Published : 25 Feb 2020 10:20 AM
Last Updated : 25 Feb 2020 10:20 AM

இளமைக் களம்: சும்மா கிழி... தெறிக்கவிட்ட மும்பை இந்தியன்ஸ்!

ரேணுகா

அரங்கம் ஆர்ப்பரிக்கும் நடன அதிர்வுகள், அந்தரத்தில் நிகழும் சாகசங்கள், அமெரிக்கர்கள் மூக்கில் விரல் வைத்த நிகழ்வுகள் என தங்களுடைய திறமையால் ‘America Got Talent’ நிகழ்ச்சியில் முதன் முறையாக முதலிடம் பிடித்துள்ளது மும்பைக் குடிசைப்பகுதியைச் சேர்ந்த ‘வி-அன்பீட்டபிள்’ (V-Unbeatable) நடனக் குழு.

அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘America Got Talent’ என்ற நிகழ்ச்சி 2006-ம்ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. உலகில் எங்கு இருந்தாலும் தங்களுடைய தனித்திறமையால் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு மேடை. இதன் 15-ம் தொடரில் மும்பை தாராவி குடிசைப் பகுதியைச் சேர்ந்த வி-அன்பீட்டபிள் குழுவினர் பங்கேற்று அசாத்திய நடனத் திறமையால் முதல் பரிசான ரூ. 7.14 கோடியைத் தட்டிப்பறித்துள்ளனர். அத்துடன் இப்போட்டியில் வென்ற முதல் இந்திய குழு என்ற சாதனையையும் படைத்துள்ளனர்.

நடனம் எனும் நெருப்பு

இந்த நடனக் குழுவில் 12 - 27 வயதுடைய 29 பேர் உள்ளனர். பின்தங்கிய பகுதியிலிருந்துவந்த இந்த இளைஞர்கள் பலர் படித்துகொண்ட பகுதிநேர வேலைகளைச் செய்துவருகிறார்கள். பலருடைய பெற்றோர் தினக்கூலிகள். அடிப்படை வசதியின்றி அன்றாடத் தேவைகளுக்கே அல்லாடுகிறார்கள்.

ஆனால், இதுபோன்ற எந்த பின்னடைவும் அவர்களது நடனத் திறமையை முடக்கவில்லை. தாராவி பகுதியில் மக்களின் வறுமையை, போராட்டத்தை ராப் இசை பாடல்கள் வழியே ஹிப் ஹாப் நடனத்தின் மூலமாக வெளிப்படுத்தும் இளைஞர்கள் ஏராளம். அதில் இவர்கள் தங்கள் நடனத்திறமையால் மக்களின் கவனம்பெற்றார்கள். இவர்களில் பலர் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். இவர்களில் ஓம்பிரகாஷ், விகாஸ் என்ற இரு இளைஞர்களின் முயற்சியால் 6 ஆண்டுகளுக்கு முன்பு ‘Unbeatable’ என்ற பெயரில் இந்த நடனக் குழு தொடங்கப்பட்டது.

நண்பனின் ஆசை

தொடக்கத்தில் உள்ளூர் நடனப் போட்டிகளில் கலந்துகொண்டுவந்த இக்குழு, தாராவி பகுதியில் பிரபல நடனக் குழுவாக மாறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு இக்குழுவைத் தொடங்கியவர்களில் ஒருவரான, விகாஸ் நடன பயிற்சியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் கழுத்தின் கீழ்ப்பகுதி செயலிழந்து, அடுத்த சில ஆண்டுகளிலேயே இறந்துவிட்டார். விகாஸின் இழப்பு இக்குழுவினருக்குப் பெரும் மனசோர்வைத் தந்தது.

ஆனால், விகாஸுக்கு ‘America Got Talent’ நிகழ்ச்சியில் பங்கேற்பதுதான் லட்சியமாக இருந்தது என்பதால், அவருடைய ஆசையை நிறைவேற்ற குழுவினர் சபதம் ஏற்றனர். விகாஸை நினைவுகூரும் விதமாக அவருடைய பெயரின் முதல் எழுத்தான ‘V’ என்ற எழுத்தைச் சேர்த்து ‘V- Unbeatable’ என்று குழுவின் பெயரை மாற்றினர்.

16 மணிநேரப் பயிற்சி

பெயர் மாற்றம் உண்மையிலேயே அவர்களுக்குத் திருப்புமுனையானது. ‘America Got Talent’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக 2018-ல் ‘ஸ்டார் ப்ளஸ்’ தொலைக்காட்சியில் ‘டான்ஸ் ப்ளஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று 4-ம் இடத்தைப் பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஆடிய நடனம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த வைரல் நடனத்தைப் பார்த்த ‘America Got Talent’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஓம்பிரகாஷுக்கு, தங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு 2019 ஆண்டு மின்னஞ்சல் அனுப்பினார். “எங்களிடம் போதுமான வசதியில்லாததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே எங்களுக்கு உதவ முன்வந்தனர். ஆனால், நிகழ்ச்சியில் நாங்கள் தோற்றுவிட்டால் பணத்தைத் திருப்பிதர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் பயிற்சி எடுத்தோம்” என்கிறார் ஓம்பிரகாஷ்.

அமெரிக்கா சென்ற இக்குழு, அங்குள்ள பார்வையாளர்கள், நடுவர்களைத் தங்களுடைய முதல் நடனத்திலேயே ஆச்சரியப்படவைத்தது என்றாலும் அவர்களால் அப்போது 4-ம் இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.

இந்த ஆண்டு நடைபெற்ற ‘America Got Talent’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இரண்டாம் முறை வாய்ப்புக் கிடைத்தது. இம்முறை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நடன மேடையை தங்களுடைய அசாத்திய நடனத்தால் துவம்சம் செய்தனர் குழுவினர். அமெரிக்க நடுவர்களான சைமன், அலிஷா, ஹெய்டி, ஹோவி ஆகியோர் இவர்களின் நடனத் திறமையைக் கண்டு வாய்பிளந்து நின்றனர்.

40 குழுக்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ‘V-Unbeatable’ குழுவில் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையால் தனித்துநிற்பவர்கள். எல்லோரும் பங்கேற்கும்படி இறுதிப் போட்டியில் ‘பேட்ட’ திரைப்படத்தில் வரும் ‘மரண மாஸ்’ பாடலைத் தேர்ந்தெடுத்தார்கள். அமெரிக்க மேடையில் தமிழ்ப் பாடல் ஒலிக்க அரங்கே அதிரும் இசையின் நடுவே இக்குழுவின் நடனம் தீப்பொறிபோல் வெளிப்பட்டது.

மேலும், சைக்கிளைப் பயன்படுத்தி இவர்கள் செய்த சாகசம் காண்போரை இருக்கையின் நுனிக்கே கொண்டுவந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தங்களுடைய முழுத் திறமையும் வெளிப்படுத்தினார்கள் இக்குழுவினர். அமெரிக்க மக்களிடம் அதிகம் ஓட்டுவாங்கும் நபர்களே இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள். இறுதிப் போட்டியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு சுபத்தோடு முடிவுக்கு வந்தது.

இப்போட்டியில் முதலிடம் பிடித்த இக்குழுவினர் ஆனந்தக் கண்ணீருடன் விகாஸை நினைத்துக்கொண்டனர். விடாமுயற்சியுடன் இருந்தால் எதையும் வெல்ல முடியும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது ‘வி-அன்பீட்டபிள்’ குழு.

இறுதிப் போட்டியின் வீடியோவைக் காண: https://bit.ly/32hkaLC

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x