Published : 18 Feb 2020 11:31 AM
Last Updated : 18 Feb 2020 11:31 AM

எங்கேயும் எப்போதும் 17: ஒளிரும் உயிரிகளின் கதை!

ஹாலாஸ்யன்

சிறுவயதில் மின்மினிப்பூச்சியைப் பிடித்து விளையாடிய அனுபவம் நம்மில் சிலருக்கு இருக்கும். அதை உள்ளங்கையில் வைத்து இன்னொரு கையின் விரல்களைக் குவித்து மின்னும் அதன் ஒளியைப் பார்த்திருப்போம். (வண்டுகள் (Beetles) உலகத்தின் விந்தை மின்மினிப்பூச்சிகள். உயிரொளிர்வு (Bioluminescence) என்ற உயிரிகள் ஒளியை வெளியிடும் முறைக்குள் இவை அடங்கும். இது வெப்பம் இன்றி, ஒளி மட்டும் வெளியிடப்படும் குளிர் ஒளி (Cold Light) என்ற நிகழ்வால் ஏற்படுகிறது.

புரதம் எனும் புரவலர்

(ஜெல்லி) மீன்கள், பாக்டீரியாவில் சில வகை, கடலடி உயிரிகள் என உயிரொளிர்வை வெளியிடும் மற்ற உயிரினங்களைப் போல் மின்மினிப்பூச்சிகளின் ஒளியும் புரதங்களின் வேலைதான். பெரும்பாலான உயிரொளிர்வுப் புரதங்கள் புற ஊதாக்கதிர் போன்ற பிற ஒளி மூலங்களையோ, அயனிகள் கடத்தப்படுவதையோ நம்பியிருக்கும். ஆனால், மின்மினிப்பூச்சியின் ஒளிக்கு சில சிறப்புப் பண்புகள் உண்டு.

மின்மினிப்பூச்சியின் ஒளிக்கு லூசிஃபெரேஸ் (Luciferase) என்ற புரதம் காரணமாக விளங்குகிறது. தனிச்சிறப்பான வடிவமைப்பைக் கொண்ட இந்தப் புரதம், லூசிஃபெரின் (Luciferin) என்ற மூலக்கூற்றை தன் வடிவமைப்புக்குள் பொருத்திக்கொள்ளும். பின்னர் மெக்னீசியம், ஆக்ஸிஜன் வாயு ஆகியவற்றின் துணையோடு லூசிஃபெரினை வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்தும்.

இந்த நிகழ்வில் துணைப்பொருளாக ஒளி வெளிப்படுகிறது. ஆனால், இது தன்னிச்சை நிகழ்வல்ல. அதற்கு உயிரினங்களின் ஆற்றல் மூலக்கூறாகக் கருதப்படும் அடினோசின் ட்ரைபாஸ்பேட் (Adenosine triphosphate – ATP) வேண்டும். இவை அனைத்தும் மின்மினிப்பூச்சிகளின் அடிவயிற்றின் இருக்கும் ஒளிபுகக் கூடிய பகுதியில் நிகழ்கின்றன.

மின்மினிப்பூச்சிகளின் புழுக்கள் அனைத்துமே ஒளியை உருவாக்கும். பூச்சி உண்ணும் விலங்குகளிடன் இருந்து தப்பிப்பதற்காக, மோசமான சுவையுடைய மூலப்பொருட்களைத் தன்னிடம் உற்பத்தி செய்து, ஒளியை அபாய விளக்கைப் போல் பயன்படுத்துகின்றன.

ஆனால், வளர்ந்த மின்மினிப்பூச்சிகளுக்கு அது இணை தேடுவதற்கான சங்கேதம். எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை, எவ்வளவு விநாடிக்கு அவை ஒளிர்கின்றன என்பதைப் பொறுத்து, பெண் மின்மினிப்பூச்சிகள் தன் இணையைத் தேர்ந்தெடுக்கும்.

ஒளிர்தலின் பயன்பாடு

மின்மினிப்பூச்சிகளின் இந்த அமைப்பில் மிகப்பெரிய அறிவியல் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் உண்டு. லூசிஃபெரேஸ் புரதம் உருவாக்கும் மரபணுவை, மரபணு மாற்றத்தின் போது செலுத்தி மரபணு மாற்றம் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்கிறதா என்பதை அறியமுடியும்.

இன்னொரு முக்கியப் பயன்பாடும் உண்டு: உணவுப் பொருள் கெட்டுப்போகாமல், நோய் உண்டாக்கக்கூடிய பாக்டீரியா வளராமல் இருக்கிறதா என்ற சோதனை, உணவுப் பாதுகாப்பின் முக்கிய அம்சம். ஆனால், அவற்றை ஆய்வகங்களில் பரிசோதித்து அறிய அதிக நாட்கள் பிடிக்கும்.

கெட்டுப்போயிருக்கும் உணவுப் பொருளில் வாழ்கிற பாக்டீரியா ஆற்றல் மூலக்கூறுகளான ஏடிபி-ஐ உற்பத்தி செய்திருக்கும். அந்த உணவுப் பொருளோடு லூசிஃபெரின், லூசிஃபெரேஸ் புரதம், மெக்னீசியம் மூன்றையும் சேர்க்கும்போது உடனடியாக பளீரென்று ஒளிர்ந்தால், பொருள் கெட்டிருக்கிறது என்று அர்த்தம்.

இந்தச் சோதனைக்கான லூசிஃபெரினையும், லூசிஃபெரேஸையும் நுண்ணுயிர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், மின்மினிகள் துன்புறுத்தப்படவில்லை. ஆனால், மின்மினிகளை நாம் வேறு வகையின் துன்புறுத்துகிறோம். மனிதர்களின் வாழிட ஆக்கிரமிப்பால் பிற உயிரிகளைப் போல் அவை பாதிக்கப்படுகின்றன; முக்கிய பாதிப்பு நாம் உண்டாக்கும் ஒளி மாசால் ஏற்படுகிறது. நாம் பயன்படுத்தும் விளக்குகளின் ஒளி, அவற்றின் இணைதேடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நகர்ப்புற ஒளி மாசின் அளவீடாக நகரத்தின் மின்மினிகளின் தொகையை எடுத்துக்கொண்டும் கணக்கிடுகிறார்கள்.

மனதுக்கு நெருக்கமானவை என்பதால் மின்மினிகளை முன்வைத்து பல்லுயிர்ப் பெருக்கம், உயிரினப் பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x