Published : 24 Feb 2020 08:19 AM
Last Updated : 24 Feb 2020 08:19 AM

சந்தையில் களமிறங்க காத்திருக்கும் எஸ்யுவிகள்

ஜெ.சரவணன் / saravanan.j@thehindutamil.co.in

இந்திய ஆட்டோமொபைல் சந்தை எஸ்யுவி சந்தையாக மாறிவிட்டதோ என்று சொல்லும் அளவுக்கு எஸ்யுவிகள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துவருகிறது. எல்லாவற்றிலும் அதிகம் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் எஸ்யுவிகளில் திருப்தியடைவதாகத் தெரிகிறது. இதனால் எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எஸ்யுவிகளில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. இந்த ஆண்டு சந்தையில் அறிமுகமாகும் புதிய எஸ்யுவிகளைப் பற்றி பார்க்கலாம்.

கியா சோனட்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டாஸ் எஸ்யுவி மூலம் இந்தியாவில் கால் பதித்தது. அறிமுகமான சில மாதங்களிலேயே அதிகம் விற்பனை ஆகும் எஸ்யுவி என்ற இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் தனது அடுத்த இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஒன்று எம்பிவி மாடலான கார்னிவல், மற்றொன்று எஸ்யுவி சோனட். கான்செப்ட் மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யுவி செக்மன்டில் நுழைய திட்டமிட்டிருக்கிறது.

நான்கு மீட்டருக்குள் வடிவமைக்கப்படும் இந்த எஸ்யுவி ஹுண்டாய் வென்யுவுக்கு நேரடி போட்டியாகத் திகழும். வென்யு போலவே இந்த சோனட் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக கியா இருப்பது சோனட்டின் வடிவமைப்பைப் பார்க்கும்போது தெரிகிறது. வென்யு போல அப்ரைட் முகப்பு வடிவம் இல்லாமல் கொஞ்சம் செடான் போன்ற வளைவான வடிவமைப்பை கியா சோனட்டில் பார்க்க முடிகிறது.

கியாவுக்கு உரிய ‘டைகர் நோஸ்’ கிரில் எல்இடி ஹெட்லைட்டுகளுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. மேலும் காருக்கு அழகூட்டும் விதமாக பெயின்டிங்கிலும் வித்தியாசம் காட்டப்படுகிறது. கண்ணாடி, ரூஃப் ஆகியவை கருப்பு வண்ணமாக இருக்க, பானெட், பக்கவாட்டு கதவுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வண்ணம் சி பில்லரில் சென்று இணையும்படி உள்ளது. இதனால் சோனட் ஒரு மினி லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கதவின் கைப்பிடிகள் கதவோடு ஒட்டியபடி இருக்கிறது. பக்கவாட்டு கண்ணாடிகள் சிறியதாக அழகாக இருக்கிறது.

உட்புறத்தில் செல்டாஸில் பயன்படுத்தப்பட்டுள்ள 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பாஸ் நிறுவனத்தின் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இன்ஜின் ஆப்ஷன்களும் வென்யுவுக்கு போட்டியாகவே இதில் பயன்படுத்தப்படுகின்றன.

இன்டலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. வென்யுவை விட இதில் கூடுதலாக டீசல் ஆடோமேடிக் டிரான்ஸ்மிஷன் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது சிறப்பு. ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் சோனட் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x