Published : 24 Feb 2020 08:30 am

Updated : 24 Feb 2020 08:31 am

 

Published : 24 Feb 2020 08:30 AM
Last Updated : 24 Feb 2020 08:31 AM

எண்ணித் துணிக: தலைமையேற்க தகுதி வேண்டாமா?

deserve-leadership

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை வடிவமைத்துவிட்டீர்கள், சரி. கம்பெனிக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள், ஓகே. கம்பெனி தலைவன், அதாவது எம்டி யார் என்பதை முடிவு செய்துவிட்டீர்களா? இதென்ன கேள்வி, காசு போட்டு ஸ்டார்ட் அப் துவங்குபவன் நான், என்னைத் தவிர யார் அப்பதவியில் அமர்வது என்பீர்கள். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆக முடியாது. ஸ்டார்ட் அப் துவங்குவதால் மட்டும் நீங்கள் கம்பெனி தலைவராக முடியாது. கூடாது.


இதில் ஒரு மேட்டர் இருக்கிறது. அதைச் சொன்னால் அடிப்பீர்கள். பிறகு சொன்னாலும் அடிப்பீர்கள் இருந்தாலும் அதை பிறகு வாங்கிக்கொள்கிறேன். தடியெடுத்து தானே தலைவன் ஆக முடிவு செய்துவிட்டீர்கள். அந்தத் தகுதிக்குத் தேவையான திறமைகள், குணாதிசயங்கள், தன்மைகள் பற்றி பேசுவோம். முதல் காரியமாக கம்பெனிக்கு நீங்கள் முதலாளி மட்டுமல்ல, தலைவன் என்பதை உணர்ந்தால்தான் மார்க்கெட் சவால்களை சந்தித்து பகையுடன் போர் செய்ய கிளம்பும் படைத் தளபதியாக இருக்கிறோம் என்பதை உணர்வீர்கள்.

ஸ்டார்ட் அப் துவங்கும் தலைவனுக்கென்று சில தகுதிகள் உண்டு. உங்களிடம் இவை இருந்தால் பலே, இல்லையென்றால் வளர்த்துக் கொள்ளும் வழி பாருங்கள். நெகிழ்வுத்தன்மை ‘வகுக்கும் எந்தப் போர் திட்டமும் சரியானதே, எதிரியை களத்தில் சந்திக்கும் வரை’ என்றார் அமெரிக்க படை தளபதி ‘டாம் கால்டிட்ஸ்’. போர்களத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத வகையில் மார்க்கெட் மாறும். புதிய வகையில் எதிரியின் தாக்குதல் அமையும். `படைகள் தோற்பதற்கு காரணம் போர் ஆரம்பித்து பத்து நிமிடத்திற்குள் பயனற்று போகும் போர் திட்டம் மீது வைக்கப்படும் அபரிமிதமான நம்பிக்கை’ என்றார் கால்டிட்ஸ்.

கம்பெனி தலைவன் மார்க்கெட் மாற்றங்களுக்கு ஏற்ப, போட்டியாளர் அணுகுமுறைக்கு பதிலடியாக கம்பெனி பிசினஸ் பிளானை சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கேற்ப மாற்றும் நெகிழ்வுத்தன்மை (Flexibility) கொண்டவராக இருக்க வேண்டும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று முனகாமல் சமயத்தில் தான் பிடித்தது முயலே இல்லை என்றும் புரிந்துகொள்ளும் யதார்த்த வாதம் வேண்டும்! பணிவுத்தன்மை நல்ல தலைவன் தன்னை என்றுமே முன்நிறுத்துவதில்லை.

அதனால்தான் சிறந்த கம்பெனியை தெரிகிற நமக்கு அதன் தலைவன் பெயர் தெரிவதில்லை. ‘பி அண்டு ஜி’ கம்பெனி சிஇஓ யார் என்று தெரியுமா? கோல்கேட் கம்பெனியின் தலைவன்? மொத்த நிறுவனத்தோடு சேர்ந்து உழைக்கிறோம், தனி ஆளாய் தரணி ஆள வரவில்லை என்பதை நல்ல தலைவன் உணர்வான்.

பணிவுத்தன்மை (Humility) அவரிடம் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். அதனாலேயே நல்ல தலைவன் வெற்றிகளை ஜன்னலாக பாவித்து அதனூடே மற்றவர்களை பார்க்கிறான். அவர்களே வெற்றிக்கு மொத்த சொந்தக்காரர்கள் என்கிறான். தோல்வியைச் சந்தித்தால் அதை முகம் பார்க்கும் கண்ணாடியாய் பாவித்து தன்னை மட்டும் அதில் கண்டு தவறுக்கு முழு பொறுப்பேற்கிறான்.

தவறை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறான். `வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம், அதனால் யாருக்கு பெயர் கிடைக்கும் என்று பார்க்காத வரை’ என்றார் ‘ஹேரி ட்ரூமன்’. ஸ்டார்ட் அப்பின் முதல் விற்பனையாளர் அதன் தலைவன்தான். சிறந்த தலைவன் விற்பனைத் திறன் (Salesmanship) கொண்டவனாக இருப்பது அவசியம்.

விற்பதில் சமர்த்தராக இருக்க வேண்டும். விற்பனைத் திறனில் சாமர்த்திய சாலியாக திகழ வேண்டும். தன்பிராண்டை மார்க்கெட்டில் விற்பதிலிருந்து தன் தொழிலில் முதலீடு பெறுவது வரை, திறமையான ஊழியர்களைத் தன் கம்பெனியில் சேர்ப்பது முதல் தன்னோடு உழைக்க பார்ட்னர்களை இணைப்பது வரை சிறந்த தலைவன் முதலில் சிறந்த விற்பனையாளனாக இருந்தே ஆக வேண்டும். உறுதி ஸ்டார்ட் அப் தலைவன் அனுதினமும், ஒவ்வொரு கணமும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியவனாகிறான். எல்லா முடிவுகளையும் எடுக்க தேவையான போதிய அவகாசம் அவனுக்கு வாய்ப்பதில்லை.

பல முடிவுகளைப் பணி பளுவின் அவசரத்தில் எடுக்க வேண்டி இருக்கும். முடிவெடுக்க தேவையான முழுமையான டேட்டா எல்லா நேரங்களிலும் கிடைக்காது. இருக்கும் தகவலை வைத்து சரியான முடிவுகள் எடுத்தே ஆகவேண்டியிருக்கும். இப்படி இருக்கும்போது எடுக்கும் முடிவுகள் சில சரியானதாக இல்லாமல் போகலாம். போகும். தவறுகள் நிகழலாம். நிகழும். இருந்தும் முடிவெடுக்க தயங்காமல் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் முடிவுக்கு முழுப் பொறுப்பெடுக்க தயாராய் இருக்கும் மன உறுதி தலைவனுக்கு முக்கியம்.

அதோடு எடுக்கும் முடிவுகள் தவறாகிப் போகும் போது அதிலிருந்து கற்றுக்கொள்ளும் பக்குவம் பரவலாய் தலைவனிடம் இருத்தல் அவசியம். அய்யோ, போதிய நேரம் இல்லையே, சரியான தகவல் இல்லையே என்று இழுத்தடித்து
கொண்டிருந்தால் ‘முடிவு பக்கவாதம்’ வந்து மொத்தமாய் படுத்தும். ஸ்டார்ட் அப் ஸ்டார்ட் ஆகாமல் சந்தி சிரிக்கும்.

கேட்கும் திறன் தலைவனுக்கு காது கேட்க வேண்டும் என்று கூறவில்லை. அது கேட்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் தன்னோடு உழைக்கும் ஊழியர்களிடமிருந்து தகவல் பெறும் திறனும், முடிவெடுப்பதில் உதவி கேட்கும் திறனும் மனதெளிவும் வேண்டும். முடிவெடுத்தல் என்பது அதை எடுத்த பின் அனைவருக்கும் கூறும் விஷயம் அல்ல. மற்றவரிடம் தகவல் கேட்கும், அவர்கள் கருத்துகளைப் பெற்று எடுக்க நினைக்கும் முடிவுகளை அவர்களோடு கலந்து ஆலோசித்து சரியாக இருக்கிறதா என்று சீர்தூக்கி பார்த்து எடுக்கும் கூட்டு முயற்சி.

எல்லா முடிவுகளையும் அப்படி எடுக்க முடியாதென்றாலும் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அது சம்பந்தப்படும் அனைவரின் பங்களிப்பையும் பெற்று எடுக்கும் போது முடிவுகள் பெரும்பாலும் சரியானதாக அமையும். அதோடு தன்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள், தங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று நினைக்கும்போதுதான் ஊழியர்கள் உங்களைத் தலைவனாகவே மதிப்பார்கள்.

தலைவனாகும் தகுதிகளில் சிறிதளவு தான் நாம் இங்கே பார்த்தது. தெரிந்தோ தெரியாமலோ, சரியோ தவறோ, ஸ்டார்ட் அப் தொடங்கிய பாவத்துக்கு தலைவனாகும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டீர்கள். ஆனது ஆயிற்று. அட்லீஸ்ட் அந்தப் பதவிக்கு தகுதியானவராகும் வழியைப் பாருங்கள்.


எண்ணித் துணிகதலைமைதகுதிLeadershipஸ்டார்ட் அப்ஸ்டார்ட் அப் கலாச்சாரம்கலாச்சாரம்தலைவன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author