Published : 17 Feb 2020 09:49 AM
Last Updated : 17 Feb 2020 09:49 AM

ஆட்டோ எக்ஸ்போவின் சிறந்த பைக் சுசூகி கடானா

ஆட்டோ எக்ஸ்போவில் பெரும்பாலான இருசக்கர வாகன நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும், எலெக்ட்ரிக் பைக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எக்ஸ்போவில் ஆர்வமுடன் கலந்துகொண்டன. எக்ஸ்போவில் பைக் பிரிவில் குறிப்பிடத்தக்க அறிமுகம் எனில் சுசூகி நிறுவனத்தின் அறிமுகத்தைச் சொல்லலாம். சுசூகி நிறுவனம் பிஎஸ் 6 தரத்திலான புதிய ஆக்சஸ் 125, ஜிக்சர், பர்க்மன் ஸ்ட்ரீட் மற்றும் இன்ட்ரூடர் ஆகிய மாடல்களை இந்த எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. மேலும் சுசூகியின் டாப் ஸ்பெக் மாடலான சுசூகி கடானா முதன்முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த எக்ஸ்போவின் சிறந்த பைக் விருதையும் கடானா வென்றது. இந்த புதிய கடானா சுசூகியின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்களைக் கொண்ட இது 999சிசி திறன் கொண்டது. 10 ஆயிரம் ஆர்பிஎம்மில் 147 ஹெச்பி பவரையும், 9500 ஆர்பிஎம்மில் 105 என்எம் டார்க்கையும் இது வெளிப்படுத்தும். கடானாவுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் சிகேடி மாடலாக இது இருக்கும் எனவும் சுசூகி நிறுவனம் கூறியுள்ளது.

அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160

ஆட்டோ எக்ஸ்போவில் பியாஜியோ பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. அதில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலும் ஒன்று. ஸ்கூட்டர் பிரிவில் ஸ்போர்ட்டி மற்றும் ஸ்டைலான மாடல்களை விரும்புபவர்களின் விருப்பமாக அப்ரிலியா இருந்துவருகிறது. அந்த வகையில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மோட்டோ ஸ்கூட்டர் டிசைனைக் கொண்டுள்ளது. அப்ரிலியா மோட்டோ ஸ்கூட்டரை உருவாக்க இத்தாலி டிசைனர்கள் இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தியச் சந்தைக்காகவே இந்த மோட்டோ ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கிறார்கள். சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நான்கு நிறங்களில் இந்த மாடல் வெளிவரும். முழுவதுமாக எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை ஸ்டேண்டர்டாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. 160 சிசி 3 வால்வ் இன்ஜின் 10.8 ஹெச்பி திறனை வெளிப்படுத்துகிறது. இது சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்த மாடல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹீரோ ஏஇ-47

எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தீவிரமாக உள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கவனம் செலுத்திவந்த ஹீரோ எலெக்ட்ரிக் தற்போது எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ஹீரோ ஏஇ 47 மாடலை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் முழுக்க இந்தியாவில் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. எனவே இது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக இருக்கும். இதில் 4000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. 48 வோல்ட்/3.8 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இது இயங்கும். இதன் வேகம் அதிகபட்சம் 80 முதல் 100 கிமீ இருக்கலாம். ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் ஈகோ மோடில் 160 கிமீ பயணிக்கலாம். விலை அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஒகினாவா குரூயிசர்

குருகிராம் பகுதியில் இயங்கிவரும் வரும் ஒகினாவா என்ற எலெக்ட்ரிக் ஆட்டோடெக் நிறுவனம் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது மாடல்களைக் காட்சிப்படுத்தியது. அதில் ஒகினாவா குரூயிசர் மாடல் அனைவரையும் கவர்ந்தது. இது எலெக்ட்ரிக் குரூயிசர் ஸ்கூட்டர் மாடலாகும். இது தற்போது கான்செப்ட் மாடலாகவே அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பெரிய அலாய் வீல்கள், அகலமான கட்டமைப்பு, அட்டகாசமான ஹெட்லைட் ஆகியவை இதன் கவர்ச்சிகரமான அம்சங்களாகும். இதில் 4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை பயணிக்கலாம்.
3 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும். அதிகபட்சமாக 100 கிமீ வேகம் தரும். டிஜிட்டல் கன்சோல், குரூயிசர் வகையிலான ஹேண்டில்பார், வித்தியாசமான டெயில் லைட்டுகள் இதற்கு நல்ல தோற்றத்தைத் தருகின்றன.

வெஸ்பா எலெக்ட்ரிகா

பியாஜியோ நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் சந்தையைப் பிடிக்கும் நோக்கில் தனது பிரீமியம் மாடலான வெஸ்பா ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் வெர்சனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் வெஸ்பா எலெக்ட்ரிகா மாடலை இந்தியச் சந்தைக்காகச் சில மாற்றங்களுடன் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. டிசைனைப் பொருத்தவரை ஐசி இன்ஜின் வெஸ்பாவின் சில் அவுட் மாடலில் இந்த எலெக்ட்ரிகா இருந்தாலும், இது முழுக்க முழுக்க 4 கிலோவாட் பவரை வெளிப்படுத்தும் டிசி மோட்டாரினால் இயங்குகிறது. 200 என்எம் டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. இரண்டு விதமான டிரைவிங் மோட், மொபைல் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகள் இதில் வழங்கப்படும். இதில் முழுமையான டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. இதில் போன் கால், மெசேஜ் வசதிகளும் உண்டு. வாய்ஸ் கமாண்ட் வசதியும் உள்ளது. ஹெல்மெட்டில் இதற்கான இணைப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிகிறது. அடுத்த ஆண்டில் இந்தியச் சந்தைக்கு வெஸ்பா எலெக்ட்ரிகா வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x