Published : 21 Feb 2020 09:50 AM
Last Updated : 21 Feb 2020 09:50 AM

டிஜிட்டல் மேடை: அமரன் ஒருவன்

சு.சுபாஷ்

தற்கொலைக்காகத் தண்டவாளத்தில் தலைவைக்கும் இளைஞன், தலைமாட்டின் அசௌகரியத்தை உணர்ந்து தலையணை ஒன்றைத் தேடுகிறான். இப்படித்தான் அமேசான் பிரைமின் ‘அஃப்சோஸ்’ வலைத்தொடரின் முதல் காட்சி விரிகிறது. தொடரும் அத்தியாயங்களிலும் இதே ‘பிளாக் காமெடி’யின் இழை பற்றித் தொடர்கிறது.

காதல், பணி, குடும்பம் என வாழ்க்கையின் அத்தனை திசைகளிலும் தோல்வியை மட்டுமே சந்திக்கும் இளம் எழுத்தாளன் நகுல். ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுத்தவனாகத் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான். ஆனால் அங்கேயும் அவனுக்குத் தோல்விதான் கிடைக்கிறது.

பத்துக்கும் அதிகமான தற்கொலை முயற்சிகளின் தோல்விக்குப் பின்னர், தற்கொலை விரும்பிகளுக்கு உதவும் ஒப்பந்தக் குழு ஒன்றை நாடுகிறான். கட்டணம் செலுத்தி சுய மரித்தலுக்கான சுப தினத்தைக் குறித்துக் கொடுக்கிறான். வாழ்வின் கடைசி தினத்தை அணுவணுவாக அனுபவிக்க முற்படுகையில், எஞ்சியிருக்கும் ஒரு சொட்டு நம்பிக்கை எங்கிருந்தோ அரும்புகிறது.

சாவதில்லை என சங்கல்பம் கொண்டவனை, இந்த முறை சாவு விடுவதாயில்லை. நாணிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பாக மரணத்தின் துரத்தல் தொடங்குகிறது. உயிரச்சத்துடன் ஓடுபவனின் வாழ்க்கையில் பலர் குறுக்கிடுகிறார்கள். இந்தக் கதையோட்டத்தின் வழியே இறப்பு, அதை வலிய வரிந்துகொள்ள முற்படும் மனிதனின் அற்பத்தனம், வாழ்வின் மகத்துவம் ஆகியவற்றை வலைத்தொடர் எள்ளி நகையாடுகிறது.

சாவிலிருந்து தப்புவதற்கான மனிதனின் அல்பத்தனமான ஆசைகள், சாவைத் தவிர்ப்பதற்கான யத்தனங்கள், ஆராய்ச்சிகள், நம்பிக்கைகள், புராணங்கள் என அனைத்தையும் பரிகாசத்துடன் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இந்தப் பரிகாசமும் கேள்விகளும் மறைமுகமாகவே இழையோடுவது சிறப்பு. அத்தியாயங்கள் தோறும் துரத்தும் ‘அமரன் யார்?’ என்ற கேள்வி, தொடருக்கு திரில்லர் அனுபவத்தைத் தருகிறது.

தற்கொலை விரும்பிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் மரணத்தைப் பரிசாகத் தரும் ஏற்பாடுகள், அவற்றுக்காகச் சிரத்தையுடன் செயல்படும் குழு குறித்த சித்தரிப்பு வலைத்தொடர் பாணிக்கு உதவுகின்றன. பெண் குழந்தையின் தாயொருத்தி அந்தக் குழுவுக்குப் பொறுப்பு வகிப்பது, சாவு ஒப்பந்தங்களை வைத்த குறி தப்பாது கொலைவெறியுடன் சிரமேற்கும் இன்னொரு பெண்மணி எனக் கதாபாத்திரப் படைப்புகளில் புதுமை தென்படுகிறது.

தொடர் தற்கொலை முயற்சிகளின் தோல்வி முகத்தால் மனநல ஆலோசனைக்குச் செல்லும் நகுலுக்கு, ஒரு பெண் தெரபிஸ்ட் தேறுதல் தந்து நெருக்கம் பாராட்டுகிறார். இருவரின் பிணைப்பில் தொய்வு காட்டும் கதை, அப்பெண்ணின் பின்கதையில் நிமிர்ந்து உட்கார்கிறது.

தற்கொலை விரும்பியை மையமாகக் கொண்ட கதையில் அடையாளம் காணப்படும் வாழ்க்கையின் நம்பிக்கை முனைகள், கொலைகாரக் கும்பலின் அபத்த விதிகள், சாவுக்காக ஏங்கும் அமரன்களின் நிராசைகள் என வலைத்தொடர்களின் புதிய ஓட்டத்துக்குப் பாதை தந்திருக்கிறது ‘அஃசோஸ்’.

ஹாலிவுட்டின் பிரபல கோயன் சகோதரர்களின் கதையாடல் பாணியின் பாதிப்பிலான தொலைக்காட்சித் தொடர்கள் மேற்குலகில் பிரசித்தம். அதே பாணியை முயன்றிருப்பதுடன், உரிய குறியீடுகள் பலவற்றையும் அள்ளித் தெளித்திருக்கிறது ‘அஃப்சோஸ்’. அனுராக் காஷ்யபின் திரைப்படங்கள் பலவற்றில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும் அவருடைய சகோதரியுமான அனுபூதி காஷ்யப் வலைத்தொடரை இயக்கி உள்ளார். குல்ஷன், அஞ்சலி பாட்டீல், ஹீபா ஷா, துருவ் ஷெகல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x