Published : 29 Feb 2020 09:44 AM
Last Updated : 29 Feb 2020 09:44 AM

மருத்துவம் தெளிவோம்! 24: கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகளைச் சாப்பிடலாமா?

கு. கணேசன்

மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய் அடைப்பு போன்றவை நம்மைப் பாதிப்பதற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது ஒரு முக்கியக் காரணம். நாள்பட்ட தண்ணீர்க் குழாய்களில் பாசி படிந்து அடைப்பதைப் போல உடலிலுள்ள ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் படிந்து அடைத்துக்கொள்வதுதான் இந்தப் பாதிப்புகளுக்கு அடிப்படைக் காரணம்.

நம் ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பலதரப்பட்ட மாத்திரைகள் பயன்படுகின்றன. அவற்றில் ஒரு வகை ‘ஸ்டாடின்’ மாத்திரைகள். முக்கியமாக, ‘குறை அடர்த்திக் கொழுப்புப் புரதம்’ (Low-density lipoprotein - LDL) என அழைக்கப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இந்த மாத்திரைகள் உதவுகின்றன.

கொலஸ்ட்ரால் நமக்குத் தேவையில்லையா?

கொலஸ்ட்ரால் நமக்கு மிகவும் தேவையான சத்துப் பொருள்தான். நம் உடலில் ஹார்மோன்களின் உற்பத்திக்கு கொலஸ்ட்ரால் மிக அவசியம். கொழுப்பில் கரை யும் வைட்டமின்களும் பித்தநீர் உப்புகளும் கொலஸ்ட்ரால் இல்லாமல் உற்பத்தியாக முடியாது. உடல் செல்களின் உறைகளைத் தயாரிக்கவும் நரம்புகளில் செய்திகள் கடத்தப்படவும் கொலஸ்ட்ரால் தேவை.

மாத்திரைகள் மூலம் குறைப்பது தவறில்லையா?

உடலில் கொலஸ்ட்ரால் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. அளவுக்கு அதிகமாகும்போதுதான் மாரடைப்பு உள்ளிட்ட ஆபத்துகள் முளைக்கின்றன. ஆகவேதான், கொலஸ்ட்ராலை அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலை மாத்திரைகள் மூலம் குறைப்பதில் தவறில்லை.

‘ஸ்டாடின்’ மாத்திரைகள் எப்படி கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன?

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உற்பத்தியாகும் ஓர் இடம் கல்லீரல். நாம் சாப்பிடும் கொழுப்பு உணவிலிருந்து கல்லீரல் இதைத் தயாரிக்கிறது. இந்தத் தயாரிப்புக்கு ‘ஹெச்எம்ஜி-கோஏ ரெடக்டேஸ்’ (HMG-CoA reductase) என்னும் என்சைம் உதவுகிறது. ஸ்டாடின் வகை மாத்திரைகள் இந்த என்சைம் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகின்றன அல்லது தடுக்கின்றன. அதன் பலனால் கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி குறைந்துவிடுகிறது. இதன் பலனால் கொலஸ்ட்ரால் ரத்தத்துக்கு வருவதும் குறைந்துவிடுகிறது.

கொழுப்பு இல்லாதவர்களும் கொலஸ்ட் ரால் மாத்திரையைச் சாப்பிட வேண்டுமா?

உடல் தசைகளில் உள்ளது கொழுப்பு. ரத்தத்தில் உள்ளது கொலஸ்ட்ரால். உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க சாத்தியம் இருக்கிறது.

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடுவதற்குக் கொழுப்புணவு சாப்பிடுவது மட்டுமே காரணமல்ல; வயது, பாலினம், பரம்பரை, கல்லீரல் செய்யும் பணி ஆகிய நான்கும் சேர்ந்துதான் ரத்த கொலஸ்ட்ரால் அளவைத் தீர்மானிக்கின்றன. முக்கியமாக, கொழுப்புணவைக் குறைத்துக்கொண்டு, மாவுச் சத்துள்ள அரிசி உணவை அதிகமாகச் சாப்பிட்டாலும் அந்த அதீத மாவுச் சத்தை கொலஸ்ட்ராலாக மாற்றி கல்லீரல் சேமித்துக்கொள்ளும்.

ஆகவேதான், கொழுப்பு உணவைக் குறைவாகச் சாப்பிடுபவர்களுக்கும் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் இது போன்ற பிற காரணங்களால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க சாத்தியமிருக்கிறது. அப்போது இவர்களும் கொலஸ்ட்ரால் மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.

கொலஸ்ட்ரால் வகைகள் என்னென்ன? அவை எவ்வளவு இருக்க வேண்டும்?

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை நான்கு விதமாகப் பார்க்கிறது மருத்துவம்.

1. மொத்த கொலஸ்டிரால்.

2. டிரைகிளிசெரைடு.

3. எல்.டி.எல். கொலஸ்டிரால்.

4. ஹெச்.டி.எல்.

கொலஸ்டிரால்.

பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் மொத்த கொலஸ்டிரால் 200 மி.கி./டெ.லிட்டருக்குக் குறைவாகவும், டிரைகிளிசெரைடு 150 மி.கி./டெ.லி.க்குக் குறை வாகவும், எல்.டி.எல். கொலஸ்டிரால் 100 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். ஹெ.ச்.டி.எல். கொலஸ்டிரால் 50 மி.கி./டெ.லி.க்கு அதிகமாக இருக்க வேண்டும்.

மாத்திரைகளின் பலன்கள்

இது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை நன்றாகக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக, எல்.டி.எல். கொலஸ்ட்ராலை எல்லை தாண்டாதவாறு இவை பார்த்துக் கொள்கின்றன; ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகின்றன; டிரைகிளிசெரைடு அளவையும் கட்டுப்படுத்துகின்றன.

மேலும், ரத்தக் குழாயின் உள்பக்கத்தில் அழற்சி ஏற்படுவதைத் தடுக்கின்றன. இதன் பலனால், ரத்தம் உறைவதைத் தடுத்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைப் பாதியாகக் குறைத்துவிடுகின்றன. இப்படி மாரடைப்பு/பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கும் முதன்மைத் தடுப்பாக (Primary prevention) ஸ்டாடின் மாத்திரைகள் பலன் தருகின்றன.

மாத்திரைகள் யாருக்கு அவசியம்?

ரத்தத்தில் மொத்த கொலஸ்டிரால் 200 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும், எல்.டி.எல். கொலஸ்டிரால் 100 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும் உள்ள அனைவரும் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் உள்ள நீரிழிவுக்காரர்களுக்குப் பத்தாண்டுகளுக்கு மேலாக நீரிழிவு இருந்தால் அவர்களுக்கும் இந்த மாத்திரைகள் தேவைப்படும்.

ரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்டிரால் 100 மி.கி./டெ.லி.க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் விதி அனைவருக்கும் பொதுவானது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் – அதாவது புகைபிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், பரம்பரை ரீதியில் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு வந்தவர்கள் - ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு எல்.டி.எல். கொலஸ்டிரால் 70 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவே இருக்க வேண்டும்.

இந்த அளவு அதிகமானால் ஸ்டாடின் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் குறைந்ததும் மாத்திரையை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால் மறுபடியும் கொலஸ்ட்ரால் கூடிவிடும். மாறாக, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரை அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க மாத்திரை சாப்பிடும் அனைவரும் உணவுக் கட்டுப் பாட்டையும் பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். சரியான உணவையும் உடற் பயிற்சிகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் 10-லிருந்து 20 சதவீத ரத்த கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். மீதி உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க ஸ்டாடின் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். பாலினம் காரணமாகப் பெண்களுக்கு ஆண்களைவிட கொலஸ்ட்ரால் இயற்கையிலேயே அதிகமாக இருக்கலாம்.

பக்கவிளைவுகள் ஏற்படுமா?

உடல்வலியும் தசைவலியும் சிலருக்குப் படுத்தும். இவர்கள் மருந்தின் அளவை மருத்துவரின் ஆலோசனைப்படி குறைத்துக் கொண்டால் அல்லது இரண்டு வேளைக்குப் பிரித்துச் சாப்பிட்டால் இந்தத் தொல்லைகள் குறைந்துவிடும். இன்னும் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் மிகச் சிறிய அளவில் ஏற்படுவதுண்டு.

‘ஸ்டாடின்’ மாத்திரை சாப்பிடுபவர்கள் மது குடிக்கக் கூடாது. மதுவின் தாக்குதலால் கல்லீ ரல் பாதிக்கப்பட்டிருக்கும். அப்போது ஸ்டாடின் மாத்திரையைச் சாப்பிடும்போது கல்லீரல் பாதிப்பு இன்னும் அதிகமாகும். மேலும், ஸ்டாடின் மாத்திரையின் கொலஸ்டிராலைக் குறைக்கும் ஆற்றலையும் மது குறைத்துவிடும்.

மாற்றுவழி இல்லையா?

மாத்திரைகளைவிட முக்கியமானது, நம் வாழ்க்கை முறை.

* வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்புப் பயன்பாட்டைக் குறைப்பது,
* முழுத் தானிய உணவு வகையை உண்பது,
* துரித உணவு வகையைத் தவிர்ப்பது,
* அதிக கொழுப்புள்ள இறைச்சி/ எண்ணெய் வகையைக் குறைப்பது,
* மீன், காய்கறி, பழங்கள், கொட்டை உணவு வகையை அதிகம் உண்பது,
* பேக்கரி உணவையும் நொறுக்குத் தீனியையும் தவிர்ப்பது,
* புகைப்பதை நிறுத்துவது,
* மதுவை மறப்பது,
* மன அழுத்தம் குறைப்பது,
* தேவையான ஓய்வு எடுப்பது,
* நடைப்பயிற்சி /யோகா/ தியானம் மேற்கொள்வது
இதுபோன்ற ஆரோக்கிய வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்தால் கெட்ட கொலஸ்டிராலுக்கு ரத்தத்தில் இடமில்லாமல் போகும். நல்ல கொலஸ்டிரால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.

மொத்த கொலஸ்ட்ரால் கூடும் சாத்தியம் குறையும். அப்போது கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகளின் தேவையும் குறைந்துவிடும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com n டாக்டர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x