Published : 18 Feb 2020 12:50 pm

Updated : 18 Feb 2020 12:51 pm

 

Published : 18 Feb 2020 12:50 PM
Last Updated : 18 Feb 2020 12:51 PM

விசில் போடு 19: ஹாஸ்டல் எனும் அலிபாபா குகை!

alibaba-cave

‘தோட்டா’ ஜெகன்

வாழ்நாள் முழுக்க பைவ் ஸ்டார் ஹோட்டல்ல வசிக்கிற மாதிரியான வாழ்க்கை அமைஞ்சாலும், கொஞ்ச நாளே வாழ்ந்த ஹாஸ்டல் வாழ்க்கை மாதிரியான சந்தோஷம் கிடைக்காது. ஜாதகத்துல கட்டம் கட்டி அடிக்கிற விதி, கோவத்துல எட்டி உதைச்சதுல உலகத்துல ஏதோ மூலைல அகதி போல தகுதியில்லா வாழ்க்கை வாழ்ந்தாலும், அதே விதி பாசத்துல மூச்சு முட்டுற அளவு கட்டி புடிச்சதுல உலகத்துலயே வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும், ஸ்கூல் காலேஜ் படிக்கிறப்ப விடுதில வாழ்ந்த வாழ்க்கை போல எப்பவுமே அமையாது.

வீட்டுல லொள்ளு பண்ணினா, நம்ம பல்லைத் தட்ட முடியாத அம்மாக்கள் 'இருடா உன்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடுறோம்'ன்னு நம்மளை பயமுறுத்தியே, நம்ம கால்ல கல்லை கட்டி வைப்பாங்க. ஹாஸ்டலை என்னமோ அனகோண்டா பாம்புகள் இருக்கிற அமேசான் காட்டு குகைன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறவங்களுக்கு சொல்லிக்கிறோம், அது அள்ள அள்ள சந்தோசம் தர, அன்பெனும் தங்கமும் நட்பெனும் வைரமும் கொட்டிக்கிடக்குற அலிபாபா குகை.

ரூம் மேட் நண்பன்

நைட்டு 12 மணி வரைக்கும் படிப்பு சத்தம் கேட்டுக்கிட்டு இருந்தா அது பொண்ணுங்க ஹாஸ்டல்; நைட்டு 12 மணி வரைக்கும் சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டு இருந்தா அது பசங்க ஹாஸ்டல். சாப்பிடுறதுக்கு பத்து பேராவது ஒட்டுக்கா போனா அது லேடீஸ் ஹாஸ்டல், அதுவே பத்து பேரு சாப்படையும் ஒருத்தேனே தூக்கிட்டு வந்தா, அது பசங்க ஹாஸ்டல். ஒரு பொண்ணோட குடும்ப சுமைகளையும் கவலைகளையும் மறக்க வைக்கிறது லேடிஸ் ஹாஸ்டல்னா, ஒரு பையனுக்குள் இருக்கும் சந்தோஷத்தை மட்டுமே நினைக்க வைப்பது பசங்க ஹாஸ்டல்.

போட்டுக்கிறவரைக்கும்தான் ஜட்டி உன்னுது, அதை முட்டிக்கு கீழ நீ கழட்ட ஆரம்பிச்சாவே அது என்னோடதுன்னு என்ற ஹாஸ்டல் கொள்கைக்கு கம்யூனிஸம் மட்டுமல்ல அதிரசம், தக்காளி ரசம்னு எதுலையும் விளக்கம் கிடையாது. பர்மிஷன் இல்லாமையே பேஸ்ட் எடுத்து விளக்குறவன் பிரெண்டுன்னா, நம்ம பிரஷ்ஷயே எடுத்து விளக்குறவன் பெஸ்ட் பிரெண்டு.

விளக்கிட்டு அதை கழுவாமலேயே வைக்கிறவன் க்ளோஸ் பிரெண்டு. ரோட்டுல போற நாயே நாலடி தள்ளிப்போற மாதிரியான நாத்தம் தரும் ஜீன்ஸை நாம போட்டிருந்தாலும், இன்னைக்கு இதான் மச்சான் டிரண்டுன்னு தன் கேர்ள் பிரெண்ட பார்க்க, அதையும் ஓசி வாங்கி மாட்டி பைபை சொல்லி போறவன்தான் நம்ம ரூம்மேட். ஒருத்தனுக்காக இன்னொருத்தன் நீட் எழுதுற இந்த ஏமாற்று காலத்துலையும், ஒரு பெட் ஷீட்டுக்குள்ள ஒன்பது பேரு தூங்குறதுதான் ஹாஸ்டல் லைப்.

வார்டனுடன் வார்

படிக்கிறதுக்கு முழிக்கிறாங்களோ இல்லையோ. ஆனா, நம்ம பொறந்தநாள் கொண்டாடுறதுக்காகவே இமைகளுக்கு இடையில இரண்டு இன்ச் குச்சியை மாட்டி தூங்காம, கேட்டுலேர்ந்து கூர்க்கா விடுற குறட்டை சத்தம்கூட நமக்கு கேட்கிற மாதிரி குசுகுசுன்னு அரட்டையடிச்சுக்கிட்டு நேரம் நெருக்கும் வரைக்கும் பொறுத்துக்கிட்டு உட்கார்ந்திருப்பானுங்க. அதை நம்ம மேல வச்ச பாசம் என்பதைவிட, நமக்கு அவனுங்க போடப்போற ஹாலிவுட் தர வேஷத்துக்குன்னே சொல்லலாம்.

12 மணிக்கு பத்து நிமிஷம் இருக்கிறப்பவே, கேக் வெட்டலாம் வான்னு நம்மளை கிடா வெட்ட இழுத்துக்கிட்டு போவானுங்க. முந்தின நாள் ஹாஸ்டல் மெஸ்ல மிஞ்சின சாம்பார்லேர்ந்து, மூணு மாசத்துக்கு முன்னால வாங்கின மிச்சர், காராபூந்தியெலாம் கலந்து நம்ம மேல ஊத்துவானுங்க.

மனைல உட்கார்ந்திருக்கிற மணப்பெண்ணுக்கு கன்னத்துல மஞ்சள் வைக்கிற மாதிரி, வரவன் போறவனெல்லாம் கேக்கை அள்ளி நம்ம மூஞ்சில அப்பிட்டு போவானுங்க. பர்த்டே பையனை, ஹைவே லாரில ஆக்சிடென்ட் ஆக்கி அரைகுறை உயிரோட அலையுற நாயைப்போல சுத்த வைக்க ஹாஸ்டலாலதான் முடியும்.

மாடர்ன் மாடர்னா எத்தனை ஹாஸ்டல்கள் வந்தாலும், ஹாஸ்டலை பாதுகாக்குற வார்டன்கள் மனநிலை ஒரே மாதிரிதான். வார்டன்களின் வாழ்நாள் வாக்கியமே, மாணவன் நல்லவன். ஆனா மாணவர்கள் கெட்டவர்கள். மாணவர்கள் குரூப்பா இருந்தாலே எதுவோ பெருசா ஆப்பு அடிக்க பார்க்கிறானுங்கன்னுதான் நினைப்பாங்க.

ஹாஸ்டல்ல இருக்கிறவனுங்க நாளைக்கு உலக வங்கிக்கே தலைவராகுறளவுக்கு தகுதியை வச்சிருந்தாலும், வார்டன்களை பொறுத்தவரைக்கும் எதிர்காலத்துல உள்ளூர் பஸ் ஸ்டாண்ட்ல, பத்து ரூபா தாளை கீழே போட்டுட்டு, அதையெடுக்க ஆள் குனியறப்ப பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்க போறவனுங்க போலத்தான் பார்ப்பாங்க. வார்டன்களுக்கு வைக்கிற பல பட்டப்பெயர்களில் பாதி பெயர்கள் வாயில சொல்லமுடியாத கெட்ட பெயர்கள்.

நல்ல தூக்கத்துல, வார்டன் தலையணை மேல காலை போடுற அந்த மிட்நைட் நேரத்துல, அவரு ஜன்னலோரம் போயி ஊளையிடுவானுங்க. தீபாவளிக்கு செஞ்ச ஸ்வீட்டை பொங்கலப்ப எடுத்து அன்புல ஊட்டுற மாதிரி ஒன்னு விடாம உள்ள திணிச்சுட்டுதான் அந்த ஆளை விடுவானுங்க.

மண்டையைப் பிளக்கும் இட்லி

நைட் ஷோவுக்கு போக சுவரு ஏறி குதிக்கிறதுல பாய்ஸ் ஹாஸ்டல், கேர்ள்ஸ் ஹாஸ்டல்ன்னு எந்தப் பேதமும் இல்லை. 'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கேபெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி'ன்னு எழுதுன பாரதியார், இன்னைக்கு இருந்திருந்தா, எட்டும் அறிவுக்கு பதிலா, எட்டி குதிக்கிறதுன்னு எழுதியிருப்பாரு. ஹாஸ்டலின் தேசிய உடை அழுக்குத் துணிதான். தனது தோழிக்காக அவங்க கேட்காமையே துவைச்சு தர்து பொண்ணுங்கன்னா, அடுத்தவன் துவைக்கிறப்ப, அவன் பக்கெட்டுக்குள்ள தங்கள் துணியைப் போடுறதுதான் பசங்க.

பிடிச்சதைத் தின்பதைவிட கிடைச்சதைத் தின்பதே சிறந்தது என்கிற வாழும்கலை தத்துவத்தை மண்டைல கொட்டி மனுஷனுக்கு புரிய வைப்பதே ஹாஸ்டல் மெஸ்தான். வெண்டைக்காய் சாம்பார், வெங்காய சாம்பாருன்னு பேரு மட்டும் மாறிமாறி வருமே தவிர, அது எப்பவுமே தண்ணில டர்மெரிக் போட்ட வெறும் சாம்பார்தான். ஆவி பறக்க இட்லின்னு ஒன்னை போடுவாங்க. தின்கிறவனுக்குதான் தெரியும் அது இட்லி இல்லை, ஏதோ இயந்திரத்தோட உதிரி பாகம்னு. டிபார்ட்மெண்டுக்குள்ள சண்டை வந்துட்டா அடுத்தவன் மண்டைய பொளக்க உதவுற ஆயுதமே ஹாஸ்டல் இட்லிதான்.

ஹாஸ்டல் வீடு

பிராஜக்ட் ஒட்ட பசையில்லனா, ஹாஸ்டல் பொங்கலை வச்சுதான் ஒட்டுவானுங்க. தோசைன்னு திங்கிறதுக்கு தோசைக்கல்லையே கொடுப்பானுங்க. புன்னகை மன்னன் கமல்கிட்ட மட்டும் அந்த தோசை கிடைச்சிருந்தா, 'சேது லவ்ஸ் ரஞ்சனி'ன்னு, அதிரப்பள்ளி அருவிக்கு போய் பாறைல செதுக்காம, அங்கனையே உட்கார்ந்து அந்த தோசையிலையே செதுக்கி வச்சுட்டு சூசைடு செஞ்சுகிட்டிருப்பாரு. எவனாவது ரூம் சாவியோ பொட்டி சாவியோ தொலைச்சுட்டா, அவசரத்துக்கு ஹாஸ்டல் மெஸ் வடைய வச்சுதான் உடைப்பானுங்க.

கைல காசே இல்லாட்டியும்கூட வறுமையை பற்றிய வெறுமை இல்லாம வாழ்ந்தது ஹாஸ்டலில்தான். 5 ஆயிரம் ரூபா டிக்கெட் எடுத்து ஸ்டேடியத்துல பார்க்கிறதைவிட, ஹாஸ்டல் ஹாலில் உட்கார்ந்து கத்திகிட்டே கிரிக்கெட் பார்க்கிற சுகம்தான் பெருசு. ஹாஸ்டல் ரூம்ல தோழியோட மடியில படுத்துக்கிட்டு மொபைலை நோண்டுற சுகத்தை கம்பேர் பண்ணினா லட்ச ரூபா மெத்தை தரும் சொகுசுகூட சிறுசு.

பெத்த அம்மா, அப்பாவே நண்பர்களைப்போல பழகினாலும், ஹாஸ்டல்ல பழகுற தோழர்களும் தோழிகளும்தான் பலருக்கும் இன்னொரு அம்மா அப்பா. பல வீடுகளே ஹாஸ்டல் போல இருக்கலாம். ஆனா, பலருக்கும் ஹாஸ்டல்தான் இன்னொரு வீடு.

(சத்தம் கேட்கும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

விசில் போடுஹாஸ்டல்அலிபாபா குகைAlibaba Caveரூம் மேட்நண்பன்இட்லிஹாஸ்டல் வீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author