Published : 01 Mar 2020 11:09 AM
Last Updated : 01 Mar 2020 11:09 AM

நிகரெனக் கொள்வோம் 06: சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி

குழந்தைகளை நாம் குழந்தைகளாகப் பார்க்கிறோமா, ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளை என்று பார்க்கிறோமா என்ற கேள்வியைப் பெற்றோர்களிடம் கேட்டால் பலவிதமான பதில்கள் கிடைக்கலாம்.

“ஆம்பளப் புள்ளைய ஆம்பளப் புள்ளையா பார்க்கணும். பொம்பளப் புள்ளைய பொம்பளப் புள்ளையா பார்க்கணும்”

“அதெப்படிங்க ஆண் ஆயிரம் அடி தாண்டுவான், பெண் தாண்ட முடியுமா?”

“இல்லையே, நாங்க ரெண்டு பேரையும் சமமாதான் நடத்துறோம்”

“ஊர் உலகத்துல எப்படியோ, எங்க வீட்ல ஆணும் பெண்ணும் சமம்தாங்க”

- இப்படியான பல பதில்கள் கிடைக்கலாம். அந்தப் பதில்களில் சமத்துவம் சரி என்பதும் தவறு என்பதும் இருக்கும். ஆண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் தந்து பெண் பிள்ளைகளை அடக்கி வைக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் இருவரையும் சமமாக வளர்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஆனால், அது பெரிய இடைவெளி அல்ல. மூன்று அல்லது நான்கு கேள்விகளுக்கான பதிலில் அது தொலைந்துவிடும்.

‘உங்கள் வீட்டில் பெண் வீடு கூட்டுவாளா பையனா?’

‘பெண் பிள்ளையை எங்கே படிக்க வைக்கிறீர்கள்? பையனும் அதே பள்ளியில்தான் படிக்கிறானா?’

‘பையனைப் பற்றிய உங்கள் கனவு என்ன? பெண் பிள்ளை பற்றி?’

‘பையன் விளையாடுவதுபோல் பெண் பிள்ளையை விளையாட அனுமதிக்கிறீர்களா?’

- இப்படி அடுத்தடுத்த கேள்விகளுக்குள் நுழையும்போது வேறுபாடுகள் வலுத்துக்கொண்டே போகும். இவ்வேறுபாடுகளைக் களைவதைவிடச் சமாளிக்கக் கற்றுக்கொள்கிறோம்.

“நீயும் வீடு கூட்டு, பாத்திரம் விளக்குன்னு ஆண் பிள்ளைக்குச் சொல்கிறோம். எங்கே கேக்குதுங்க”

“என்னன்னாலும் கொள்ளி வைக்கப்போறவன், கஞ்சி ஊத்தப்போறவன் அவம்தானே”

“யார் யார் என்ன வேலை செய்யணும்னு இருக்குல்ல. காலம் காலமா நடக்குறத மாத்த முடியுமா?”

- என்று தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறவர்கள் நம்மிடையே அதிகம்.

பெற்றோர்களின் இது போன்ற எண்ணற்ற பாகுபாடான செயல்பாடுகள், பேச்சுகள் பற்றி ஆண் குழந்தைதைகளும் பெண் குழந்தைகளும் என்னவெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் விரும்புவதில்லை.

சமத்துவம் போதிக்கும் பள்ளிச்செயல்பாடுகள்

பாலினப் பாகுபாட்டைக் களைவதில் பள்ளிக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்தப் பணியில் சிறப்பாகப் பங்களிக்கும் பள்ளிகள் நம்மிடையே சில உள்ளன. ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் வேறுபாடற்றவர்கள் என்பதைப் பள்ளி வளாகத்துக்குள் உணரவைக்கின்றனர். உடலியல் வேறுபாடுகள், அவற்றுக்கான கடமைகளைப் பற்றிப் புரிய வைக்கின்றனர். உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகளைப் பற்றி அதிகம் பேசுகின்றனர். ஆண் - பெண் பிள்ளைகளிடம் ஆழமான உரையாடலை நடத்தும்போது அது சாத்தியப்படுகிறது. ஆனால், அப்படியான உரையாடல்களைக் கடந்தும் சில நேரம் பாலினப் பாகுபாடு எழுந்து நிற்கத்தான் செய்கிறது என்று கூறுகிறார் ‘புவிதம்’ பள்ளியை நடத்திவரும் ஆசிரியர் மீனாட்சி. “எதிலெல்லாம் ஆண்கள் சிறந்தவர்கள் என்று ஒருமுறை கேட்டேன். பளு தூக்குவதில் என்றனர். உடனே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பளு தூக்கும் செயல்பாட்டை அரங்கேற்றினோம். பெண்கள் பலரால் சுலபமாகப் பளு தூக்க முடிந்தது. ஆனால், ஆண்களில் சிலரால் மட்டுமே அது முடிந்தது.

அவர்களுக்குச் சற்று வெட்கமாக இருந்தது. உரையாடினோம். மீண்டும் அதே கேள்விக்கு வந்தோம். விவசாயம் என்றனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கி மூன்று மாதங்கள் கொடுத்தோம். ஆண் பிள்ளைகள் விரைந்து செயல்பட்டனர். பெண்கள் பொறுப்பாகப் பார்த்துப் பார்த்து, பொறுமையாக, பாதுகாப்பாகப் பயிர்களை வளர்த்தனர். பெண்கள் அளவுக்கு நேர்த்தியாகச் செயல்பட முடியாததை ஆண் குழந்தைகள் உணர்ந்தனர். அடுத்த முறை செய்யும்போது ஒரு பையன் ஒரு பெண் என்று இதே வேலையை ஒப்படைத்தோம். இணைந்து செயல்பட்டதில் பலர், அதாவது ஆண்களும் பெண்களும் வெற்றிபெற்றனர். பள்ளியில் முன்னெடுக்கப்படும் எந்த வேலையிலும் இணைந்து செயல்படுதலை முதன்மைப்படுத்துவோம். அதையும் கடந்து ஆண்கள் செய்யும் வேலையாக இந்தச் சமூகம் குறிப்பிடும் பளு தூக்குதல், வெளியே செல்லுதல், மரம் ஏறுதல் போன்றவற்றைப் பெண்கள் செய்ய ஊக்குவிக்கிறோம். அதேபோல் சுத்தம் செய்தல், அலங்கரித்தல், பாசி கோத்தல், மாதவிடாய் பற்றிப் புரிந்துகொள்ளுதல், அவ்வளவு ஏன் மாதவிடாய்க்கான நாப்கின் தயாரித்தலில் ஈடுபடுத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஆண் குழந்தைகளைப் பயிற்றுவிக்கிறோம். தொடர் உரையாடல், தொடர் செயல்பாடுகள்தாம் மாற்றத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்றார்.

“எங்கள் பள்ளியில் படித்து வேலைக்குப்போன, குடும்பம் நடத்துகிற ஆண்கள் முன்னுதாரணமாக இருப்பதைப் பெருமையாக உணர்கிறேன். இவர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் வித்தியாசத்தைப் பார்க்கிறோம்” என்கிறார் மீனாட்சி.

செயல்பாடுதான் பதில்

இதைச் செய் என்று சொல்லப் பழகியுள்ள நாம், செயல்படப் பழக வேண்டியுள்ளது. சரியான பதில் என்பதற்கும் சரியான செயல்பாடு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வார்த்தைக்கும் செயல்பாட்டுக்குமான இடைவெளியைப் போன்றது அது. வீட்டிலும், பள்ளியிலும் நாம் சொல்வதை நம் குழந்தைகள் கேட்பதில்லை. வேறு வழியில்லாமல் சில வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர். அவர்கள் உற்றுப்பார்ப்பது, வார்த்தைகளுடன் இணைந்த நமது செயல்பாடுகளைத்தான். ஆண், பெண் வேறுபாடுகள் இல்லாமல் நமது வீடுகள் உள்ளனவா?

“ஒரு பொம்பளையா இதுக்குமேல் நான் என்ன செய்ய முடியும்?”

“இதல்லாம் ஆம்பளையோட வேலைதான?”

“வெளியிலிருந்து ஆயிரம் பிரச்சினையோடு வரும் ஆம்பிளைக்கு அனுசரணையா இருக்கணும்னுகூடத் தெரியாதா?”

“ஐயைய்யோ இன்னைக்கு வந்து என்ன சொல்லப்போறாரோ?”

- இது போன்றவற்றை நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும்போது, அவர்களின் சொற்களுக்கிடையே ஒளிந்து கிடக்கும் அதிகாரத்தையும் பயத்தையும் சமத்துவத்தின் அடையாளமாகக் கொள்ள முடியுமா? நமது அன்றாட வாழ்க்கை முறையைக் கேள்விக்குட்படுத்தாமல் நம் பிள்ளைகளைச் சமத்துவமாக வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொள்வது நகைமுரண்தானே!

(சேர்ந்தே கடப்போம்)

கட்டுரையாளர்,

கல்விச் செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x