Published : 01 Mar 2020 11:54 AM
Last Updated : 01 Mar 2020 11:54 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 47: வயிற்றுக்குள் எரியும் நெருப்பு

ஒருநாள் நான்கு மைல் தொலைவிலிருந்த காட்டில் கேப்பை கருது அறுப்பதாகக் கேள்விப்பட்டு இங்கே இருந்து பத்து இளவட்டங்கள் காலை நாலு மணிக்கே எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். வயிற்றில் எரியும் பசிக்கு ஒரு கிலோ கேப்பை கிடைத்தாலும் வெறும் தண்ணியைக் குடித்துக்கொண்டு பசியைப் போக்கிக்கொண்டிருப்பவர்களுக்குக் கொஞ்சம் திரவமாகக் கூழ் குடித்தால் பிறகு ரெண்டு நாளைக்குப் பசியை அடக்கிக்கொள்ளலாம் என்று தோன்றியது.

நாட்டுப் பிரதமராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் விளையாட்டில் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் ஒரு நாள் பட்டினியாக இருந்தால் போதும். அவன் அடையாளங்கள் அத்தனையும் அழிந்துபோகும். ஒரு வாய்ச் சாப்பாட்டுக்காக அடுத்தவரின் முகம் பார்த்து ஏங்குவார்கள். கம்பீரம், அவனது சவடாலான பேச்சு எல்லாமே மறைந்துபோக அவன் வெறும் சாதாரண மனிதனாக இருப்பதோடு தனக்குள் எரியும் பசியை எப்படிப் போக்குவது என்றுதான் அலைவான். இந்தப் பசி ஒரு கொடிய நோய். ஆதிகாலத்திலிருந்து இந்தக் காலம்வரை ஏழைகளை முக்கியமாகக் குழந்தைகளையும் முதியவர்களையும் தனதாக்கிக்கொண்டிருக்கிறது.

நிலவு மேல் வெறுப்பு

அப்படிப் பசியின் கொடுமை தாங்காமல்தான் ஏதோவொரு ஊரில் கருதறுப்பு இருக்கிறது என்று அந்த இருட்டு வேளையில் எழுந்து எல்லோரும் நடந்தார்கள். நிலா பால் சிந்தி நிலத்தை முத்தமிட்டவாறு இவர்கள் கூடவே வந்தது. இப்போதெல்லாம் இந்தக் கிராமத்து ஆட்களுக்கு நிலவைப் பார்க்கவே வெறுப்பாயிருந்தது. பிறகென்ன, பகலில் சூரியனையும் இரவில் நிலவையும் பார்த்துக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? விவசாயிகளுக்கு மேகங்கள் சூழ வேண்டும். அதிலும் திட்டுத் திட்டாகக் கறுப்பு மேகங்கள் சூழ வேண்டும். மழை பொழிய வேண்டும். கிணறுகளும் குளங்களும் நிறைய வேண்டும். பூமிதான் எல்லோருக்கும் அம்மா. நிலம், வயல் என்று இருக்கும் தங்கள் பெண்ணுக்குப் பச்சைப் புடவையை எடுத்துக்கொடுக்க வேண்டும். எங்கும் பசுமைதான் இருக்க வேண்டும். அதனால்தான் இவர்கள் கூடவே வந்த நிலவு மீது கருது அறுப்புக்காகக் கருக்கரிவாளும் பனையோலைப் பெட்டியுமாகப் போனவர்களுக்கு வெறுப்பு வந்தது.

அனைவருக்கும் தானியம்

ரொம்ப தொலைவிலிருந்து கருதறுப்புக்காக வந்த இவர்களைப் பார்த்ததும் அந்தக் கிராமமே அதிசயித்தது. ஏற்கெனவே அங்கேயும் மழையில்லாமல் பச்சைகள் எல்லாம் கருகிக்கொண்டிருந்தன. ஆனாலும், இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் இருந்த கேழ்வரகுக் கருதை எப்படியும் விளைய வைத்துவிட வேண்டும் என்று வற்றிப்போன கிணற்றிலிருந்துகூடக் குடத்தில் இறைத்து ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து ஊற்றியிருக்கிறார்கள். ஏனென்றால், காடுக்காரர்களுக்கு மட்டும் அந்தத் தானியம் சொந்தமல்ல. அந்த ஊருக்கே சொந்தமென்று நிலத்துரியவர்கள் சொல்லிவிட்டதால் ஊரே சேர்ந்து பாடுபட்டது. அந்த நிலத்துக்காரர்களும் இளகிய மனம் படைத்தவர்கள் போலும். இல்லாவிட்டால் தங்கள் பிஞ்சையில் விளைந்த தானியத்தை ஊருக்குப் பங்கு வைப்பார்களா?

அந்தத் தானியத்துக்குத் தாங்கள் மட்டும்தான் உரியவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அடுத்த ஊர்க்காரர்களும் வந்துவிட்டதில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும்கூட, சரி எல்லாரும் பசியில் தவிக்கிறார்கள், அவர்களுக்கும்தானே பசி அடங்க வேண்டுமென்று நினைத்தார்கள். கருது நன்றாக விளைந்து தட்டையிலேயே காய்ந்துவிட்டதால் அப்போதே அறுத்துக் களத்திலிட்டு அடித்து எல்லோருக்கும் ஒவ்வொரு படி கேப்பையைக் கொடுத்தார்கள்.

கோமதியின் சந்தோசம்

கோமதிக்கு நாலு பிள்ளைகள். அதிலும் எல்லோரும் இளவட்டங்கள். நாலு படி தானியத்தைக் கொத்தாகக் கொண்டுவந்து கொடுத்ததால் அவளுக்குச் சந்தோசம் பொறுக்க முடியவில்லை. தீஞ்சு, கருகி அனல் வீசிக்கொண்டிருக்கும் நெஞ்சில் ஒரு பனிக்கட்டி விழுந்ததுபோல் அம்புட்டுக் குளிர்ச்சியாக இருந்தது அவளுக்கு. நாலு படி கேப்பையையும் கையால் அள்ளி அள்ளிப் பார்த்தாள். அதன் புது மணத்தை நுகர்ந்து நுகர்ந்து தன் இரைப்பையை நிரப்பினாள். இதைவிட அதிகமான தானியத்தை ஏழை, எளியவர்களுக்கு இரக்கப்பட்டுக் கொடுத்தவள்தான். ஆனால், இன்று நிலைமை அப்படியில்லையே.

இவ்வளவு நாளும் இலை உதிர்ந்துபோன அரச மரத்து மேடையில் போய் வானத்தை அண்ணாந்து நோக்கியவாறு படுத்துக் கிடந்தவர்கள் இன்று வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். கோமதிக்குப் புரிந்துவிட்டது. அம்மா எப்படியும் சீக்கிரம் கூழைக் காய்ச்சிவிடுவாள், நாம் குடிப்போம் என்று அவர்கள் சுத்தி சுத்தி வருகிறார்கள் என்று நினைத்தவள், கேப்பை ஈரப்பதமாக இருக்கிறது என்று வாசலில் காயப்போட்டுவிட்டுக் கேப்பையைத் திரிப்பதற்காகத் திருவையைத் தூக்கப்போனாள்.

கேப்பையைத் தின்ற கோழிகள்

தானியங்களைத் திரித்து ரொம்ப நாளாகிவிட்டதால் திருவையின் ‘பட்டு’ போயிருந்தது (திருவை அளவுக்குச் சாக்கைக் கிழித்து அதில் கரம்பை கரைத்துக் கெட்டியாகப் போட்டுக் கொஞ்ச நேரம் காயவைத்துவிட்டுப் பிறகு திரிப்பார்கள். அதற்குத்தான் ‘பட்டு’ என்று பெயர்). ‘பட்டு’க்காகக் கரம்பையை அரைத்து அதில் பூசிவிட்டு வந்துப் பார்க்கிறாள். அவளது நாலு கோழிகளும் ஒரு சேவலும் காயப்போட்ட கேப்பையை மொத்தமாகத் தின்றுவிட்டன. ஒவ்வொரு கோழிக்கும் கேப்பையால் நிறைந்த இரைப்பை கதுவாலியின் முட்டையாகத் தொங்குகிறது. அதைப் பார்த்ததும் கோமதி தன் குடலே அறுந்து விழுந்தது போலாகிவிட்டாள். ஆத்தாத்தா, இந்தக் கேப்பையை நம்பித்தானே எம் பிள்ளைக அங்கே இலையும் கொலையுமா பசியில் கண்ணு ரெண்டும் பஞ்சாடிப் போயி படுத்திருக்குக. இந்தக் கோழிக அம்புட்டுக் கேப்பயவும் தின்னுருச்சே. இனி, எம்புள்ளைகளுக்கு என்ன செய்வேன் என்று கொதித்துப்போனாள். அவள் ஈரக்குலை ஆடிப்போனது.

உடனே, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையன்களைக் கூப்பிட்டாள். அந்தக் கோழிகளையும் சேவலையும் சுத்தி வளைத்துப் பிடிக்கச் சொன்னாள். அது சிறுவர்களுக்கு விளையாட்டுபோல் இருந்தது. ஓடி ஓடி ஒரே நிமிசத்தில் அத்தனை கோழி, சேவலையும் பிடித்துவிட்டார்கள்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x