Published : 23 Feb 2020 10:01 AM
Last Updated : 23 Feb 2020 10:01 AM

வாசிப்பை நேசிப்போம்: உயிர்ப்புடன் வைத்திருக்கும் வாசிப்பு

சிறுவயதிலிருந்தே நான் வாசிக்கத் தொடங்கிவிட்டாலும் திருமணத்துக்குப் பிறகுதான் வாசிப்பின் எல்லை விரிவடைந்தது. 68 வயதாகும் நான், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்துவருகிறேன். குறிப்பாக மணியன், சாவி, ஜாவர் சீதாராமனின் ‘உடல் பொருள் ஆனந்தி’, சாண்டில்யனின் ‘யவனராணி’, ‘கடல்புறா’, ‘ராஜமுத்திரை’, ‘மன்னன் மகள்’, ‘குமரிக் கோட்டம்’, ‘ஜலதீபம்’ உள்ளிட்ட அவருடைய பெரும்பாலான நாவல்களை வாசித்திருக்கிறேன்.

வரலாற்று நாவல்கள் மீது ஆர்வம் அதிகம் என்பதால் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ ஆகியவற்றை ஒரே மூச்சில் வாசித்திருக்கிறேன். லக் ஷ்மி, ஜெயகாந்தன், கண்ணதாசன், சிவசங்கரி, இந்துமதி, பிரபஞ்சன், அனுராதா ரமணன், பாலகுமாரன், திலகவதி, மேலாண்மை பொன்னுசாமி, சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் புத்தகங்களையும் விரும்பிப் படிப்பேன். சிட்னி ஷெல்டனின் 18 நாவல்கள், ஹென்றி சேரியரின் ‘பட்டாம்பூச்சி’, ஜான் கிரிஷாம் எழுதிய ஆங்கில நாவலான ‘தி கிளையண்ட்’, விகாஸ் ஸ்வருப்பின் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’, சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ உள்ளிட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறேன். வாசிப்பு என்பது மனித இனத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய கொடை. வாசிப்பு எப்போதும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.

- விமலாகிரி, கோவை.

வாசிப்பை நேசிப்போம் பகுதியில் வெளியாகும் சகோதரிகளின் வாசிப்பு அனுபவங் களைப் படிக்கும்போது எனக்கும் என் அனுபவத்தை எழுதும் ஆர்வம் உண்டானது. என் வாழ்க்கை முன்னேறியுள்ளது என்றால் அது வாசிப்பால்தான். நாடு விடுதலை பெறு வதற்கு ஓராண்டு முன்னால் பிறந்தவள் நான்.

நாங்கள் வசித்தது குக்கிராமம் என்பதால் அந்தக் காலத்தில் பள்ளிகளே இல்லை. எட்டு கி.மீ. நடந்து சென்றால்தான் அருகிலிருக்கும் கிராமத்துப் பள்ளிக்குச் செல்ல முடியும். அப்போதெல்லாம் பெண் குழந்தைகளை வெளியே அனுப்ப மாட்டார்கள் என்பதால் எங்கள் ஊரிலேயே ஒரு மாணவிக்கு வகுப்பெடுக்க மாதம் 30 ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் ஒருவர் வந்தார். தமிழ், கணக்கு, ஆங்கிலப் பாடங்களை மட்டும் சொல்லித்தருவார். அவரிடம் நான்கு ஆண்டுகள் மட்டும் படித்தேன். என் அண்ணன் பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். அதனால், அவர் பள்ளிக்கு அருகில் இருந்த நூலகத்திலிருந்து மாதம் 25 பைசாவைக் கட்டணமாகச் செலுத்தி எனக்கு ‘கல்கண்டு’ பத்திரிகையின் பழைய பிரதிகளை எடுத்துவந்து படிக்கக் கொடுப்பார்.
அப்போது எனக்கு ஒன்பது வயது. ‘கல்கண்டு’ பத்திரிகையில் எழுத்தாளர் தமிழ்வாணன் எழுதும் ‘வாழ்க்கையில் முன்னேற்றம்’ பகுதி என் வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவியாக இருந்தது. சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் ‘கல்கண்டு’ இதழை வாசிக்கத் தொடங்கினேன். இந்த 76 வயதிலும் வாராவாரம் தவறாமல் படித்துவருகிறேன். பள்ளிக்குச் செல்ல முடியாத காரணத்தால்தாலோ என்னவோ கிடைத்ததையெல்லாம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. குறிப்பாக, அப்போது நான் வாசித்த புத்தகங்களில் மு.வரதராசனார் எழுதிய ‘மண்குடிசை’, ‘கரித்துண்டு’ போன்றவை முக்கியமானவை. அதேபோல் எம்.எஸ். உதயமூர்த்தி, ‘ஆனந்த விகடன்’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளை விரும்பிப் படித்தேன். அவருடைய தொடர் மூலமாகத்தான் ஆங்கில நாவல்கள் குறித்த அறிமுகம் கிடைத்தது. இன்றைக்கும் நான் பல புத்தகங்களை வாசிக்கிறேன் என்றால் அதற்கு எம்.எஸ். உதயமூர்த்தி, மணியனின் புத்தகங்களும் என் வாசிப்புக்குத் துணையாக இருந்துள்ளன. ஆறு மாதங்களாக எதையும் எழுத முடியாமல் இருந்த என்னை ‘பெண் இன்று’வில் வெளியாகும் ‘வாசிப்பை நேசிப்போம்’ பகுதிதான் எழுதத் தூண்டியது. வாசிப்புதான் நமக்குச் சிறந்த வழிகாட்டி.

- டி. பத்மாதுரை, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x