Published : 23 Feb 2020 10:29 AM
Last Updated : 23 Feb 2020 10:29 AM

பக்கத்து வீடு: நான் கிறிஸ்டினா கோக்

எஸ்.சுஜாதா

“என்ன இது! ரொட்டியைப் பிரித்து வைத்துவிட்டு சாஸை எடுப்பதற்குள் அந்த ரொட்டி அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறது! தாவிப் பிடித்து இழுத்துவந்து, சாஸை ஊற்றிவிட்டு அலமாரியை மூடிவிட்டுத் திரும்புவதற்குள் மீண்டும் ரொட்டி மிதக்க ஆரம்பித்துவிடுகிறது! இது என்ன மேஜிக்? மேஜிக்கும் அல்ல, நடப்பது நிலத்திலும் அல்ல. விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கிறேன். ஈர்ப்பு விசை இல்லாததால் ரொட்டி மட்டுமல்ல, நானும் மிதந்துகொண்டுதான் இருக்கிறேன். நான் கிறிஸ்டினா கோக். பெண்களின் விண்வெளி நடைக்காக இங்கே வந்திருக்கிறேன்.

52 ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியனோவ் விண்வெளியில் நடந்துவிட்டார். 36 ஆண்டுகளுக்கு முன்பே ஆணுடன் சேர்ந்து ஒரு பெண் விண்வெளியில் நடந்துவிட்டார். பெண்கள் மட்டுமே விண்வெளியில் நடப்பதற்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. இதன் மூலம் பாலினச் சமநிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

எனக்குச் சின்ன வயதிலிருந்தே விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்று ஆசை. பெற்றோர் படித்தவர்கள் என்பதால் என் ஆசையை ஊக்கப்படுத்தினார்கள். பொதுவாகச் சின்ன வயது ஆசையை பலரும் வளர்ந்த பிறகு கைவிட்டுவிடுவார்கள். நான் அதிலேயே உறுதியாக நின்றுவிட்டேன். அறிவியலும் கணிதமும் எனக்கு விருப்பமான துறைகள். மின்பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அண்டார்க்டிகாவுக்கும் கிரீன்லாந்துக்கும் ஆய்வுக்காகச் சென்று பல மாதங்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் பெண்கள் மட்டுமே விண்வெளியில் நடக்கும் திட்டத்துக்காக நாசா அறிவிப்பை வெளியிட்டது. 6 ஆயிரம் விண்ணப்பங்களில் இருந்து 4 ஆண்களும் 4 பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் நானும் ஒருத்தி.

விண்வெளிப் பயணம்

கடந்த மார்ச் 14 அன்று என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் நிறைவேறியது. பூமியிலிருந்து 250 கி.மீ. உயரத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தை அடைந்தேன். மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள் சக விண்வெளி வீரர்கள். ஈர்ப்பு விசை இல்லாததால் எடை இழந்து, 2 வாரக் குழந்தையைப் போல் உணர்ந்தேன். என் தலையை நிமிர்த்தி வைப்பதற்குச் சிரமப்பட்டேன். பூமியில் நம் அசைவு பக்கவாட்டில் இருக்கும். விண்வெளியில் மேலும் கீழுமாக இருக்கும். இதைத்தான் அடிக்கடி மறந்துவிடுவேன். விண்வெளியில் எப்படி இருக்கும் என்பதைத் தண்ணீருக்குள் இருந்தபடி பயிற்சி எடுத்திருந்தாலும் அந்தரத்தில் மிதக்கும்போதும் முன்னேற்றிச் செல்லும்போதும் அற்புதமான உணர்வைப் பெற்றேன். ஒரு குழந்தையைப் போல் குதூகலித்தேன்.

விண்வெளி நிலைய ஜன்னலிலிருந்து பார்த்தால் பூமி அவ்வளவாகத் தெரியாது. கரிய வெளியில் நட்சத்திரங்கள் மின்னுவதைத்தான் பார்க்க முடியும். பலவிதமான உணவு கிடைத்தாலும் எனக்குப் பிடித்த சிப்ஸும் சல்சாவும் நாசாவின் பட்டியலில் இல்லை என்பதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். உணவுத்துகள்கள் மிதந்தால் வீரர்களுக்குப் பாதிப்பு என்பதால் உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.

பூமியில் குளிப்பதுபோல் குளியல் சாத்தியமல்ல. ஈரத்துண்டால் துடைத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை சட்டையையும் மாதம் ஒருமுறை பேண்ட்டையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மருந்து உட்கொண்டால் மாதவிடாயைத் தள்ளிப் போடலாம். இல்லை என்றாலும் பூமியைப் போலவே மாதவிடாயை எதிர்கொள்ளலாம்.

முதல் விண்வெளி நடை

ஒரு நாளைக்கு 16 முறை சூரியன் உதிக்கும் மறையும் என்பதால் இரவு, பகல் என்பது கொஞ்சம் சிக்கலானதாக இருக்கும். பெண்கள் மட்டுமே நடக்கக்கூடிய அந்த விண்வெளி நடையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது. ஆனால், இரு பெண்களுக்கான விண்வெளி உடைகள் சரியாக அமையவில்லை. விண்வெளியில் உடை மிகவும் முக்கியம். ஆபத்தான கதிர்கள் தாக்கலாம். வெப்பத்தால் பாதிக்கப்படலாம். அல்லது குளிரில் உறையலாம். அதனால், பெண்கள் மட்டுமே நடக்கும் வாய்ப்பு கைநழுவிப்போனது.

மார்ச் 29 அன்று நானும் விண்வெளி வீரர் நிக் ஹாவும் விண்வெளி நடை மேற்கொண்டோம். கீழே இருக்கும் பூமியைக் கண்டதும் மகிழ்ச்சியும் பரவசமும் என்னைத் திக்குமுக்காட வைத்தன. நான் இதுவரை பணியாற்றிய அனைத்தும், நான் நேசித்த அனைத்தும், என் முழு வாழ்க்கையிலும் பங்களிக்க விரும்பிய அனைத்தும் அந்தத் தருணத்தில் உச்சகட்டத்தை அடைந்ததாக உணர்ந்தேன். 5 மணி நேரம் வேலை செய்தோம்.

விண்வெளி நிலையத்துக்குள் அவரவர் வேலைகளைச் செய்வோம். அறிக்கைகளை நாசாவுக்கு அனுப்புவோம். உடற்பயிற்சிகளை மேற்கொள்வோம். இணையத் தொடர்பு இருந்தால் குடும்பத்தினரோடு உரையாடுவோம். அக்டோபர் 18 அன்று நானும் ஜெஸிகாவும் ‘முதல் பெண்கள் விண்வெளி நடை’யை மேற்கொண்டோம். இருவருக்கும் பரவசமாக இருந்தது. கண்களால் பேசிக்கொண்டோம். மனித குலத்துக்கான ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே தைரியத்தைக் கொடுத்தது. சூரிய மின்கலன்களை மாற்றினோம். நாசாவிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் வந்தன.

நான் ஆர்டிக்கிலும் அண்டார்டிக்காவிலும் இருந்திருக்கிறேன் என்பதால் மற்றவர்களைவிட என்னுடைய உடல் விண்வெளிக்கு ஏற்ப விரைவில் மாறிக்கொண்டது. வட துருவ ஒளியையும் தென் துருவ ஒளியையும் பூமியில் ரசித்திருக்கிறேன். அதை விண்வெளியிலிருந்து கண்டபோது, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!

உற்சாகத்துக்குக் கடிதங்கள்

என்னதான் குடும்பத்தினரிடமும் நண்பர் களிடமும் தொடர்பில் இருந்தாலும் சில நேரம் தனிமை வந்துவிடும். விண்வெளி மையத்துக்கு வரும் கார்கோ கலத்தில் என் கணவர் கடிதங்களை எழுதி அனுப்புவார். அவற்றை எடுத்துப் பல முறை படித்துக்கொண்டிருப்பேன். 250 கி.மீ. தொலைவுக்குக் கீழே நமக்காக ஒரு ஜீவன் காத்திருக்கிறது என்ற எண்ணமே மிகப் பெரிய பலத்தைக் கொடுத்துவிடும். உற்சாகம் வந்துவிடும்.

ஜெஸிகா பூமிக்குக் கிளம்பினார். நான் வரும்போது சிப்ஸும் சல்சாவும் இருக்க வேண்டும் சொல்லி அனுப்பினேன். மேலும் சில முறை விண்வெளியில் நடந்தேன். நான் பூமிக்குத் திரும்பும் நாளும் வந்தது.
மீண்டும் பூமிக்கு

பூமியை நெருங்கினேன். மனிதர்கள் தென்பட்டவுடன் மகிழ்ச்சி பொங்கியது. ஆரவார வரவேற்பு கிடைத்தது. அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அட, சிப்ஸும் சல்சாவும் காத்திருந்தன! ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுவதற்கு என் உடல் அதிகமாகச் சிரமப்படவில்லை. கழுத்து வலி, உடல் வலி கொஞ்சம் இருந்தது. என் மீது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட காலம் பூமியை விட்டுத் தொலைவில் இருக்கும்போது மனித உடல், பெண் உடல் என்ன மாற்றங்களைச் சந்திக்கிறது என்பதை அறிவதுதான் என்னை அனுப்பியதற்கான முக்கிய நோக்கம்.

ஒரு வாரத்துக்குப் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பினேன். வீடு வந்து சேர்ந்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு என்னைப் பார்த்த லிட்டில் ப்ரெளன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

விவசாயியாக இருந்த என் பாட்டியும் அறிவியல் மீதான நம்பிக்கையும்தான் என் தைரியத்துக்குக் காரணம். நீண்ட காலம் விண்வெளியில் இருந்த பெண் என்ற சாதனையைப் படைத்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. எவ்வளவு நாள் விண்வெளியில் இருந்தோம் என்பதைவிட, என்ன செய்தோம் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் சிரத்தையாக வேலைசெய்தேன். எங்களுடைய பணி மனித குலத்தை ஓரடி முன்னோக்கிச் செலுத்துமானால் அதைத்தான் மிகப் பெரிய விஷயமாகக் கருதுவேன். என் சாதனையை அடுத்து யாராவது முறியடிப்பார்கள். சாதனை என்பதே முறியடிப்பதற்குத்தானே!”

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோக், பிப்ரவரி 6 அன்று விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிவந்தார். இந்தப் பயணத்தின் மூலம் விண்வெளியில் அதிக காலம் (328 நாட்கள்) தங்கிய பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். விண்வெளியில் இருந்த காலத்தில் 13.9 கோடி மைல்கள் பயணித்து 5,248 முறை பூமியைச் சுற்றி வந்திருக்கிறார். 6 முறை (42 மணி 15 நிமிடங்கள் நேரம்) விண்வெளியில் நடந்திருக்கிறார். இந்தச் சாதனை மூலம் நிலவுக்குப் பெண்ணை அனுப்பும் திட்டத்திலும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திலும் முன்னேற்றங்களைக் கொண்டுவர முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x