Published : 23 Feb 2020 09:42 AM
Last Updated : 23 Feb 2020 09:42 AM

தெய்வமே சாட்சி 05: காதலால் வீழ்த்தப்பட்ட அரியநாச்சி அம்மன்

ச.தமிழ்ச்செல்வன்

அவள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த பெண்ணாம். அவளை அதே ஊரைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்த இளைஞன் ஒருவன் விரும்பினான். கல்யாணம் கட்டிக்கொண்டால் அவளைத்தான் கட்டிக்கொள்வேன் என்று வீட்டில் உறுதிபடச் சொல்லிவிட்டான். அவர்கள் வீட்டிலோ, “தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை எப்படி நம்ம வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவர முடியும்? ஊரும் சனமும் ஒத்துக்குமா? அதெல்லாம் முடியவே முடியாது” என்று மறுத்துவிட்டார்களாம்.

அதனால், அந்த இளைஞன் அந்தப் பெண்ணைச் சந்தித்துத் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறான். அவளும், “நீங்க வேற சாதி. நான் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவள். இதெல்லாம் நம்ம ஊருக்கு ஒத்துவராது. விட்ருங்க” என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய வீட்டிலும் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று மறுத்துவிட்டார்கள்.

ஆனால், அவன் அவள் ஞாபகமாகவே இருந்திருக்கிறான். அவளைக் கட்டி வைக்காவிட்டால் செத்துப் போய்விடுவேன் என்று ஒரே பிடிசாதனையாக நின்றிருக்கிறான். பிறகு பையன் வீட்டார் கூடி ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு, பெண் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். பெண் வீட்டார், “வேண்டாம் சாமி ஆளை விடுங்க” என்று மறுத்திருக்கிறார்கள். ஆளாளுக்குப் பேசி பெண் வீட்டாரை வாயே திறக்கவிடாமல் செய்து, அவர்களை ஒருவழியாகச் சம்மதிக்க வைத்துக் கல்யாணத்தை நடத்தியிருக்கிறார்கள்.

கனவில் தோன்றிய மனைவி

கல்யாணமான மூன்றாம் மாதத்தில் தோட்டத்துக்கு வேலைக்குப் போன அந்தப் பெண், அங்கே செத்துக் கிடந்திருக்கிறாள். அவளை அடக்கம் பண்ணிய மூன்றாம் நாள், அவள் தன் கணவனின் கனவில் தோன்றி, “என்னை உங்க அப்பாதான் ஆள் வைத்துக் கொன்று போட்டார். அதைச் சொல்லிவிட்டுத்தான் அவர்கள் என்னைக் கொன்றார்கள். என்னைச் சாமியாக நினைத்துக் கும்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு மறைந்தாள்.

பின் அந்த இளைஞன் தன் தந்தையைக் கொன்றுவிட்டு, தன் மனைவியின் வீட்டுக்குப் போய், “என் மனைவியைக் கொன்றவர் என் அப்பாதான். அவரை நான் கொன்றுவிட்டேன். என் உயிருக்கு உயிரான மனைவி இல்லாமல் என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. அதனால், நானும் விஷம் குடித்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவேன். என் உடலை நீங்கள்தான் அடக்கம்செய்ய வேண்டும். என் மனைவிக்குக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்” என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டான். அவன் சொன்னபடி அவர்கள் அவனை அடக்கம் செய்தார்கள். மகளைத் தெய்வமாகக் கும்பிட ஆரம்பித்தார்கள்.

புது வடிவெடுக்கும் பிரச்சினை

காலம் செல்லச் செல்ல அந்தப் பையன் வீட்டாரும் தம் மகன் அவர்கள் வீட்டில் போய்த்தான் இறந்துள்ளான். அவனுடைய மனைவியும் நம்ம வீட்டுப் பிள்ளைதானே என்று மனம் மாறி அவளைக் கும்பிடத் தொடங்கினர். அதன் பிறகு அந்தப் பெண் இறந்து கிடந்த அதே தோட்டத்தில் சிலை எழுப்பிக் கோயில் கட்டினார்கள்.

விருதுநகர் மாவட்டம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் உள்ள தெய்வம் அரியநாச்சி அம்மன். ஊர் முழுக்க வரி வசூலித்து விழா நடக்கிறது. ஊரில் மூன்று சாதி இருந்தாலும் பூசாரியாகத் தாழ்த்தப்பட்ட ஒருவரே இருக்கிறார். கோயில் திருவிழா வேலைகளை எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களே செய்வார்கள். சாமி கும்பிட்டு முதலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திருநீறு கொடுத்த பிறகே மற்றவர்களுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறை நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. இளைஞர்கள் தலையெடுத்துத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதல் மரியாதை என்பதை ஏற்க முடியாது என்று பிரச்சினை செய்வதால், இதெல்லாம் மாற்றம் பெற்றுவருகிறது. வைகாசி மாதம் கிடாய் வெட்டிப் பொங்கல் வைத்து, முளைப்பாரி எடுத்து மாவிளக்கு படைத்துச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், “அரியநாச்சி என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தியிருக்கிறார் அந்தக் கதைசொல்லி. “கொல்லப்பட்டவள் அரிஜனப் பெண் அல்லவா? அதனால், அரிஜனாச்சி என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக அரியநாச்சி என்று பொதுவாக வைத்துவிட்டார்கள்” என்று சொல்லியிருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை என்று உரசிப் பார்க்க வழியில்லை. வாய்மொழி வழக்காறுகளில் இது ஒரு பிரச்சினை. சொல்பவரின் சார்பு கூடுதலாக இருக்கும். எழுதப்பட்ட வரலாற்றில் மட்டும் என்ன வாழ்கிறது?அதுவும் எழுதுபவரின் சார்புகொண்டதுதானே?

ஆனால், கதைசொல்லி சொன்னது உண்மையாக இருந்தால், அவள் கொல்லப்பட்டது காந்தி யுகத்தில் என்பது தெளிவு. தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஹரிஜன்’ என்று 1932-க்குப் பிறகே காந்தி அழைக்கத் தொடங்கினார். ‘ஹரிஜன்’ பத்திரிகை 1933-ல் தொடங்கப்பட்டது. ஆகவே, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த அம்மனின் பிறப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் எனக்கொள்ளலாம்.

புறக்கணிக்கப்படும் பெண்ணின் விருப்பு

இதுபோன்ற ஆணவக்கொலைகள் தமிழகத்தில் காலம் காலமாக நடைபெற்று வருவதன் அடையாளமாக அரியநாச்சி கதை திகழ்கிறது. குற்றம் யார் செய்திருந்தாலும் தாக்குதலுக்கு ஆளாவதும் பாதிக்கப்படுவதும் பெண்தான் என்பதை அரியநாச்சி கதை அழுத்தமாகக் கூறுகிறது. இக்கதையில் அவள் செய்த குற்றம் என்ன? அவள் அவனைக் காதலிக்கக்கூட இல்லையே? மகன் ஆசைப்பட்டான் என்பதற்காக, அவன் மனம் சற்றே சாந்தியடையட்டும் என்பதற்காக அவளைக் கட்டி வைத்து மூன்று மாதங்கள் கழித்துக் கொன்றிருக்கிறார்கள். பையனுக்குச் சொந்த சாதியில் பெண் பார்த்து ‘முறையான’ கல்யாணம் ஒன்றை அப்புறம் நடத்திக்கொள்ளலாம் என அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். மகனை வழிக்குக் கொண்டுவர ஒரு தற்காலிக ஏற்பாட்டைச் செய்ய, ஒரு பாவமும் அறியாத பெண்ணைப் பலிகொடுத்திருக்கிறார்கள்.

பெண்ணின் உயிரும் விருப்பமும் இவ்வளவு மலினமாக மதிக்கப்படும் ஒரு சமூகமாகத்தான் நாம் இன்றுவரை நீடிக்கிறோம். சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்றுள்ள 80-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகளில் பெண்கள் கொல்லப்படுவது இயல்பாக நடந்திருக்கிறது. காதலிக்கும் இருவரில் பையன் தாழ்த்தப்பட்டவர் என்றால் சாவு நிச்சயம் என்ற நிலையை இன்றுவரை மாற்ற முடியவில்லை.

ஆணவக்கொலைகளில் ஆண்கள் கொல்லப்படுவதும் இருக்கிறது. மதுரைவீரன் கதை, முத்துப்பட்டன் கதை போல பல கதைகள் உண்டு. இவையெல்லாம் 400-500 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்கள்தாம் எனப் பேராசிரியர் நா.வானமாமலை குறிப்பிடுவார். 500 ஆண்டுகளாகவே நாம் இப்படித்தான் இருக்கிறோம். ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு அப்பெண்கள் உடன்கட்டை ஏறியதாகத்தான் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் கூறுகின்றன.

கருமாதி தன்னையும் முடித்து
மாலை கழற்றி நிலத்தி லெறிந்து சந்திரன்
சூரியன் சாக்ஷிகள் வைத்து
தானுமே கட்டையிலேறினார் பெண்கள்

- என்று கொல்லப்பட்ட முத்துப்பட்டனின் உடலோடு எரிந்துபோகும் ‘பொம்மக்கா திம்மக்கா’ கதையைப் போலத்தான் பெண்களின் வாழ்வு முடிகிறது. கௌசல்யா போன்றோர் தம் இணையரின் கொலைக்குப் பின்னும் வாழ என்னென்ன போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்? பார்த்துக்கொண்டுதானே இருக்க முடிகிறது?

(கதை சொன்னவர்: தனசேகரன், நல்லுக்குறிச்சி, நரிக்குடி ஒன்றியம்.
சேகரித்து அனுப்பியவர்: டி.கனகவள்ளி)

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x