Published : 23 Feb 2020 09:55 AM
Last Updated : 23 Feb 2020 09:55 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 45: கனகம் செய்த காரியம்

பாரததேவி

‘பேசாமல் தண்ணியைக் கேட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டு நிம்மதியாக வீட்டில் படுத்து உறங்கியிருக்கலாம். அவள்தான் யாருக்கும் ஒரு பொட்டுத் தண்ணிகூடத் தரக் கூடாது என்று சொல்லிவிட்டாள். அவளுக்கென்ன? சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள பத்திரமா உறங்குதா. நானில்ல இப்ப இங்க அச்சப்பட்டு மய்யம் பறக்கேன், மருவி தவிக்கேன்’ என்று மனதுக்குள்ளாகவே கடுகடுத்துக்கொண்டிருந்தான் சங்கிலியாண்டி.

கட்ட கட்ட உச்சி நேரம் (நடுச்சாமம்). கனகம் நாலஞ்சி சேத்திக்காரிகளோடு சங்கிலியாண்டி பிஞ்சையை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவள் சேத்திக்காரிகள் எல்லோருமே, “ஏ.. கனகம், நீ செய்த வேல எங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல. தண்ணி கொடுக்காத சங்கிலி மாமாவும் அத்தை அன்னத்தாயும் அவுக பாவத்தில போவட்டும். நீ அவர எதும் செஞ்சி கலவரப்படுத்தி வைக்காத” என்று சொல்ல கனகத்தின் முகத்தில் கோபம் ஏறியது.

நெஞ்சில் ஈரமில்லாதவர்கள்

“அதென்னத்தா அப்படிச் சொல்லுதீக. பத்து வருசமா புள்ள இல்லாம கோயில் கோயிலா போயி வந்தவக எங்கம்மாகிட்ட வந்து எம்புட்டுக் கண்ணீர் விட்டாக தெரியுமா? அந்த அத்தை அழுவதப் பார்த்த என் அம்மாதேன் மல வேம்பு இலையோடு பழைய காலத்து அரச மரத்து இலையையும் ஒண்ணாப்போட்டு நாலு சொம்பு தண்ணி ஊத்தி அவிச்சி, ஒரு டம்ளர் தண்ணியா வத்தவச்சி ஏழுநா வெறும் வவுத்துல கொடுத்ததில்தேன் அந்த அத்தைக்கு வீரமணியே பெறந்தான். அந்த நன்னிகூட அந்த அத்தைக்கு இல்ல. கூட்டம் முடிச்ச பெறவு என் அம்மா அந்த அத்தைகிட்ட போயி ஊருக்குத் தண்ணிகொடுக்கச் சொல்லி எம்புட்டோ கெஞ்சியிருக்கா. ஆனா, அந்த அத்தை கிணுங்கமாட்டேன்னுருச்சாம். ஊருக்காரக தண்ணி இல்லாம சாவட்டுமின்னு வேற ஈவு எரக்கமில்லாம பேசியிருக்கா.

அப்ப அந்த மாமாவும் அப்படிச் சொல்லு அன்னம், இப்பத்தேன் நீ என்ன செல்லப் பொண்டாட்டின்னுருக்காரு. அப்படிப் பேசுனவுகள சும்மா விடலாமா?” என்றாள் ஆத்திரத்தோடு. “அப்படியா சொன்னாக? அவகளுக்கென்ன நெஞ்சி கல்லாவா போயிருச்சி. இது நம்ம ஊரு, நம்ம தேசம், நம்ம மக்கங்கிற எண்ணமே இல்லையா?” என்று ஒருத்தி கேட்க, “அவுகளுக்கு நெஞ்சின்னு ஒண்ணு இருந்தாத்தான இதெல்லாம் இருக்கப்போவுது. நானு அந்த மாமாவ பயமுறுத்தத்தேன் போறேன். இங்க இருக்கவக இருங்க, போறவக போங்க” என்ற கனகம் வரிசையாய் கத்தாழை இருந்த இடத்தை மெல்லத் தாண்டி பிஞ்சைக்குள் வந்தாள். ஏதோ ஒன்று அடர்ந்த கத்தாழைக்குள் சரசரவென்று ஓடியது. அவள் முகத்துக்கு முன்னாள் கிரீச்சென்று சத்தமிட்டவாறு ஒரு குருவி பறந்துபோனது. அமாவாசை இருட்டுக்குள் எதுவுமே அடையாளம் தெரியவில்லை. ஆள் உயரத்துக்கு வளர்ந்த பயிர்கள் கருப்பாய் அசைந்தன. சுற்றும் முற்றும் பார்த்த கனகம் சங்கிலியாண்டி பத்தைக்கல்லில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்துவிட்டாள்.

நள்ளிரவுத் திட்டம்

சங்கிலியாண்டியை நோக்கி வந்தாள். இரண்டாக வகுந்து போட்டிருந்த கொண்டையை அவிழ்த்துவிட்டாள். ஓசி வாங்கிக் காலில் மாட்டியிருந்த சலங்கை அவள் காலடி எடுத்துவைக்கும் போதெல்லாம் ‘சல் சல்’ என்று சத்தமிட்டது. கைநிறைய அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் ‘கல கல’வெனச் சத்தமிட்டன. இவளே கையை மேலும் கீழுமாகக் குலுக்கி ஓசையிட வைத்தாள். கஸ்தூரி மஞ்சளை ஒரு செறட்டை நிறைய அரைத்துப் பூசியதில் அவள் உடலெங்கும் மஞ்சள் வாசனை காற்றோடு கலந்து கமலைக்குழியின் நெடுகிலிருந்த பூவரச இலைகளைத் தொட்டுத் தொட்டு அங்கேயே சுற்றியது. வானத்தில் சோளப்பொரியாய் பொரித்திருந்த நட்சத்திரங்கள் பூமிக்கு ஒளிகொடுக்க மறந்து போயின.

கனகம், சங்கிலியாண்டி உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி வந்தாள். சத்தம் மட்டுமில்ல, மணமும் அவள் கூடவே வந்தது. ஏற்கெனவே பயத்தில் உட்கார்ந்திருந்த சங்கிலியாண்டி இந்த ஓசைகளைக் கேட்டு அடிவயிற்றில் பயம் நரிப்பல்லாய்க் கவ்வ வியர்த்து விறுவிறுத்துப்போய் எழுந்தார். கனகம் முகத்தைத் தன் நீண்ட கூந்தலால் மூடிக்கொண்டு வளையலும் கொலுசும் இன்னும் அதிக ஓசையிட நடந்து வந்து அவரெதிரே நின்றாள்.

உறைந்துபோன சங்கிலியாண்டி

கறுப்பாக ஏதோ ஒன்று உருவமில்லாமல் தன் எதிரே நிற்பதைப் பார்த்ததும் “யா.. யார்.. யார் அது?” என்று கேட்க முயன்றார். ஆனால், அவர் உதடுதான் திறந்ததே ஒழிய எந்த வார்த்தையும் அவர் வாயிலிருந்து வரவில்லை. கனகம் ‘கல கல’வென மணி ஒலிப்பதுபோல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அதோடு குரலைக் கரகரப்பாக மாற்றிக்கொண்டு, “ஏண்டா நானே உன் கெணத்தில் விழுந்து செத்துப்போயி உன் காட்டுக் காவலுக்கு ஒரு ஆவியா அலையுதேன். நீ என்ன கமுக்கமா பார்க்க வந்தியா? உன்னை என்ன செய்தேன் பாரு” என்றவாறு சட்டெனக் கிணற்றுக்குள் பாய்ந்துவிட்டாள். இரு கை கொள்ளும் அளவுக்குத் தண்ணீர் வந்து அவர் முகத்தில் அந்தச் சாம வேளையில் சிலீரெனத் தெறித்தது. பயத்தில் உறைந்துபோன சங்கிலியாண்டி, “அய்யோ அம்மா” என்று அலறியவாறு அந்தப் பட்டையக்கல்லில் சாய்ந்தவர்தான். அதன் பிறகு பேச்சே இல்லை. படிவழியாக வேகமாக வெளியே வந்த கனகம் அவர் மூக்கில் கை வைத்துப்பார்த்தாள். மூச்சு சீராக வந்தது. அப்போதுதான் அவளுக்கு உயிரும் வந்தது. இதற்குள் அவள் சேத்திக்காரிகள் வேலியைத் தாண்டி உள்ளே வந்துவிட்டார்கள்.

ஊருக்குத் தண்ணீர் கிடைத்தது

“என்னடி என்ன ஆச்சு?” என்று கேட்க, “நல்ல வேளை. வெறும் கெறக்கத்தில்தேன் படுத்திருக்காரு. நாம இப்பப் போயி இவரு இப்படிக் கெடக்காருன்னு சொன்னமின்னா நீ எதுக்கு இந்நேரம் அங்க போன. அதுவும் எங்க காட்டுக்குப் போனனேன்னு நூறு கேள்விவரும். நம்பளால நடந்த உண்மையையும் சொல்ல முடியாது. அதனால, நாம எல்லாரும் போயி எப்பவும் போல தெருவுல படுத்துக்கிடுவோம்” என்று கனகம் சொல்லி முடிக்கும் முன்பே அரசி படபடத்தாள்.

“ஏண்டி, அந்த சங்கிலி மாமா செத்து கித்து போனார்னா?”
“அதெல்லாம் அவரு சாவ மாட்டாரு”
“அதெப்படி அம்புட்டு உறுதியா சொல்லுத?”

“இப்படிச் சொத்து மேல உசுரா கெடக்கிற வங்ககெல்லாம் உசுரு இழுத்துக்கிட்டுக் கெடக்குமே தவுத்து யாரும் அப்படிப் பொசுக்குனு போயி சேந்துர மாட்டாக” என்றாள் கனகம், உறுதியான குரலில்.

சாமம் தாண்டி இரண்டாம் கோழி கூப்பிடும் நேரம் யாரோ கெடையில் இருப்பவர் தண்ணீர் எடுக்க வரும்போது சங்கிலியாண்டி கிடப்பதைப் பார்த்து ஊருக்குத் தகவல் சொல்லிவிட்டதோடு கெடைகாப்பவர்கள் நாலு பேரைக் கூப்பிட்டு சங்கிலியாண்டியைத் தூக்கிக்கொண்டு போய் வீடு சேர்த்தார்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரி பேய் பயமுறுத்திய நோய்க்கு வைத்தியர் கிடையாது. கோடங்கிக்காரர்கள்தான் வைத்தியர்கள். அதில் ஒருவன் சங்கிலியாண்டியின் முன்னால் கோடாங்கியை உறுமலோடு பாடிக்கொண்டு அடித்தான்.

ஆதிகருப்பா, அருள்புரிய வேணுமய்யா
சோதிவைரவனே தொணபுரிய வேணுமய்யா
கங்கையில் மாண்ட கன்னி காடு சுத்திவரும் வேளையில்
இவன் ஆணான ஆணுமில்ல ஆமணக்குதண்டுமில்ல
வீரனான வீரனில்ல
வேங்க, புலி, கடுவாயில்ல
கன்னி கட்டழகி கருப்பு நிறத்தழகி
கெண்டைக்கால் நீச்சலிட்டு கிணத்துக்குள்ள குளிச்ச அவ
தன் ஈர முந்தி சீலய அவ உதற
இவன் முன்னால போயி நிக்க
இப்ப அவ ஆத்திரம் கொண்டிருக்கா
ஆக்கினையும் (கொலை) செஞ்சிருவா

- என்று கோடாங்கிக்காரன் ஆவேசம் கொண்டு பாட சங்கிலியாண்டி பொண்டாட்டி, மகன், அவரின் சொந்தபந்தங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கோடாங்கிக்காரனின் காலில் விழுந்து சங்கிலியாண்டியைக் காப்பாற்றும்படி வேண்டினார்கள். ஏனென்றால், அவருக்குச் சுயநினைவே இல்லை. கனகம் செய்த காரியத்தால் இப்போது ஊர்க்காரர்கள் நிம்மதியாக சங்கிலியின் கிணற்றில் ஓடி ஓடி மாற்றுக் குடம் போட்டுத் தண்ணீர் எடுத்தார்கள். நாட்டாமைக்கு மட்டும் இதில் ஏதோ நடந்திருக்கு என்று ஒரு உறுத்தல் இருந்துகொண்டு அவரைப் படுத்தியது.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x