Published : 28 Feb 2020 11:25 AM
Last Updated : 28 Feb 2020 11:25 AM

திரை நூலகம்: ஓர் உதவியாளரின் அனுபவங்கள்

எம்.ஜி.ஆர். எனும் உச்ச நட்சத்திரத்தின் திரையுலக வாழ்க்கை குறித்து நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அரசியலுக்கு வந்தபிறகு அவருடைய பொது வாழ்க்கையின் ஆளுமையை அருகிலிருந்து கவனித்து எழுதப்பட்ட புத்தகங்கள் அரிது எனலாம். ‘சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்’ எனும் இந்த நூல் தனது சின்னச் சின்னக் கட்டுரைகளால் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

1972 தொடங்கி, அதன்பின் எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய நம்பிக்கைக்கு உரிய உதவியாளராக இருந்தவர் கே.மகாலிங்கம். அனுபவ சாட்சியம்போல் அமைந்திருக்கும் புத்தகம் இது. மிக முக்கியமாக எம்.ஜி.ஆர். சந்தித்த கடினமான தருணங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் மகாலிங்கம் எனப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஐந்து முன்னுரைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறார். அதை, 456 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 110 குறுங்கட்டுரைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய கார்களின் பதிவெண்ணாக 4777 எப்படித் தேர்வானது என்பதில் தொடங்கி, அவர் முன்னின்று நடத்திவைக்கும் திருமணங்களில் அவர் தாலியை எடுத்துக்கொடுக்கும் பாங்கு, அவருடைய கண்டிப்பு, அன்பு, அரவணைப்பு, வள்ளல் தன்மை, மனிதநேயம், வறிய மக்கள் மீதான கரிசனம், அரசியல் சாணக்கியம் என அவருடைய பன்முக ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகளைத் தாண்டி, அவருடைய அரசியல் வாழ்க்கையின் சுவாரசியப் பக்கங்களை அறிந்துகொள்ள நினைக்கும் யாருக்கும் இந்தப் புத்தகம் மற்றுமொரு புதையல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x