Published : 29 Feb 2020 11:40 AM
Last Updated : 29 Feb 2020 11:40 AM

வீடு கட்ட விதிமுறைகள் என்னென்ன?

அனில்

நாம் வாங்கியிருக்கும் வீட்டு மனை முழுவதும் வீடு கட்ட பொதுவாக அனுமதி கிடைப்பதில்லை. உதாரணமாக 1,200 சதுர அடி மனை வாங்கி இருந்தோம் என்றால், அதில் முழுவதுமாக வீடு கட்ட முடியாது. நிலத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். எவ்வளவு இடம் விட வேண்டும் என்பது நிலம் எந்த வரையறைக்கு உட்பட்டது என்பதைப் பொறுத்து மாறுபடும்.

அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு அளவு, நகராட்சிப் பகுதி என்றால் ஒரு அளவு எனத் தனித் தனி வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடியோ அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும்.

50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும். அதே போல வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். வாகனங்கள் நிறுத்தும் வசதிக்காகவும் காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த வரைமுறைகள். மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (floor space index) என்று சொல்வார்கள்.

இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடம் கட்ட முடியும். வீடு கட்டும் அளவு முடிவான பிறகு வீட்டுக்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அந்த வீட்டுக் கட்டுமானத் திட்டத்துக்குச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்பில் அனுமதி வாங்கும் முன்பு அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானில் கையெழுத்து வாங்க வேண்டும்.

அதாவது அந்த பிளானை அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் அங்கீகரிக்க வேண்டும். பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். வீட்டில் மழை நீர் சேமிப்புக்கான வசதி பிளானில் இருக்க வேண்டும். அது அனுமதி வாங்கும்போது பரிசோதிக்கப்படும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனுமதி வர ஒரு மாத காலம்வரை ஆகக்கூடும். வீட்டுக் கட்டுமானத் திட்டம் வரத் தாமதமாகிறது என நினைத்து அதற்கு முன்பே கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கூடாது. பிளானில் காட்டியுள்ளபடி வீடு கட்டப்பட வேண்டும். இல்லையெனில் பின்னால் அதிகாரிகள் ஆய்வுசெய்யும்போது பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x