Published : 23 Feb 2020 10:07 AM
Last Updated : 23 Feb 2020 10:07 AM

என் பாதையில்: தலைமுறையையே மாற்றியவர்!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் எங்கள் ஊர். இயற்கை சூழ்ந்த அழகான அந்தக் கிராமத்தில் ஏகாந்தமாகக் கோலோச்சிவந்தார் பெரும் விவசாயியான என் அப்பா. எங்கள் பெற்றோருக்கு நாங்கள் பத்துக் குழந்தைகள். சுமை அறியாது அன்போடும் ஆதரவோடும் எங்களை வளர்ந்தனர்.

வரிசையாக நாங்கள் ஐந்து பெண்கள். இது போதாதா, என் அம்மா பதற்றம் அடைய? முதல் மூன்று அக்காக்களுக்கும் 18, 19 வயதில் திருமணம். வரிசையில் அடுத்த அக்கா ஒரே போக்கில் போகாமல் சற்று வித்தியாசமாகச் சிந்தித்துச் செயல்படக்கூடியவர். சிறந்த படிப்பாளி. தனக்கும் தன் தம்பி தங்கைகளுக்கும் நல்ல வாழ்க்கையை உருவாக்கச் சித்தம் கொண்டார். பாரதியும் பெரியாரும் கைகொடுத்தார்கள். தன் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்தார்.

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து எங்களுக்காகச் சிந்தித்தார். நேரடியாக அப்பாவிடம் சொல்லத் தயக்கம் ஏற்பட்டதால், வீட்டில் இருந்தபடியே அப்பாவுக்குக் கடிதம் எழுதி, அஞ்சலில் அனுப்பினார். விஸ்வரூபம் எடுத்த தன் லட்சியத்தைப் பற்றியும், தம்பி, தங்கைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக எழுதி, அப்பாவையே சிந்திக்கத் தூண்டினார். வீடு, பங்களா, நகை, நட்டு, நிலபுலம் போன்ற சொத்துக்குப் பதில் எங்களுக்குப் படிப்பைத் தாருங்கள் என்று உருக்கமாகச் சொன்ன அந்தக் கடிதம் எங்கள் அப்பாவின் மனத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 60-களில் கிராமத்தில் உயர் கல்வி படிக்க இயலாது என்பதால் தஞ்சையில் வாடகை வீடு பிடித்துப் பாட்டியைத் துணை வைத்து எங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தார் அப்பா. அது அப்போதைக்குப் பெரிய பெரிய வேலை என்ற போதும், அக்காவின் வேண்டுகோளை மதித்து மகிழ்வோடு அனுப்பிவைத்தார்கள்.

நாங்கள் எழுவரும் அப்பாவின் ஆசியோடு, அக்காவின் வழிகாட்டுதலுடன் படித்தோம். அக்கா டாக்டராகி, தஞ்சை மாவட்டத்தில் தலைசிறந்த மருத்துவராகிப் புகழ்பெற்றதை அப்பா கண்டு மகிழ்ந்தார். நாங்களும் நன்கு படித்து கல்விப் பணி, சுயதொழில், விவசாயம், வங்கிப் பணி, கடற்படை, பொறியாளர் என்று பன்முகத்தோடு ஒளிர்கிறோம்.

உரிய நேரத்தில் எங்களது மாற்றத்துக்கு வித்திட்ட எங்கள் அருமைச் சகோதரிதான் அன்றும் இன்றும் என்றும் எங்கள் வழிகாட்டி. எங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்கும் அவர்தான் கலங்கரைவிளக்கம்.

- சுந்தரி ராஜேந்திரன், கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x