Published : 17 Feb 2020 09:49 AM
Last Updated : 17 Feb 2020 09:49 AM

நவீனத்தின் நாயகன் 14: புதுப்பணக்கார ஆட்டம்

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ஈலான் ஒரு பந்தா பரமசிவம். அவருக்கு வாழ்க்கையில் ஜெயித்தால் போதாது, அதை உலகத்துக்குத் தம்பட்டம் அடிக்க வேண்டும். கையில் 22 மில்லியன் வந்தவுடன் அனுபவி ராஜா அனுபவி. ஒரு குட்டி விமானமும், தனி வீடும் வாங்கினார். அத்தோடு, மெக்லாரன் எஃப் 1 (McLaren F 1) என்னும் ஸ்போர்ட்ஸ் கார். விலை ஒரு மில்லியன் டாலர். உலகில் மொத்தம் 61 பெரும் பணக்காரர்கள் மட்டுமே வைத்திருந்தார்கள். விடுவாரா இந்தத் தனித்துவத்தை? வாங்கினார். வாங்கினால் மட்டும் போதுமா? நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா? டீலர்கள் வீட்டில் டெலிவரி செய்தார்கள். இதை சி.என்.என். தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடு செய்தார். காரில் காதலி ஜெஸ்ட்டினோடு ஸ்டைலாக உட்கார்ந்து பேட்டி. ஈலானின் பேச்சு தலைக்கனத்தின் உச்சகட்டம்.

“நான் நினைத்தால், அட்லான்ட்டிக் கடல் பகுதியில் இருக்கும் பஹாமாவில் (Bahama)* ஒருதீவை வாங்குவேன். அதை என் சாம்ராஜ்ஜிய மாக்குவேன். ஆனால், என் ஆசை அதுவல்ல. நான் அடுத்த ஸ்டார்ட் அப் கம்பெனி தொடங்கப்போகிறேன்.”

* பஹாமா ஒரு தீவுக் கூட்டம். 700 தீவுகள் இருக்கின்றன. தனியார் வாங்கலாம்.

மக்லாரன் கார் வைத்திருந்த 61 பேரும் கொழுத்த பணக்காரர்கள். அவர்கள் இந்தக் காரை முக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது மட்டுமே பயன்படுத்துவார்கள். நம் ஹீரோவுக்கு அந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையவே கிடையாது. அடுத்த தெரு ஸ்டார்பக்ஸில் காப்பி குடிக்கப்போனாலும், மெக்லாரன் சவாரிதான். எங்கே இடம் கிடைக்கிறதோ, அங்கே பார்க்கிங். காரின் மேல் பாகம் முழுக்கப் பறவைகளின் எச்சம். துடைப்பதோ, கழுவுவதோ கிடையாது.

கையில் காசு வந்தவுடன் மறை கழண்டுவிட்டதோ என்று பலருக்கு சந்தேகம். ஒருநாள். துணிச்சல் முதலீட்டாளர் ஒருவரைச் சந்திக்கச் சக ஊழியரோடு புறப்பட்டார். மெக்லாரனில் சிறிது தூரம் போனவுடன் சகாவிடம் சொன்னார்,``இப்போது பார்த்துக்கொள்.” ஆக்சிலேட்டரை அழுத்தினார். கார் தடுப்புச்சுவரின் மேல் ஏறி உயரே பறந்து தரையில் விழுந்தது. டயர்கள் நாலாதிசையிலும். ஜன்னல் கண்ணாடிகள் தூள் தூள். கதவுகள், முன்புறம், பின்புறம், பார்க்கும் இடமெல்லாம் அடி வாங்கியிருந்தது. நல்ல காலம். ஈலானுக்கும், நண்பருக்கும் சிறுகாயம் கூட இல்லை. நண்பருக்கு ஷாக். ஈலான் சாதாரணமாக நடந்துவந்தார். சொன்னார், ‘‘ஒரு விஷயம் தெரியுமா? காருக்கு இன்ஷூரன்ஸ் இல்லை. காருக்கு ஆனது ஆகட்டும். அது முடிந்த கதை. நாம் மீட்டிங்குக்குப் போக வேண்டும். நேரமாகிறது.” ஒரு மில்லியன் கோவிந்தா. ஈலான் ஒன்றுமே நடக்காததுபோல் டாக்சியைக் கூப்பிட்டார். வந்தது. புறப்பட்டார். நண்பர் நினைத்தார்,``இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலியே?”

ஈலான் மட்டுமல்ல. திடீர் மில்லியனர்கள் பெரும்பாலும் இப்படித்தான்.

2001 – ம் ஆண்டு. டேவிட் லீ எட்வர்ட்ஸ் (David Lee Edwards) என்னும் இளைஞர் வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தார். வீட்டில் “தண்டச்சோறு” பட்டம். அடித்தது ஜாக்பாட். வருமான வரி பிடித்தத்துக்குப் பின் கையில் 27 மில்லியன் டாலர்கள். வீடு, கார், சொந்த விமானம், காதலி. தாம் தூம் செலவுகள். இரண்டே வருடங்கள். ஓட்டாண்டியானார்.

2002 – ம் ஆண்டு. ஜாக் விட்டேக்கர் (Jack Whittaker) தொழிலதிபர். அவரிடம் 100 பேர் வேலை பார்த்தார்கள். மனைவியை இழந்தவர். ஒரே மகள். எளிமையான வாழ்க்கை. அடித்தது ஜாக்பாட். வருமான வரிப் பிடித்தத்துக்குப் பின் கையில் 93 மில்லியன் டாலர்கள். பிசினஸை மூடினார். நாள் முழுக்கச் சூதாட்டம். வீட்டில் பலமுறை கொள்ளையர்கள். மகள் போதைப் பொருளுக்கு அடிமையானாள். மகளும், பேத்தியும் படுகொலை. வீட்டுக்கு யாரோ தீவைக்க அத்தனையும் சாம்பல். விட்டேக்கர் கடனில்.

2002. இங்கிலாந்தில் குப்பை பொறுக்கும் மைக்கேல் கரோலுக்கு (Michael Carroll) 10 மில்லியன் பவுண்ட்கள் (அன்றைய மதிப்பில் சுமார் 130 கோடி ரூபாய்) ஜாக்பாட் அடித்தது. பிர
மாண்ட மாளிகையாக வீடு, போதை மருந்துகள், விலைமாதர் – பத்தே வருடங்களில் எல்லாம் போச். கசாப்புக் கடையில் வாரம் 400 பவுண்ட்களுக்கு வேலைக்குப் போனார்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் லாட்டரிகளில் ஜெயிப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் சூதாட்டம், மது, மாது, முட்டாள்தனமான பிசினஸ் முதலீடுகள், நண்பர்கள் / உறவுகளால் ஏமாற்றம் எனப் பல வழிகளில் ஐந்தே வருடங்களில் கையிருப்பை இழந்து வாழ்வாதாரத்துக்கே திண்டாடுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

நம் நாட்டில் கடத்தல், கொள்ளை எனப் பல மிரட்டல்கள் வருவதால், லாட்டரிப் பரிசு பெறுபவர்களின் விவரங்களை அறிவிப்பதில்லை. ஆனால், ``கோன் பனேகா குரோர்பதி”யில் சில சோகக்கதைகள் உண்டு. 2011. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுசீல்குமார் அமிதாப் பச்சனிடமிருந்து 3.46 கோடி ரூபாய்க்கான காசோலை வாங்கினார். மூன்றே வருடங்கள். காசு காலி. குடும்பத்தைக் காப்பாற்ற, மாதம் 18,000 ரூபாய் சம்பளத்துக்குப் பள்ளி ஆசிரியர் வேலை, வீட்டில் பசு வளர்த்துப் பால் வியாபாரம்.

ஈலானுக்கு மது, மாது, சூதாட்டம் என்னும் கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. பந்தா காட்டுவது மட்டுமே. வந்த 22 மில்லியனில் செலவழித்தது போக 16 மில்லியன் மிச்சம். 4 மில்லியனை வருங்காலத் தேவைக்கான சேமிப்பாக வைத்துக்கொண்டார். மிச்சம் 12 மில்லியன்? தன் அடுத்த ஸ்டார்ட் அப் கம்பெனியில் முதலீடு. ``எனக்கு முதலீடு பிரச்சினையே இல்லை. நான் ஒன்றிரண்டு ஃபோன்கால்கள் செய்தால் போதும். 50 மில்லியன் வந்து கொட்டும்” என்று சொன்னார். இது நிஜம். ஏனென்றால், ஜிப் 2 வெற்றியால், அவர் ஜெயித்த குதிரை. அவரை நம்பிப் பணம் கட்ட ஏராளமான துணிகர முதலீட்டாளர்கள் காத்திருந்தார்கள். ஆனால், சொந்தப் பணத்தை வைத்து ரிஸ்க் எடுப்பதில் ஈலானுக்குத் தனி த்ரில். அதனால், 12 மில்லியன்களைப் போட்டார்.

பணம் ரெடி. ஐடியா? தேடினார். கனடாவில் நோவா ஸ்காட்டியா வங்கியில் எடுத்த பயிற்சி நினைவுக்கு வந்தது. வங்கிகளைப் பற்றி மனதில் பதிந்திருந்த அனுமானமும் - வங்கிகளின் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் பணக்கார முட்டாள்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் காப்பி அடிக்கத்தான் தெரியும். ஒரு வங்கித் தலைவர் மலை உச்சிக்குப் போய்க் கீழே குதித்தால், எல்லோரும் குதிப்பார்கள். அறை நடுவில் தங்கம் கொட்டிக் கிடக்கும்போது, முதல் வங்கிக்கார் அதைத் தொடாவிட்டால், மற்ற யாருமே சீந்தமாட்டார்கள்.

இன்டர்நெட் வங்கி தொடங்கினால்… இப்போது இருக்கும் அத்தனை வங்கிகளையும் ஓரம் கட்டிவிடலாம். சில வருடங்களில் உலக வங்கி சாம்ராஜ்ஜியச் சக்கரவர்த்தியாகலாம். ஈலானின் கற்பனைக் கோட்டைகள். வங்கி அனுபவம் கொண்ட அதித் திறமைசாலிகள் தேவை. நோவா ஸ்காட்டியா வங்கியில் அத்தகைய ஒருவரைப் பார்த்து ஈலான் பிரமித்திருக்கிறார். அவர் - ஹாரிஸ் ஃப்ரிக்கர் (Harris Fricker). அவர் வாங்கியதைவிடப் பல மடங்கு சம்பளம், கம்பெனியில் பங்காளியாக வாய்ப்பு. தன்னோடு கிறிஸ்டோஃபர் பெய்ன் (Christopher Payne) என்னும் நிதித்துறை மேதையையும் அழைத்து வந்தார். இவர்களோடு, ஜிப் 2 ஊழியர் எட் ஹோவும் (Ed Ho) நான்காவது பங்காளியாகச் சேர்ந்தார். அதிகப் பங்குகள் ஈலானிடம். டிசம்பர் 1999. ``எக்ஸ்டாட்காம்” (X.com) என்னும் பெயரில் கம்பெனி ஸ்டார்ட்.

ஒரு சிறிய வங்கியை வாங்கி, அதில் இன்டர்நெட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஈலான் திட்டமிட்டார். ஆனால், இதற்கு ஏகப்பட்ட அரசுக் கட்டுப்பாடுகள். ஆகவே, கிளைகள் எதுவுமே இல்லாமல், இன்டர்நெட் மூலம் மட்டுமே செயல்படும் வங்கி தொடங்க முடிவெடுத்தார். ஈலானுக்கு ஒரு குணம், பங்காளிகளைக் கலந்து ஆலோசிக்கவே மாட்டார். ஜிப் 2 வெற்றி, கொட்டிய 22 மில்லியன் ஆகியவற்றால், சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஈலான் ஒரு ஹீரோ. ஆகவே, ஊடகங்கள் அவரைத் துரத்தித் துரத்திப் பேட்டி கண்டார்கள். அவரும், “X.com கஸ்டமர்கள் இதுவரை அனுபவித்திராத சுகானுபவம் தரும். வங்கிகளின் வரலாற்றையே மாற்றி எழுதும்” என்று பேசத் தொடங்கினார். ``மணலைக் கயிறாகத் திரிப்பேன், வானத்தை வில்லாக வளைப்பேன்” என்பது போன்ற உறுதிமொழிகள். வழக்கம்போல், ஈலான் கூட்டாளிகள் யாரையுமே கலந்து ஆலோசிக்காமல் தந்த வாக்குறுதிகள், சர்வாதிகார முடிவுகள்.

கூட்டாளிகளுக்குள் தகராறு தொடங்கியது. ஈலான் கனவுலகில் மிதப்பதாகவும், கஸ்டமர்களை ஏமாற்றும் வாக்குறுதிகள் தருவதாகவும், ஹாரிஸ் ஃப்ரிக்கர் குற்றம் சாட்டினார். தன் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்று ஈலான் சுட்டுவிரல் நீட்டினார். சண்டை முற்றியது. ``ஃப்ரிக்கரின் திட்டம் X.com சி.இ.ஓ ஆவது. அது இங்கே நடக்காது. அதற்கு அவர் தனியாகச் சொந்தக் கம்பெனி ஆரம்பிக்கட்டும்” என்று ஈலான் மிரட்டினார். அவர் எதிர்பாராதவிதமாக, மிரட்டல் அவர் மீதே பாய்ந்தது. ஃப்ரிக்கர், கிறிஸ்டோஃபர் பெய்ன், எட் ஹோ ஆகிய மூவரும் வெளியேறினார்கள். அவர்களோடு, ஏராளமான திறமைசாலிகளும்.

இன்னொரு தொழில் முனைவராக இருந்தால் துவண்டுபோய் மூலையில் சுருண்டிருப்பார். ஈலான் சாதாரண ஆளில்லியே? நம் ஊர் பழைய சினிமாக்களில் கபாலி என்னும் பேட்டை ரவுடி வருவார். இவர் அடிக்கடி விடும் டயலாக், “என்னாடா கஸ்மாலம், லுக் வுட்றே? நெஞ்சில மாஞ்சா இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வா. இல்லாட்டி ஜூட் வுட்டுட்டுப் போ.” ஈலானிடம் ஜுட் என்னும் ஓடிப்போவது கிடையவே கிடையாது. ஒண்டிக்கு ஒண்டிதான். சவால்கள் ஆயிரம் வந்தாலும் அவர் தயார். “தள்ளி நில் பகையே, துள்ளி வருகுது வேல்.”

(புதியதோர் உலகம் செய்வோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x