Published : 01 Mar 2020 11:39 AM
Last Updated : 01 Mar 2020 11:39 AM

தெய்வமே சாட்சி 06: தெய்வத்தின் மீது ஏறி நிற்கும் மனிதச் சிந்தனை

ச.தமிழ்ச் செல்வன்

பல ஆண்டுகளுக்கு முன் வடுகச்சி மதில் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் தேவரும் திருநம்பித் தேவரும் முயல் வேட்டைக்காக நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம் கிராமத்தை ஒட்டிய காட்டில் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

அன்று சித்ரா பௌர்ணமி என்பதால் அங்கிருந்த ஈஸ்வரியம்மன் கோயிலில் யாதவர் குல மக்கள் திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் போய் அந்த விழாவில் கலந்துகொண்டார்கள். இவர்களுக்குத் தேங்காய்ச் சிரட்டையில் பொங்கல் வைத்துக் கொடுத்தார்கள். சுற்றி அலைந்த களைப்பில் அதைச் சாப்பிட்டுவிட்டு இருவரும் அங்கேயே படுத்துவிட்டார்கள்.

இருவருக்கும் ஒரே கனவு

அன்று இரவு அங்குள்ள பூசாரி திருச்செந்தூர் சென்று பூஜை செய்வதுபோல் இவர்கள் இருவருக்குமே கனவில் தோன்றியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், அவர் சாமியாடி வந்து ஒவ்வொருவருக்கும் குறிசொல்லி வருவதாகவும் கனவில் வருகிறது. இவர்கள் இருவருக்கும் பூசாரி சொன்ன குறி சரியாக இருந்தது. ஒரே மாதிரி இருவருக்கும் கனா வந்ததை வியப்புடன் பரிமாறிக்கொண்ட இருவரும் ஆலோசனை செய்தனர். யாருக்கும் தெரியாமல், தாங்கள் பொங்கல் சாப்பிட்ட சிரட்டையில் பிடிமண் எடுத்து மறைத்துக் கொண்டு வந்து தங்கள் கிராமத்தில் அந்த ஈஸ்வரி அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.

ஒரு பீடம்போலத் திண்டு கட்டி, அதில் பித்தளைக் குடத்தில் நிறைகுடமாகத் தண்ணீர் வைத்து, அதன் கழுத்தில் மாவிலை கட்டி, குடத்தின் மேல் ஒரு தேங்காயை வைத்துக் கும்பிடுகின்றனர். சிலை கிடையாது. குடம்தான் அம்மன். எட்டுக் குடும்பங்கள் மட்டும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள். இவர்கள் குடும்பங்களில் ஏதும் கஷ்டம் வரும்முன் அம்மன் சிறு குழந்தையைப் போல் வீட்டுக்கு வந்து இவர்களுக்குக் காட்சி கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

முன்பு அந்தக் குடத்துக்குப் பட்டுப்பாவாடை கட்டி வந்தார்கள். இப்போது அந்த அம்மனுக் கும் வயதாகிப் பெரிய பெண்ணாகியிருப்பாள் இல்லையா? அதனால் திருவிழாவில் அந்தக் குடத்துக்குப் புடவை சுற்றித் தாலியும் கட்டுகிறார்கள். தினம் தீபம் ஏற்றிக் குடத்துத் தண்ணீரை மாற்றி வைக்கிறார்கள். ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும் இந்தக் குடும்பங்கள் மட்டும் திருவிழா நடத்துகின்றன. ஒரு கோட்டை அரிசியில் சோறாக்கி, நாலைந்து வகைக் காய்கறி, கூட்டு வைத்து வடை, பாயசத்துடன் சாப்பாடு போடுகிறார்கள். யார் வேண்டுமானாலும் போய்ச் சாப்பிடலாம்.

பிடிமண் வரலாறு

ஆழ்வார்குளத்தில் ஈஸ்வரி அம்மன் வழிபாடு இப்போது இருப்பதாகத் தெரிய வில்லை. ஈஸ்வரி அம்மனின் தோற்றக்கதை கிடைக்கவில்லை. பிடிமண் எடுத்து வந்து எழுப்பிய இடத்தில் மட்டும் வழிபாடு தொடர்கிறது. நாட்டுப்புறவியல் அறிஞர் பேராசிரியர் ஆறு.ராமநாதன் தன்னுடைய ‘தெய்வங்களின் தோற்றக்கதைகள்’ என்னும் நூலில் (மணிவாசகர் பதிப்பகம்) 676 தெய்வங்களின் கதைகளைத் தொகுத்துள்ளார். அவற்றில் 429 (79 சதவீதம்) தெய்வங்கள் அகால மரணம் அடைந்த மனிதர்களும் மனுசிகளும். ஆனால், அகால மரணம் இல்லாமல் ஈஸ்வரியம்மன் போல் பிடிமண் எடுத்து வந்து அத்தெய்வத்தின் இன்னொரு பிரதியாகத் தம்முடைய ஊரில் நிலைநிறுத்தும் பழக்கமும் பரவலாக உள்ளது.

“அந்தக் கோயிலோடு உறவில்லாத அந்நியர்கள் பிடிமண் எடுத்துச் செல்வதை கோயிலுக்குச் சொந்தக்காரர்கள் விரும்புவ தில்லை. தங்கள் தெய்வம் இதனால் சக்தி இழந்துவிடும் என்று நம்புகின்றனர். இதனால் தெய்வத்தின் சொந்தக்காரர்களுக்குத் தெரியாமல் பிடிமண் எடுத்துச் செல்வதும் தென் மாவட்டங்களில் நிகழ்கிறது” என்று ‘நாட்டார் தெய்வங்களின் பரவல்’ என்கிற கட்டுரையில் பேராசிரியர் நா.ராமச்சந்திரன் குறிப்பிடுவார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்ததற்கு மறுநாள் அங்கே சென்ற மாணவரான பகத்சிங், ரத்தம் தோய்ந்த அந்த மைதானத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து, தன் மேசையில் வைத்துத் தினமும் அதைக் கண்டு ஆவேசம் பெற்றார் என்பது வரலாறு. போர்களுக்குச் செல்லும்முன் பிடிமண் எடுத்து நெஞ்சில் பூசிக்கொள்வதும் உண்டல்லவா? பிடிமண் எடுத்தல் என்பது உலகு தழுவிய ஒரு பண்பாட்டு அசைவாக இருக்கும்போல.

எளிய மக்களின் தெய்வங்கள் அவர்களின் பொருளாதார வசதிக்கேற்பப் பெரும்பாலும் மண்ணைக் குழைத்துச் செய்த பீடமாக எழுந்து நிற்கும். நட்ட கல்லாகவும் நிற்கும். மேற்சொன்ன ஈஸ்வரி அம்மன்போல ஒரு பித்தளைக் குடமாகவும் இருக்கும். அன்றன்றைக்கு உப்பும் புளியும் வைத்து விளக்கி, தண்ணீர் பிடித்துத் திண்டின் மேல் ஏற்றி வைத்தால் சாமி ஆகிவிடும். கிராம வாழ்வில், வேலை வெட்டி ஏதும் இல்லாத காலத்தில் ஆண்கள் முயல் வேட்டைக்குப் போவது வழக்கம். பசியோடு போய்ச் சிரட்டையில் பொங்கல் வாங்கித் தின்று, கிறங்கிப் படுத்தவர்களுக்குக் கனவு வருகிறது. கனவு நிலையும் அரைமயக்க நிலையும் பக்தியுடன் இணைந்த பிரிக்க முடியாத உணர்வுநிலைகளாக இருப்பதை நாம் அறிவோம். காடே சேரியாக அலையும் இந்த வாழ்க்கை எப்படியாவது முடிவுக்கு வராதா என ஏங்கிக் கிடக்கும் உழைப்பாளிகளுக்குக் கனவில் நல்ல குறி சொன்னவுடன் பிடிமண் எடுத்துவிடுகிறார்கள். வாழ்நிலைதான் கனவுகளின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

குடத்துக்குத் தாலி

மற்ற தெய்வங்களின் வழிபாட்டில் இல்லாத புதிய அம்சங்கள் இதில் என்னவெனில், குடமே அம்மன் ஆவதும், குடத்தின் கழுத்தில் தாலியைக் கட்டுவதும்தாம். “பொம்பளப் பிள்ளைக்குக் காலா காலத்தில் கல்யாணத்தைப் பண்ணி வச்சிடணுமில்லே” என்கிற ஆணாதிக்கச் சமூகத்தின் பதற்றம் இங்கே செயல்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மனித குணங்களை இயற்கைப் பொருட்களின் மீதும் விலங்குகள், பறவைகள் மீதும் ஏற்றுகிற பண்பு நமக்கு வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இருப்பதுதான். பூமியின் பொறுமை, மழையின் கருணை, வெயிலின் உக்கிரம், நரியின் தந்திரம், பசுவின் தாய்மை, குரங்கின் சேட்டை என அவற்றுக்கு இல்லாத ஆனால், நமக்குத் தோன்றுகிற பண்புகளை அவற்றின் மீது ஏற்றிவைக்கிறோம். அதே போலத்தான் தெய்வங்களின் மீதும் மனிதக் கற்பனைகளையும் மனிதத் தேவைகளின்பாற்பட்ட கருத்துகளையும் ஏற்றிவைத்து வருகிறோம்.

தாய்வழிச் சமூகமாக வேட்டையாடித் திரிந்த நாட்களில் மனித குல மறு உற்பத்தியின் ரகசியம் பிடிபடாத காலத்தில் நாம் பெண்ணுறுப்பைக் கல்லில் செதுக்கி வணங்கியிருக்கிறோம். அன்றைய நம் அறிதலுக்கேற்ற வழிபாடு அது. எனில், ஆணாதிக்கச் சமூகமாக மாறிய பிறகு சமூகத்தில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஆண்-பெண் பேதங்கள், பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்பதுபோன்ற கட்டுப்பாடுகளை நாம் படைக்கும் தெய்வங்களின் மீதும் ஏற்றிவிடுகிறோம்.

நாம் வாழும் சமூகத்தின் ஆதிக்கச் சிந்தனைகளே நம் காலத்தின் சிந்தனையாக எல்லாவற்றின் மீதும் ஏறி நிற்கும். இங்கே ஈஸ்வரி அம்மனின் குடத்தில் தாலியாக ஏறி நிற்கிறது. தூரத்தில் ஒலிபெருக்கியில் திருவிளையாடல் திரைப்பட வசனம் ஒலிக்கிறது. “திருமணத்துக்கு முன்னால் ஒரு பெண் தகப்பனுக்குக் கட்டுப்பட்டவள். திருமணமாகிவிட்டாலோ அவள் கணவனுக்குத்தான் கட்டுப்பட்டவள்” சிம்மக்குரலோனின் குரலில் பெருந்தெய்வ வழிபாட்டின் மீதும் ஆணாதிக்கச் சிந்தனை ஏறி நிற்கிறது.

(கதை சொன்னவர்கள்: எஸ்.மகாராஜன், என்.சுந்தரி, வடுகச்சி மதில்.

சேகரித்தவர்: ஹெப்ஸிபா சாம்)

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x