Published : 01 Mar 2020 11:52 AM
Last Updated : 01 Mar 2020 11:52 AM

பெண்கள் 360: கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி

கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி

எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான கே.வி.ஜெயஸ்ரீ கேரளத்தை பூர்விகமாகக் கொண்டவர். இதனால் மலையாளத்திலிருந்து தமிழுக்குப் பல புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் பிரபல எழுத்தாளரான மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்கிற நாவலைத் தமிழில் அவர் மொழிபெயர்த்திருந்தார். இந்தப் புத்தகத்தைச் சிறந்த முறையில் மொழிபெயர்த்தமைக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் போராளிகளின் முதல் சந்திப்பு

பெண் கல்விக்காக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் மலாலா யூசப், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த குரல்கொடுத்துவரும் கிரெட்டா துன்பர்க் ஆகிய இருவரும் சந்தித்தனர். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் கிரெட்டா துன்பர்க் சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார். அங்கே பருவநிலை பாதிக்கப்பட்டுவருவதற்கு எதிராக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கிரெட்டாவுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மலாலாவை கிரெட்டா சந்தித்தார். தங்களுடைய வலிமையான போராட்டத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இந்த இளம் ஆளுமைகள் இருவரும் சந்தித்துக்கொண்டது இதுவே முதல் முறை. இந்த ஒளிப்படத்தைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்ட மலாலா “கிரெட்டாவுக்காக மட்டும்தான் நான் வகுப்புகளைப் புறக்கணிப்பேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

மறைந்தார் கேத்ரின் ஜான்சன்

மனிதன் நிலவில் காலடி எடுத்துவைக்கக் காரணமாக இருந்த அமெரிக்கக் கணிதவியலாளர் கேத்ரின் ஜான்சன் 101 வயதில் பிப். 24 அன்று மறைந்தார். ஆப்பிரிக்க அமெரிக்கரான கேத்ரின் ஜான்சன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றிவர். கணிதவியலாளரான கேத்ரின் பூமியிலிருந்து நிலவுக்கு ஏவப்படும் ராக்கெட் பாதையைத் துல்லியமாகக் கணக்கிட்டவர். தன்னுடைய பணிக்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து 26 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். ஆப்பிரிக்கர் என்ற காரணத்துக்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் தொடக் காலத்தில் பாகுபாட்டை அவர் சந்திக்க நேரிட்டது. ஆனால், கேத்ரினின் கணித அறிவு அந்தப் பாகுபாட்டை உடைத்தெறிந்தது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய நான்கு ஆப்பிரிக்கப் பெண் ஆய்வாளர்களில் பணிக்குச் சேர்ந்த இரண்டாம் ஆப்பிரிக்கப் பெண் கேத்ரின் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றத்துக்கான விருந்து

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு டெல்லியைச் சேர்ந்த ‘சச்சி சஹேலி’ என்ற தொண்டு நிறுவனம் மாதவிடாயில் உள்ள பெண்கள் சமைத்த உணவுத் திருவிழாவை நடத்தியது. சமீபத்தில் கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்தி என்ற சாமியார் ‘பெண்கள் மாதவிடாயின் போது சமைத்தால் அவர்கள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறப்பார்கள்’ என்ற அறிவியல்பூர்வமற்ற கருத்தைத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சச்சி சஹேலி தொண்டு நிறுவனத்தினர் மாதவிடாய் தருணத்தில் பெண்கள் சமைத்த உணவுத் திருவிழாவை நடத்தினார்கள். இந்த விருந்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுர்பி சிங் “எங்கள் தொண்டு நிறுவனத்தின் முக்கிய நோக்கமே பொதுமக்களிடம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்” என்றார். மணிஷ் சிசோடியா பேசும்போது “அறிவியல் வளர்ச்சியடைந்துள்ள இந்தக் காலத்தில் மாதவிடாயில் தூய்மையானது அல்லது தூய்மையற்றது என்று எதுவுமில்லை. இதுவொரு இயற்கையான உயிரியல் செயல்” என்றார்.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்திய வளைகாப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப்பெறக் கோரி பெண்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் போராட்டத்தின் 13-ம் நாளில் இந்து மதத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணுக்குப் போராட்ட மேடையில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் வளைகாப்பு நடத்தினர்.

இதனால் போராட்டக் களம் கோலாகலமாக மாறியது. பாக்கியலட்சுமியை அங்கிருந்த பெண்கள் கண்ணாடி வளையல் அணிவித்தும் சந்தனம் பூசியும் அட்சதை தூவியும் வாழ்த்தினார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்களுக்கு “இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட தாம்பூலப் பை வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த வித்தியாசமான வளைகாப்பு நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x