Published : 01 Mar 2020 11:36 AM
Last Updated : 01 Mar 2020 11:36 AM

போகிற போக்கில்: அசத்தலான ஆடை ஓவியங்கள்

அன்பு

மனத்துக்குப் பிடித்த ஓவியங்களைச் சுவர்களில் மாட்டி ரசிப்பதைவிட ஆடையில் வரைந்து அணிந்துகொள்ளப் பலரும் ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர். குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை நேர்த்தியான வண்ணங்களில் ஆடைகளில் வரைவதில் வல்லவராக உள்ளார் சென்னையைச் சேர்ந்த மாயா

சிறு வயதிலேயே ஓவியம் வரைய சுயமாகக் கற்றுக்கொண்ட மாயாஸ்ரீ அக்ரலிக், எண்ணெய் ஓவியம், சுவர் ஓவியம் எனப் பலவிதமான ஓவியங்களைத் தீட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர். தன்னுடைய குழந்தைகளுக்காக ஆடைகளில் ஓவியங்களை வரையத் தொடங்கிய மாயாவுக்கு, அதுவே சுயதொழிலாக மாறிவிட்டது.

கணவர் தந்த ஊக்கம்

குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களான லிட்டில் கிருஷ்னா, டாம் அண்ட் ஜெர்ரி, ஸ்பைடர் மேன், ஃப்ரோஸன் சகோதரிகள் போன்ற உருவங்களை டி-ஷர்ட்களில் ஓவியங்களாக வரைந்து விற்பனை செய்துவருகிறார். “ஸ்கூல்ல படிக்கும்போது பாடத்தைக் கவனிப்பதைவிட அதிகமா ஆசிரியர்களை ஓவியமாக வரைந்திருக்கிறேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வரையக் கற்றுக்கொண்டேன். ஐ.டி. துறையில் வேலை, திருமணம் என வாழ்க்கை பரபரப்பாகச் சென்றதால் ஓவியம் வரைவதைக் குறைத்துக்கொண்டேன். பிறகு என்னுடைய கணவர்தான் ஓவியக் கண்காட்சிகளுக்கு என்னை அழைத்துச்சென்று மீண்டும் ஓவியம் வரைவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தார். அவரது துணையோடு மூன்று ஓவியக் காட்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளேன்” என்கிறார் மாயாஸ்ரீ.

பொதுவாக, சமூக வலைத்தளத்தைப் பார்த்து பலர் ஓவியம் வரையக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், மாயாவோ தனக்குத் தெரிந்த அடிப்படை ஓவிய முறைகளைப் பின்பற்றி சோதனை முறையில் புதுமையான ஓவியங்களை வரைகிறார். “ஆடைகளில் ஓவியம் வரைவது எனக்குப் புதிதாகவும் ஆர்வமாகவும் இருந்தது. இந்த ஆடை ஓவியங்களைத் தொடக்கத்தில் அக்ரலிக் பெயின்ட்டிங்கில்தான் தொடங்கினேன். ஆடையில் ஓவியம் வரைந்த பிறகு அதை நன்றாகக் காயவைக்க வேண்டும். பின்னர் ஆடையின் பின்புறத்தில் அயர்னிங் செய்து பயன்படுத்தலாம். பார்க்க அழகாக இருக்கும் இந்த ஆடை ஓவியத்தில் பல சவால்களும் உள்ளன.

சில வகை பெயின்ட்டுகள் துவைத்தவுடன் கரைந்துவிடும். அதனால், ஓவியங்களுக்குத் தேர்வுசெய்யும் பெயின்ட்டுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். அதேபோல் அடர் நிற ஆடைகளில் வெளிர் நிறத்தில் வரைந்தால், அது பிரகாசமாகத் தெரியாது. அதற்காக முதலில் வெள்ளை நிறத்தை அடித்துவிட்டு வரைய வேண்டும்” என்கிறார் மாயாஸ்ரீ. ஓவியம் வரையக் கற்றுக்கொண்டால் பிள்ளைகளின் சுவர் கிறுக்கல்களைக்கூட வித்தியாசமான ஓவியமாக மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக உள்ளது மாயாவின் கார் ஓவியம்.

மாயாவின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/Mayascustomizedtshirt/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x