுத்து ஊட்டமளிக்கப்படும் பூப்பு உடல், இன்று பூச்சிக்கொல்லிகளால் ஆன, மருந்தூட்டப்பட்ட உணவால் பத்து வயதிலேயே பருவம் கொள்கிறது. அதீத உதிரப் போக்கிலோ ரத்த சோகையிலோ கிடந்து உழல்கிறது. கருவளம் குன்றி வறண்ட கருப்பைகளை உடையதாகிப் பழிசுமந்து நிற்கிறது.

இந்த வலிகளைப் புரிந்துகொள்ள, இளந்தலைமுறை ஆண்கள் முதலடி எடுத்துவைக்க எத்தனிக்கையில், ‘அவள் நாயெனப் பிறப்பாள்; நீ காளையெனப் பிறப்பாய்’ என்று பேசி காலைப் பின்னுக்கு இழுக்கும் வேலையைப் பிற்போக்குச் சக்திகள் செய்துகொண்டிருக்கின்றன. திட்டமிடப்பட்ட இதுபோன்ற சமயப் பிற்போக்குகளிலிருந்து வெடித்தெழுந்த பெண் சக்தியின் கவிதை மரபாக இருப்பவை ஆவுடையக்காளின் கவிதைகள். நமக்குத் தேவை கலக மரபிலிருந்து பிறந்த ஞானத்தின் ஒளியே அன்றி, மூடத்தனங்களின் இருளுக்குள் தள்ளும் கரங்களில்லை. அந்த ஞான மரபின் ஒரு துளி:

உலகத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ?
தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி
நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி
ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி
அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x