Published : 18 Feb 2020 12:58 PM
Last Updated : 18 Feb 2020 12:58 PM

வைரல் உலா: ஆமா, இவரு பெரிய லாடு லபக் தாஸ்!

அந்த வைரலான படம்

மிது

சமூக ஊடகத்தில் எப்போது எந்த விஷயம் ஹிட் அடிக்கும் என்று யாராலும் கணிக்கவே முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் ‘நேசமணி’ கதாபாத்திரம் கடந்த ஆண்டு சமூக ஊடகத்தை அதிரவிட்டதைப் போலவே, ஓர் ஒளிப்படம் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆவது வாடிக்கை. அந்த ஒளிப்படம் அண்மையிலும் பெரும் வைரலானது. அது, ‘லா(டு)ர்ட் லபக்தாஸ்’ என்ற வார்த்தையுடன் கூடிய ஒளிப்படம்!

கடந்த 2015-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய ‘லார்ட் லபக் தாஸ்’ ஒளிப்படம், அண்மையில் சிலருடைய கைங்கர்யத்தால் மீண்டும் வைரலானது. அதைத் தொடர்ந்து, ‘நீங்க வெறும் தாஸா, இல்லை லாடு லபக் தாஸா’ என்ற நடிகர் விவேக்கின் வசனம் இடம்பெற்ற படக்காட்சிகளும் சமூக ஊடங்களில் வலம் வந்தன. ‘லாடு லபக்தாஸ்’ என்ற கேலியாகப் புழங்கும் இந்தப் பெயர், உண்மையில் அன்பான ஓர் ஆங்கிலேயே கவர்னரின் பெயர் என்ற தகவலும் கூடவே சேர்ந்து பரவியது.

அதாவது, ‘லார்டு லாபோக் டாஷ்’ (Lord Labough Dash) என்ற ஆங்கிலேய கவர்னர் சென்னையில் இருந்தார். அவர் சமூக சீர்திருத்தம், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவராக விளங்கினார். மிகுந்த புத்திசாலியான அவரிடம் எந்தத் துறை சார்ந்த கேள்விகள் எழுப்பினாலும், அதற்கு பதில் சொல்லக்கூடியவர்.’ என்று அந்த ஒளிப்படத்தில் தகவல்களும் இடம் பெற்றிருந்தன. அந்த அடிப்படையில்தான் எல்லா விஷயங்களையும் தெரிந்தவர் என்று சொல்லப்படுபவரை, ‘லாடு லபக் தாஸ்’ என்று கிண்டலாக அழைக்கிறார்கள் என்ற தகவலையும் சேர்த்து உலவவிட்டார்கள்.

ஆனால், உண்மையில், ‘லார்ட் லபோக் டாஷ்’ என்ற பெயரில் ஆங்கிலேயே கவர்னர் யாருமில்லை. ஆங்கிலேயே வைசிராயாக இருந்த லார்ட் கர்சன் படத்தை வெட்டி, ஒட்டி, இவர்தான் லார்ட் லபோக் டாஷ் என்று சமூக ஊடகத்தில் சில குறும்புக்கார நெட்டிசன்கள் உலவவிட்டுள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

லார்டு லபக் தாஸ் என்பது கற்பனையான பெயர்தான் என்று சிலர் விளக்கம் அளித்தாலும். இந்த வார்த்தை பிரபலமாகச் சென்னையில் வசித்த குஜராத்தைச் சேர்ந்த லாட் குடும்பத்தினரே காரணம் என்றும் கூறப்படுகிறது. ஜார்ஜ் டவுனில் அக்குடும்பத்தினர் மக்களுக்கு இலவசமாக லட்டுகளை வழங்கியதால் அப்பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

நேசமணியார், லாடு லபக் தாஸ் வரிசையில் அடுத்து யாரோ?!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x