நீதான் தம்பி முதலிடம்! - என்னை செதுக்கிய மாணவர்கள்

நீதான் தம்பி முதலிடம்! - என்னை செதுக்கிய மாணவர்கள்
Updated on
2 min read

தண்ணீர் ராஜ்யத்துக்கு மீன்தான் சக்கரவர்த்தி. அதற்கு மரம் ஏறுவதுதான் கல்வி எனக் கட்டாயப் பயிற்சி கொடுத்தால் தன் வாழ்நாள் முழுவதும் அது தன்னைத் திறமையில்லாத முட்டாளாகவே கருதும்.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்குட் பாய்

குட் பாய்

நம்ம ஊரில் குட் பாய் அல்லது குட்கேர்ள் என்றால் ‘நன்றாக படிப்பவர்கள்’ என்பது வரையறை.

குட் - பாய் அல்லது குட் கேர்ள் என்பதில் என்னென்ன விஷயங்கள் அடக்கம் என்பதை விளக்குகிறார் அமாஸ் கொமான்ஸ்கி என்கிற ஸ்வீடன் கல்வியாளர்.

எதற்கும் வளைந்து கொடுத்துச் சமரசமாகப் போகிறவர், மதிப்பெண்களை நிறைய எடுப்பவர், எதையும் முறையாகச் செய்து ஆசிரியரைத் திருப்திப்படுத்துபவர், வகுப்பறையில் நடக்கும் சட்டமீறல்கள், கொடுமைகள் விஷயத்தில் நிர்வாகத்தின் பக்கம் நிற்கிற அமைதியானவர், முதல் ரேங்க் எடுக்கும் தகுதியோடு ஆசிரியர் இல்லாதபோது அவரது ஒற்றர் போலச் செயல்படுபவர் என்று நீள்கிறது அந்த வரையறை.

சுறுசுறுப்பு சுப்பிரமணி

பொதுவாக, இத்தகைய மாணவக் கலாச்சாரம்தான் ‘தலைமைப் பண்பு’ என்று போற்றப்படுகிறது. முதல் ரேங்க் என்பது வகுப்பில், பள்ளியில், வட்டத்தில், மாவட்டத்தில், மாநிலத்தில் முதல் மதிப்பெண்கள் பெறுவது என பல வகைப்படும். அவற்றைப் பெறும் 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு பள்ளியின் தரத்தையும் செயல்திறத்தையும் மதிப்பெண்களை வைத்தும் பொதுத் தேர்வு முடிவுகளின் சதவீதத்தை வைத்தும் முடிவு செய்வதே நம் கல்வியின் மிகப் பெரிய பலவீனம். இது உண்மையான வெற்றி அல்ல என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தவர்தான் சுப்பிரமணியம்.

ஒரு சாரணர் முகாமில்தான் 10-ம் வகுப்பு மாணவராகச் சுப்பிரமணியைச் சந்தித்தேன். அவர்தான் ஏதோ முகாம் பொறுப்பாளர்களில் ஒருவர் போலப் படுலாவகமாகப் பல்வேறு பணிகளை அயராமல் செய்துகொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே என்னை அவர் கவர்ந்தார்.

நல்ல உயரம். திரண்ட தோள்கள், நிமிர்ந்த மார்புடன் சாரணர் சீருடையில் கம்பீரமாக இருந்தார். முதலுதவி அளித்தல், உணவு பரிமாறல், தூய்மைப்பணி, மேடை போடுவது என எல்லா வேலையும் அவருக்கு அத்துப்படியாகத் தெரிந்திருந்தது. அவரோடு நான் நட்பு வைத்துக்கொண்டேன்.

பாதுகாவலர்

ஒருநாள் அவர் படித்த பள்ளிக்கூடத்தின் பக்கத்துக் கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடை முளைத்தது. மதுக்கடையால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு ஆசிரியர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்தார். நடையாய் நடந்து போராடினார். அதனால் மதுக்கடை அகற்றப்பட்டது. நாலைந்து நாட்கள் கழித்து ஒரு மதிய உணவு இடைவேளை. பள்ளிக்குள் சமூக விரோதிகள் புகுந்தனர். மது வியாபாரத்தைக் கெடுத்த ஆசிரியரைத் தாக்கினார்கள்.

தலைமை ஆசிரியர் மதிய உணவுக்குப் போய்விட்டார். ஆசிரியருக்கு விழும் அடி, உதையைப் பார்த்ததும் ஆசிரியைகள் அலறி அடித்து ஓடுகிறார்கள். நமது ‘குட் பாய்ஸ்’ தலை தெறிக்க ஓடித் தப்புகிறார்கள். முதல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களும் கூட்டத்தோடு கூட்டமாய் வேடிக்கை பார்க்கின்றனர்.

ஆனால், சுப்பிரமணி மட்டும் ஓடிச்சென்று ஆசிரியரை அணைத்துக் கொள்கிறார். அடியைத் தன்மேல் வாங்கிக்கொள்கிறார். பள்ளியில் அடிதடி சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். காவல்துறைக்கும் செய்தி போனது. சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கும்வரை சுப்பிரமணி நிலைமையைச் சமாளிக்கிறார். ஆசிரியரைக் காப்பாற்றி விடுகிறார். சுப்பிரமணி உடம்பில் மட்டும் ஒன்பது தையல்கள் போடுமளவு பெரிய காயம்.

எது கல்வி?

முதல் மதிப்பெண் பெறுவதுதான் கல்வியா? தன் கண் எதிரே நடக்கும் ஒரு அநீதியைத் தட்டிக் கேட்பதும், நீதி நியாயத்தின் பக்கம் நிற்பதும், சாலையில் விபத்தில் அடிபட்டுத் துடிப்பவரை உடனே முன்வந்து மீட்பதும், முதல் மதிப்பெண்களைப் போலவே முக்கியமில்லையா என்பதுதான் சுப்பிரமணிகள் நம் முன் வைக்கும் கேள்வி.

நமக்கேன் வம்பு என்று ‘குட் பாய்ஸ்’ போல சுப்பிரமணி ஒதுங்காதது ஏன்? ஒரு விவசாயக்கூலியின் மகன் ஆபத்தை எதிர்கொள்ளக் களம் இறங்கியது நம் கல்வியின் சாதனை இல்லையா?

மதிப்பெண்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதற்கான ஒரு வகை வன்முறை. இந்தத் தனித் திறன்களையும் மனித நேயச் சாரத்தையும் வளர்த்தெடுக்கும் ஒரு அமைப்பாகக் கல்வி இருக்க வேண்டாமா?

‘அன்றாட வாழ்வில் நேர்மை, பண்பு நலன், பிறருக்கு உதவுதல் என்பதை அளவிடும் அமைப்பாக, வெறும் அச்சடிக்கப்பட்ட உள்ளடக்கத்தை மனப்பாடம் செய்வதை முற்றிலும் நிராகரிக்கும் அமைப்பாக, நமது அளவிடும் முறையை மாற்றவேண்டும்’ என்கிறது கல்வி சீர்திருத்தம் பற்றிய யஷ்பால் குழுவின் அறிக்கை. அது அமலாகியிருந்தால் சுப்பிரமணி கொண்டாடப்பட்டிருப்பார்.

10- ம் வகுப்புத் தேர்வை மூன்று முறை எழுதித்தான் சுப்பிரமணி முடித்தார். கல்வியைத் தொடர அவருக்கு எங்கேயும் இடம் கிடைக்கவில்லை. ஆசிரியர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்துதான் அவரை பிளஸ் 1-ல் சேர்த்தோம்.

அதன்பிறகு சில புரோட்டாக் கடைகளில் அவர் வேலை செய்ததையும் நான் பார்த்தேன்.

அளவுகோல்

‘குட் பாய்’ எனும் மாணவக் கலாச்சாரத்துக்குள் பொருந்தாமல் நம் கல்வியை விட்டு வெளியேறியவர்களின் பட்டியல் மிக நீளம். கணிதமேதை ராமானுஜன், விஞ்ஞானி ஜி.டி.நாயுடு முதல் இசையமைப்பாளர் ஆஸ்கார் புகழ் ரஹ்மான் வரை அது நீள்கிறது. இவர்கள் எல்லாம் கல்வியில் பின்தங்கிப் பிறகு உலகப் புகழ்பெற்றவர்கள்.

ஆனால், எல்லாருக்கும் உலகப்புகழ் பெறும் வாய்ப்பு கிடைக்கின்றதா என்ன?

அடுத்தமுறை நீங்கள் தலைக்கவசம் அணியாமல் போகிறபோது உங்கள் மேல் நேர்மையான நடவடிக்கையை மட்டுமே எடுக்கும் ஒரு போலீஸ்காரரை எதிர்கொண்டால், விபத்துகளில் சிக்கியவர்களை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் காவலரைப் பார்த்தால், உற்றுக்கவனியுங்கள் அது சுப்பிரமணியாக இருக்கலாம். ஆமாம். அவர் போலீஸ்காரர் ஆகி விட்டார். மதுவிலக்கு கோரி போராடும் மாணவர்களைக் கனிவோடு பார்க்கும் சில காவலர்களில் அவரும் ஒருவராக இருக்கலாம்.

“நீதான் தம்பி முதலிடம்” என்று அவரைப் பார்த்து ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in