Published : 28 Feb 2020 11:29 AM
Last Updated : 28 Feb 2020 11:29 AM

நயன்தாரா நழுவிவிட்டார்! - வரலட்சுமி நேர்காணல்

அப்பாவைப் போலவே உற்சாகம் குறையாமல் வலம் வரும் வரலட்சுமி இருபத்தைந்து படங்களில் நடித்து முடித்துவிட்டார். நிஸார் இயக்கத்தில் ‘கலர்ஸ்’ என்ற படத்துக்காக வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தவர், படப்பிடிப்பு இடைவேளையில் நம்முடன் உரையாடினார். அதிலிருந்து ஒரு பகுதி.

இருபத்தைந்து படங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள்; கற்றது என்ன?

ஒரு குழந்தை பள்ளிக்கூடத்தை எப்படிப் பார்க்கிறதோ, அப்படித்தான் படப்பிடிப்புத் தளத்தைப் பார்க்கிறேன். நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என அனைவரிடமிருந்தும் சினிமா தொடர்பாக ஏதாவது ஒரு விஷயத்தைத் தினசரி கற்றுக்கொண்டே இருக்கிறேன்.

தொடர்ந்து வில்லியாகவே நடிக்கிறீர்கள்; அதை விரும்புகிறீர்களா?

அப்படி அல்ல. இதே கேள்வியை பிரகாஷ்ராஜ் சார் பண்ணும்போது யாருமே கேட்கவில்லை. ஆண் நடித்தால் ஒப்புக்கொள்ளும்போது, பெண் நடித்தால் ஒப்புக் கொள்ளக் கூடாதா? எனக்கு எது வித்தியாசமாகத் தோன்றுகிறதோ, அதைச் செய்துகொண்டிருக்கிறேன். மூன்று படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. அனைத்திலுமே பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வில்லியாக நடிப்பதற்கு இப்போது திரைத்துறையில் யாருமே இல்லையே. ரம்யா கிருஷ்ணனுக்குப் பிறகு யாருமே வில்லியாக நடிக்க முன்வரவில்லை. நாயகியாகத்தான் பண்ணுவேன் என்பார்கள், அதை உடைத்து வில்லி என்றில்லாமல், மொத்தப் படத்தின் கதையையும் நகர்த்திச் செல்லும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.

வில்லியாக நடிப்பதில் அனுகூலம் இருக்கிறதா?

நாயகியாக நடிக்கும்போது தலைமுடி பறக்க வேண்டும், கண் சிமிட்ட வேண்டும் என இப்படித்தான் போய்க்கொண்டிருக்கும். வில்லியாக நடிக்கும்போது ரவுடித்தனத்தில் நமக்குத் தோன்றுவதைப் பண்ணலாம். நாயகி - வில்லி என அனைத்துமே நடிப்புதான் என்றாலும், இயக்குநருக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால், கதாபாத்திரம் என்பது இயக்குநரின் சிருஷ்டி. நடிகருக்கு அதில் ஓரளவுக்கே வேலை இருக்கிறது. திரைக்கதை எழுதும்போது என்னை வில்லியாக நினைத்து எழுதுவதால் நான் எழுதுபவரின் நினைவில் நிற்கிறேன் என்பது என் நடிப்பால் கிடைத்த இடமாக இருக்கலாம்.

நீங்கள் தொடங்கியுள்ள ‘சேவ் சக்தி’ அமைப்பின் மூலம் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

‘சேவ் சக்தி’ இப்போது அறக் கட்டளை ஆகியுள்ளது. வன்முறை, துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், குழந்தைகளுக்கு உதவிவருகிறோம். கடந்த பிறந்த நாளின்போது ஒரு குழந்தையின் பாதுகாவலராக மாறிப் படிக்கவைத்துவருகிறேன். இந்தப் பிறந்த நாளுக்குக் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கூட்டவுள்ளேன். கல்லூரியில் நடைபெறும் விழாக்களுக்குச் சில நடிகர்களை அழைக்கும் போது பணம் வாங்குவார்கள். நான் அதற்குப் பதிலாக சீட் கேட்பேன். அதில் குழந்தைகளைப் படிக்க வைப்பேன். மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாப்கின் இயந்திரம் வைத்து வருகிறோம். இன்றும் பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்குச் செல்வதில்லை. அது இயற்கையான ஒரு விஷயம். அதற்காகப் படிப்பை நிறுத்தக் கூடாது. ஆகையால் நாப்கின் இயந்திரங்களை அனைத்துப் பள்ளிகளிலும் வைப்பதும் அதைப் பராமரிப்பதும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

‘மீ டூ’ இயக்கம் தமிழ் சினிமாவில் பெரிய சலனங்களை ஏற்படுத்த வில்லையே?

பெண்கள் அனைவரும் தைரியமாக இருந்தால் பேசலாம். பெண்கள் சிலர் நாம் பேசினால் சினிமா வாழ்க்கை என்னவாகுமோ என்று தயங்குகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நான், சின்மயி உள்ளிட்ட சிலர் பேசினோம். அதற்குப் பிறகு எந்தவொரு நாயகியுமே பெரிதாகப் பேசவில்லை. அவர்களுக்கு ஒரு விஷயம் நடக்கும்போது மட்டுமே, அதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். ராதாரவி தன்னைப் பற்றிப் பேசியவுடன்தான் நயன்தாரா கோபமாகி அறிக்கை கொடுத்தார். ஆனால், அதற்கும் முன்பு மீடூ வெடித்த நேரத்தில் நயன்தாரா பேசியிருந்தால் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஏனென்றால், அவரெல்லாம் பெரிய இடத்தில் இருக்கிறார். நாங்கள் எல்லாம் ஜூனியர் நடிகர்கள், அவரெல்லாம் சீனியர் நடிகை. பெரிய நடிகைகள் பேசும்போது சீரியஸாக எடுத்துக்கொள்வோம். ஆனால், அவர்களில் யாருமே வாயைத் திறக்கவே மறுக்கிறார்கள். மற்ற பெண்களுக்கு நடக்கும்போது நமக்கு என்ன என்று இருப்பதுதான் இங்கே பிரச்சினை.

பொதுவாக சினிமா துறையில் பெண்கள் நடத்தப்படும் விதம் மாறியுள்ளதா? பெண் கலைஞர்களுக்கான மரியாதையும் பாதுகாப்பும் அதிகரித்துள்ளனவா?

நான் பணிபுரிந்த வரை எந்தவொரு பிரச்சினையையும் சந்திக்கவில்லை. மரியாதை, பாதுகாப்பு என அனைத்தும் சரியாகவே இருக்கிறது. இது எல்லாம் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது. ஒரு பெண்ணாக நாம் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பது இங்கே மிக முக்கியம்.

அரசியலுக்கு வரவிருப்பதாகச் கூறியிருக்கிறீர்கள்; அது எப்போது?

இப்போதைக்கு அரசியல் இல்லை. படங்களில் தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். நான் சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்கிறேன். எதையுமே நிறுத்தவில்லை. நடிப்பு நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வர இன்னும் நேரம் இருக்கிறது.

படம்: பு.க. பிரவின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x