Published : 21 Feb 2020 08:05 AM
Last Updated : 21 Feb 2020 08:05 AM

திரைவிழா முத்துகள்: பழி வாங்குவது தீர்வல்ல!

கோபால்

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த 17-ஆம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா குறிப்பிட்ட தலைப்பைப் கொண்டிருக்கவில்லை. ஆனால், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சட்டத்துக்கு உட்பட்டோ, சட்டவிரோதமாகவோ குடியேறியவர்களின் பிரச்சினைகளைப் பேசும் படங்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தன. அவற்றில் ‘சன்ஸ் ஆஃப் டென்மார்க் (Sons of Denmark) முக்கியமானது.

ஏனென்றால், உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருப்பதாகவும் தனிநபர் சுதந்திரம் அதிகம் மதிக்கப்படுவதாகவும் நம்பப்படும் ஸ்காண்டினேவிய நாடுகள். ஆனால் அங்கும் குடியேறிகள் பிரச்சினையும் அவற்றில் ஊடுபாவாகப் பரவியிருக்கும் சிறுபான்மைமத வெறுப்பரசியலும் நீருபூத்த நெருப்பாகக் கனன்று வருவதை இந்தப் படம் உலகுக்குக் காட்டுகிறது. அதோடு இந்தப் போக்கு தொடர்ந்தால் அதன் தீயவிளைவுகள் எதுவரை இட்டுச் செல்லும் என்ற முன்னெச்சரிக்கையையும் தொட்டுக் காட்டுகிறது.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பரபரப்பான பகுதியில் நிகழும் குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலர் பலியாகிறார்கள். குண்டுவெடிப்பின் முதல் நினைவு நாளில், டென்மார்க்கில் அதிக செல்வாக்கு பெற்றுவரும் புதிய கட்சியின் தலைவர் மார்ட்டின் நோர்டால் பேட்டி கொடுக்கிறார்.

டென்மார்க்கில் புலம்பெயர்ந்துவாழும் இஸ்லாமியர்களால்தான் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் பேசுகிறார். தேசப் பாதுகாப்பு, உள்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களின் முன்னேற்றம் ஆகிய முலாம்களைப் பூசி புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்து வாக்கு அறுவடையில் ஈடுபடுகிறார்.

பிரதமர் தேர்தலில் அவருடைய கட்சியே வெல்லும் என்ற கணிப்புகள் உறுதிபடுத்துகின்றன. ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற உரிமைகோரலைப் பெயரிலேயே கொண்டிருக்கும் ‘சன்ஸ் ஆஃப் டென்மார்க்’ என்ற குழு, புலம்பெயர்ந்தவர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும் வேலைகளைச் செய்கிறது.

புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் “உங்கள் தாய்நாட்டுக்குச் செல்லுங்கள் அல்லது செத்து மடியுங்கள்” என்பது போன்ற வாசகங்களைச் சுவர்களில் எழுதிவைப்பது, பன்றித் தலைகளை வெட்டி அவர்கள் வாழும் பகுதிகளில் போட்டுவிடுவது என்று அவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதனால் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் வன்முறைப் பாதைக்கு நகர்கிறார்கள்.

பத்தொன்பது வயதான ஜக்காரியா, ஹசன் என்ற முதியவரிடம் தன்னை ஒப்படைக்கிறான். அவர் அவனை நோர்டாலைக் கொல்ல மூளைச் சலவை செய்கிறார். இந்தத் திட்டத்தில் ஜக்காரியாவை வழிநடத்த மாலிக் என்பவனை நியமிக்கிறார். மாலிக் ஜக்காரியாவின் நம்பிக்கைக்குரியவன் ஆகிறான். மாலிக்கைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் அம்மாவுக்கு அறிமுகப்படுத்திவைக்கிறான் ஜக்காரியா.

நோர்டாலைக் கொல்வதற்காக ஜக்காரியா அவனது வீட்டுக்குப் போகும்போது காவல்துறையிடம் பிடிபடுகிறான். அதன் பிறகுதான் மாலிக் தீவிரவாதக் குழுக்களில் ஊடுருவி ரகசிய உளவாளியாகச் செயல்படும் காவல்துறை அதிகாரி என்பதைத் தெரிந்துகொள்கிறான். தன் உயிரைக் காப்பாற்றிய மாலிக்குக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறான் நோர்டால்.

வன்முறையில் ஈடுபடக்கூடிய கும்பல்களை ரகசியமாகக் கண்காணித்து அவர்களுடைய திட்டத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மாலிக், சன்ஸ் ஆஃப் டென்மார்க் அமைப்பின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கிறான். அவர்களுடைய வன்முறைத் திட்டங்களைத் தெரிந்துகொண்டு அவற்றைத் தடுப்பதற்கான பணிகளைத் தொடங்க வலியுறுத்துகிறான்.

முதலில் அவனுடைய கோரிக்கைக்குச் செவிசாய்கும் உயரதிகாரிகள், பிறகு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளால் நோர்டாலின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறி, அவற்றைக் கண்காணிக்கும் பணியில் மட்டும் மாலிக்கைக் கவனம் செலுத்தச் சொல்கிறார்கள். சன்ஸ் ஆஃப் டென்மார்க் அமைப்பு மீதான கண்காணிப்பைக் கைவிடுகிறார்கள்.

இந்நிலையில் சன்ஸ் ஆஃப் டென்மார்க் அமைப்புடன் நோர்டாலுக்கு நேரடித் தொடர்பிருப்பதை அறிந்துகொள்ளும் மாலிக், அதைத் தன் உயரதிகாரிகளிடம் கூறுகிறான். அவர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். தேர்தலில் நோர்டாலின் கட்சி வெற்றிபெறுகிறது. பிரதமராகப் பதவியேற்கத் தயாராகிக்கொண்டிருக்கும் நோர்டாலைச் சந்தித்து, சன்ஸ் ஆஃப் டென்மார்க் அமைப்பைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறான் மாலிக். அடுத்த சில மணி நேரத்தில் மாலிக்கின் மனைவியின் முகத்தில் அமிலம் வீசப்படுகிறது. குழந்தையும் கொல்லப்படுகிறது. பதவியேற்பு விழாவில் நோர்டாலை மாலிக் சுட்டுக் கொல்வதுடன் படம் நிறைவடைகிறது.

டென்மார்க் போன்ற நாடுகளில் பரவும் வெறுப்புச் சூழலால், வருங்காலத்தில் இப்படியும் நடக்கலாம் என்பது குறித்த எச்சரிக்கையாகப் படத்தின் முடிவைப் புரிந்துகொள்ளலாம். பழி வாங்குவதும் கொலை செய்வதும் தீர்வாக முன்வைக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே கதை 2025இல் நடப்பதாகக் காண்பிக்கப்படுகிறது.

அதே போல் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவை எதிரியாகவும் முற்றிலும் தீயவர்களாகவும் சித்தரித்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் விதைக்கப்படும் வெறுப்பு, அந்தக் குழுவினர் மீது ஏவப்படும் வன்முறையை இயல்பாக்கு வதை இந்தப் படம் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது.

உலகமயமாக்கல் கொள்கை 30ஆம் ஆண்டை நெருங்கும் வேளையில் உலக நாடுகள் பலவற்றில் மண்ணின் மைந்தர்கள், எதிர் வெளியாட்கள் என்ற இருமை சார்ந்த வெறுப்பு, கூர்மையடைந்து கொண்டே போவதில் உள்ள முரண் குறித்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x