Published : 17 Feb 2020 09:49 AM
Last Updated : 17 Feb 2020 09:49 AM

எண்ணித் துணிக: ஸ்டார்ட் அப் தர்பாரில் சூப்பர் ஸ்டாராக ஆசையா?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப்புக்கு கலாச்சாரத்தை உருவாக்குவதன் அவசியம் பற்றி போன வாரம் பேசினோம். ஒரு கம்பெனி வளர வளரத்தான் அதன் கலாச்சாரமும் உருவாகிறது. இருந்தாலும் உங்கள் ஸ்டார்ட் அப்பின் அடிப்படை கலாச்சாரம் என்ன என்பதை முதலில் உங்கள் மனதில் உருவாக்குங்கள். பின் படிப்படியாக அதை உங்கள் கம்பெனி முழுவதும் ஊதுவத்தி புகைபோல் படரவிடுங்கள். அந்தக் கலாச்சாரத்துக்கு ஏற்ற ஊழியர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உங்கள் கம்பெனிக்கென்று பிரத்யேக கலாச்சாரத்தைக் காப்பாற்றி வாருங்கள்!

கம்பெனி கலாச்சாரத்திற்கேற்ப ஊழியர்களை தேர்ந்தெடுத்தால்தான் சரியான ஊழியர்களால் அக்கலாச்சாரம் கம்பெனியில் வேரூன்றும். தழைக்கும். ஸ்டார்ட் அப்புக்கு ஊழியர் எடுப்பது பெரிய கம்பெனிக்கு ஆள் எடுப்பது போல் தானே என்று பலர் தவறாக நினைக்கின்றனர். அம்மாக்களை கேளுங்கள், கூறுவார்கள்: `ஐந்து பெரியவர்களைக் கூட பார்த்துக்கொள்ளலாம், ஒரு குழந்தையை சமாளிப்பதை விட’. ஸ்டார்ட் அப்பின் செயல்பாடுகளும் தேவைகளும் பெரிய கம்பெனிகளை விட பல மடங்கு மாறுபடும். மேலும் ஸ்டார்ட் அப் டீம் சைஸ் மிகச் சிறியது. அந்தச் சின்ன குழுவில் ஒரு தவறான தேர்வு செய்தாலும் மொத்த டீமின் செயல்பாட்டையும் அது பாதிக்கும். அதேசமயம், ஒவ்வொரு நல்ல தேர்வும் டீமின் செயல்பாட்டை அபரிமிதமாக அதிகரிக்கும்!

‘பெரிய இரும்பு செயினின் பலம் அதன் பலவீனமான இணைப்பில்தான்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. உங்கள் ஸ்டார்ட் அப் டீமின் மொத்த பலமும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வீக்கான ஆசாமியின் பலவீனத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து டீமை செலக்ட் செய்யுங்கள். வெற்றிகரமான டீமை உருவாக்குவது எப்படி என்று வெற்றி பெற்ற ஸ்டார்ட் அப்ஸிடமிருந்து கொஞ்சம் பீராய்வோம்.

ஸ்டார்ட் அப் சூழல் நிலையில்லாதது, திடீர் திருப்பங்கள் நிறைந்தது. வளரும் வேகத்தில் தினமும் சின்னச் சின்ன பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டிய அவசியம் நிறைந்தது. ஊழியர்கள் அப்பிரச்சினைகளைத் தானே நேருக்குநேர் சந்தித்து தீர்க்க வேண்டிய சாதுர்யமும் சாமர்த்தியம் உள்ளவர்களாக தேர்ந்தெடுப்பது முக்கியம். ஒவ்வொரு சின்ன பிரச்சினைக்கும் தீர்வு கேட்டு ஊழியர்கள் உங்களிடம் ஓடி வந்துகொண்டிருந்தால் பிரச்சினைகளையும் விரைவாகத் தீர்க்க முடியாது, உங்கள் வேலையையும் உங்களால் ஒழுங்காகச் செய்ய முடியாது. அதனால் உங்களுக்கு தேவை சுயமாகச் சிந்தித்து குறைந்தபட்ச வழிகாட்டுதலுடன் முயற்சிகளை மேற்கொள்ளும் திறன் படைத்த ‘தனிக்காட்டு ராஜாக்கள்’!

‘ஸ்டார்ட்’ அப் என்றாலே பரபரப்பு, படபடப்பு, பலதரப்பட்ட அழுத்தத்துக்கு இடையே தினம் பன்னிரெண்டு மணி நேர உழைப்புடன் கூடிய நெடும் பயணம். அமர்ந்து ஆசுவாசப்படுத்தக்கூட நேரமில்லாத அசுர உழைப்பு தேவை. உங்கள் ஊழியர்கள் ஆற்றல் அரசர்களாக இருக்க வேண்டும். போஷாக்கும் எனர்ஜியும் அவரிடத்தில் கொட்டிக் கிடந்தால் மட்டுமே சுறுசுறுப்புடன் நீண்ட நேரம் பணிபுரிய முடியும். உங்களுக்குத் தேவை ஹார்லிக்ஸும் பூஸ்ட்டையும் கலந்து குடிக்கும் ‘எந்திரன்கள்’. ஸ்டார்ட் அப் என்பது வேகமாக உருவாகி அதைவிட வேகமாக உருமாறும் ஸ்பீட் பிரேக்கரே இல்லாத அசாத்திய சூழல். ஊழியர்கள் தங்கள் கம்ஃபர்ட் ஸோனில் மட்டுமே அமர்ந்து பணி
செய்வேன், தங்களுக்கு தரப்பட்டிருக்கும் வட்டத்துக்குள்தான் பணி செய்வேன் என்று அடம்பிடித்தால் வேலைக்கு ஆகாது. எந்தச் சூழலுக்கும் சவாலுக்கும் எந்த நேரத்திலும் தயாராக இருந்து மாறிவரும் மாற்றங்களுக்கேற்ப தங்களை அட்ஜஸ்ட் செய்யும் திறனும் தைரியமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் உங்களுக்குத் தேவை ‘தளபதிகள்’!

பன்முகத்தன்மை அவசியம்

ஸ்டார்ட் அப் ஊழியர்கள் பன்முகத்தன்மையோடு Resourceful ஆக இருத்தல் அவசியம். பெரிய கம்பெனிகளில் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் கஷ்டங்களை நிவர்த்தி செய்யவும் அதன் மீது பணத்தை வாரி அடித்து சரிசெய்ய முயல்வார்கள். ஸ்டார்ட் அப்பின் சிறிய சக்திக்கு இந்த அணுகுமுறை சரிப்படாது. சிறந்த ஸ்டார்ட் அப் ஊழியர்கள் பிரச்சினைகள் மீது பணத்தை அடிக்காமல் தங்கள் சாமர்த்தியத்தை மட்டுமே பிரயோகிக்கும் தன்மை உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். அதனாலேயே பெரிய கம்பெனிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட விரைவாகவும் விவேகமாகவும் ஸ்டார்ட் அப்புகள் தீர்க்க முடியும். தங்கள் சின்ன சக்திக்கும், சொற்ப பணத்துக்
கும் உட்பட்டும் கிடைத்த கேப்பில் புகுந்து செல்லும் சென்னை ஆட்டோக்காரரைப் போல் ஸ்டார்ட் அப் ஊழியர் இருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் உங்களுக்குத் தேவை பல ‘பாட்ஷா’க்கள்!

ஸ்டார்ட் அப் என்பதால் ஊழியர்கள் செல்ஃப் ஸ்டார்ட்டர்களாக இருத்தல் அவசியம். வேறு யாரும் வந்து அவர்களை மோடிவேட் செய்து உந்துதல் சக்தி தந்து சியர் லீடர்களாக இருந்து வேலைவாங்க வேண்டிய நிலை இருக்கக் கூடாது. விளம்பரம் செய்தால் அதிக செலவாகும் என்று குறைந்த விலையில் நிறைந்த முயற்சிகள் செய்து வாடிக்கையாளர்களுடன் கனெக்ட் செய்து அவர்களை கரெக்ட் செய்யும் வித்தை தெரிந்திருக்க வேண்டும். உங்கள் ஸ்டார்ட் அப்புக்குத் தேவை கம்பெனி பணத்தை தன் பணமாக பாவித்து செலவழிக்கும் ‘எஜமான்’கள்!

இப்பேற்பட்ட திறனுள்ளவர்களை தேடிப்பிடித்து தேர்வுசெய்து உங்கள் ஸ்டார்ட் அப் டீம் ஆக்குங்கள். பிறகு பாருங்கள். மொத்த மார்க்கெட்டே உங்கள் ‘பேட்ட’. நீங்கள் போட்டியிடும் பொருள் வகை உங்கள் ‘தர்பார்’. பிறகென்ன, நீங்கள் தான் ஸ்டார்ட் அப் உலகின் அடுத்த `சூப்பர் ஸ்டார்’!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x