Published : 24 Feb 2020 11:40 AM
Last Updated : 24 Feb 2020 11:40 AM

அலசல்: தண்ணீர்... தண்ணீர்...!

தண்ணீர் வியாபாரமாவிட்ட நிலையிலும், தண்ணீருக்காக மாதம் சில ஆயிரங்களைச் செலவு செய்யும் நிலையிலும் கூட தண்ணீரின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக மட்டுமல்லாமல் பல்வேறு தொழில் செயல்பாடுகளுக்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. தொழில்துறைகளுக்கும், பொருளாதார மண்டலங்களுக்கும் முதலில் கொடுக்கப்படும் விஷயங்கள் என்று பார்த்தால் மின்சாரமும், தண்ணீரும்தான்.

ஆனால், தொழில் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் மாசுபடுத்தப்பட்டு அது சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக வெளியேற்றப்படுவதால், நிலத்தடி நீரும், நீர்நிலைகளில் உள்ள நீரும் மாசுபடுகின்றன. மேலும் நைட்ரஜன் அதிகம் உள்ள உரங்களை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதாலும் நீர் அதிகம் மாடுபடுகிறது.

இவ்வாறு மாசுபட்ட தண்ணீரில் நைட்ரஜன் அதிகம் இருப்பதாலும், வேறு சில ரசாயனங்கள் கலப்பதாலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாறிவிடுகிறது. குறிப்பாக குழந்தைகள் மாசுபட்ட நீரைப் பருகுவதால், அவர்களுடைய வளர்ச்சி குன்றுவதோடு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

உலக வங்கியின் அறிக்கையில் தெரிவித்துள்ளதை பார்க்கும்போது இத்தகைய மாசுபட்ட நீரினால் அதிகம் பாதிக்கப்படும் முன்னணி நாடுகளாக இந்தியா, வியட்நாம் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவை உள்ளன.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மாசுபட்ட தண்ணீரைப் பருகும் பெண் குழந்தைகள், நல்ல நீரைப் பருகும் பெண் குழந்தைகளைக் காட்டிலும் 2.2 செமீ உயரம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிக மாசுபட்ட தண்ணீரைப் பருகுபவர்கள் 3 செமீ வரை உயரம் குறைவாக இருக்கிறார்களாம்.

இதுபோன்ற குறைபாடு மட்டுமல்ல உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் பொருளாதாரத்தில் பெரிதும் எதிரொலிக்கிறது என்பதோ, இதனால் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது என்பதோ பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. மக்களுக்குத் தெரியவில்லை என்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அரசுக்கும், அமைச்சகங்களுக்கும் இந்த விஷயம் தெரியாமல் இல்லை. ஆனால், தண்ணீர் குறித்த அக்கறை அரசுகளிடம் வெளிப்படுவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது.

நதி நீர் இணைப்பு, நதியைச் சுத்தம் செய்வது, உள்ளூர் ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைப்பது, கழிவுநீர் மேலாண்மை, நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்காமல் இருப்பது, உரத் தயாரிப்பில் ரசாயன கலப்புகளைக் கட்டுப்படுத்துவது போன்ற பல தீர்வுகள் அரசு மேற்கொள்ள வேண்டியவை.

ஆனால், அரசுகள் இவற்றில் மெத்தனமாகவே இருக்கின்றன. மத்திய அரசு ‘ஜல் சக்தி’ என்ற துறையையே தண்ணீருக்காக உருவாக்கியது பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், அதன் செயல்பாடுகள் என்று பார்க்கும்போது பெரிய அளவில் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

மத்திய அரசு பல விஷயங்களில் மிகவும் கறாராக முடிவுகளை எடுத்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நிறைவேற்றுவதில் தீர்மானமாக இருக்கிறது. தண்ணீர் விஷயத்திலும் ஜல் சக்தி துறையின் மூலம் பல மாற்றங்களை நிகழ்த்த முடியும். குடிநீரின் தர ஆய்வு, கழிவுநீர் சுத்தகரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீரை சேமிப்பதிலும், பயன்படுத்துவதிலும், கழிவுநீரை முறையாகச் சுத்திகரித்து வெளியேற்றுவதிலும் அரசுகளும், நிறுவனங்களும் உடன் மக்களும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்களில் தூய்மையான தண்ணீரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x