Published : 29 Feb 2020 11:09 AM
Last Updated : 29 Feb 2020 11:09 AM

நிலவில் வீடு கட்ட கட்டுமானக் கல் தயார்!

விபின்

நிலா எப்போதும் பல கற்பனைகளை உருவாக்கக்கூடியது. நிலவைப் பற்றிய கட்டுக் கதைகளும் அதிகம். நீல் ஆம்ஸ்டார்ங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் இ அல்ட்ரின் ஆகிய மூவரும் 1969-ல் நிலவில் கால்வைத்ததுடன் இந்தக் கட்டுக் கதைகள் முடிவுக்கு வந்தன. இப்போது நிலவில் மனிதர்கள் குடியிருக்க முடியுமா என்ற கோணத்தில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வில் இந்தியாவும் ஈடுபட்டுவருகிறது. அதற்காக சந்திராயன்-3 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் நிலவில் குடியிருப்பை நிறுவவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், நிலவில் குடியிருப்பு அமைப்பதற்கான செங்கல்லைக் கண்டுபிடித்துள்ளது.

நிலவுக்கு முதன் முதலில் சென்ற அப்போலோ விண்கலம் கொண்டுவந்த லூனர் ரெகோலித் சிமுலண்ட் என்னும் பொருளுடன் 96.6 சதவீதம் ஒத்துப்போகக்கூடிய பொருளில் இந்தச் செங்கல்லை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்தக் கல் ஸ்பேஸ் பிரிக்ஸ் எனப் பெயரிடப் பட்டுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டுவந்தனர். நிலவில் உள்ள மண்ணுக்கு மாற்றாக ஒரு பொருளில் இந்தச் செங்கல்லைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற சவாலான ஆராய்ச்சியின் முடிவில் இந்தச் செங்கல்லை உருவாக்கியுள்ளனர்.

பாக்டீரியா மூலம் இந்தப் பொருளை உருவாக்கியுள்ளதாகச் சொல்கிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இன்று கட்டுமானத் தொழில்நுட்ப முறையான பயோசிமெண்டேஷனில் (biocementation) இந்தக் கல்லை உருவாக்கியுள்ளனர். பொடியாக இருக்கும் லூனர் ரெகோலித் சிமுலண்ட்டை இந்தத் தொழில்நுட்ப முறையில் 15 இலிருந்து 20 நாட்களுக்குள் ஒரு செங்கல்லாக வளர்த்து எடுத்துள்ளார்கள்.

புவியீர்ப்பு விசை குறைவான நிலையிலும் இந்தக் கட்டுமானக் கல் எப்படி இயங்குகிறது என்பதையும் விஞ்ஞானிகள் சோதித்துப் பார்த்து வெற்றியடைந்துள்ளனர். கட்டுமானக்கல் தயாராகிவிட்டது, இனி நிலவில் வீடு கட்டிக் குடிபோக வேண்டியதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x