Published : 16 Feb 2020 11:22 AM
Last Updated : 16 Feb 2020 11:22 AM

பெண்கள் 360: நாடாளுமன்றத்தை அதிரவைத்த 76 வயது எம்.பி.

தொகுப்பு: ரேணுகா

பட்ஜெட்டில் சிறுவனின் ஓவியம்

கேரள சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் பெண்கள் முன்னேற்றத் துக்கான நிதிநிலை அறிக்கையின் முகப்புப் பக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு சிறுவனின் ஓவியம் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக நிதிநிலை அறிக்கையில் அரசின் சின்னங்களே முகப்புப் பக்கத்தில் இடம்பெறும். ஆனால், திருச்சூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அனுஜத் சிந்து வினயால் ‘என் அம்மாவும் பக்கத்து வீட்டிலுள்ள அம்மாக்களும்’ என்ற தலைப்பில் வரைந்த ஓவியம் முகப்புப் பக்கத்தில் முதன் முறையாக இடம் பெற்றிருக்கிறது. தன் அம்மா சிந்துவும் பக்கத்து வீடுகளில் உள்ள அம்மாக்களும் தினந்தோறும் செய்யும் வேலைகளை ஓவியமாக வரைந்து அம்மாவுக்குப் பரிசளித்தபோது அனுஜத்துக்கு ஒன்பது வயது. பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 2016-ல் ‘சங்கர் ஓவிய அகாடமி’ நடத்திய சர்வதேசப் போட்டிக்கு அனுஜத் வரைந்த ஓவியத்தை அனுப்பியுள்ளார் தந்தை வினயால். அனுஜத்தின் ஓவியம் முதல் பரிசை வென்றது. ஆனால், பரிசு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அனுஜத்தின் அம்மா சிந்து மாரடைப்பால் உயிரிழந்தார். அதனால், மூன்று ஆண்டுகளாக எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே ஓவியம் வரைந்துவருகிறார் அனுஜத். இந்நிலையில்தான் கேரள அரசின் நிதிநிலை அறிக்கையில் அவர் வரைந்த ஓவியம் முகப்பு அட்டையில் இடம்பெற்றிருக்கிறது. அனுஜத்தின் ஓவியத் திறமையைப் பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இளம் சாதனையாளருக்கான விருதை வழங்கிக் கவுரவித்திருக்கிறார்.

பூமி திரும்பிய வீராங்கனை

விண்வெளியில் 328 நாட்கள் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாக முடித்து பிப்ரவரி 6 அன்று பூமிக்குத் திரும்பினார்.

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் என்ற பெருமையைப் பெற்ற கிறிஸ்டினா, விண்வெளியில் நடந்த முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர். இவர் சகநாட்டு விண்வெளி வீராங்கனை ஜெஸிக்கா மீர்யுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் தன் விண்வெளி ஆய்வுப் பணிகள் முடிந்த நிலையில் சோயுஸ் விண்கலத்தின் மூலம் ஐரோப்பிய, ரஷ்ய நாட்டு வீரர்களுடன் கஜகஸ்தான் நாட்டிலுள்ள ஜெஸ்கஸ்கன் பகுதியில் காலை 4.12 மணிக்குத் தரையிறங்கினார். விண்வெளிப் பயணத்தில் ஆறுமுறை விண்வெளியில் நடந்துள்ளார் மேலும், விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு வெளியே 42 மணிநேரம் 15 நிமிடங்கள் அவர் ஆய்வுப் பணி மேற்கொண்டுள்ளார்.

அறிவியல் அங்கீகாரம்

2019-ம் ஆண்டுக்கான இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை விருது மும்பை ஐஐடி கணினி அறிவியல் பேராசிரியர் சுனிதா சாராவாகி, ஹைதராபாத் மூலக்கூறு அறிவியல் மையம் (சிசிஎம்பி) முதன்மை விஞ்ஞானி மஞ்சுளா ரெட்டி இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் துணை அமைப்பான ‘இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை’ 2008 முதல் உலக அளவில் அறிவியல் முன்னேற்றத்துக்குப் பணியாற்றிவரும் ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரின் ஆய்வுப் பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கிவருகிறது. அறிவியல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலை இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை அறிவித்தது. விருது பெறும் ஆறு பேரில் சுனிதாவும் ஒருவர். இவர் கணினியில் தரவு ஆராய்ச்சி, இயந்திரக் கற்றல் போன்றவை குறித்து ஆய்வு செய்துள்ளார். சிசிஎம்பி முதன்மை விஞ்ஞானி மஞ்சுளா ரெட்டிக்குப் பாக்டீரியாவில் உள்ள செல் கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிப் பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த 76 வயது எம்.பி.

முதியோர்கள்தாம் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள் என்ற கருத்துக்கிடையே 76 வயது காங்கிரஸ் எம்.பி. விப்லவ் தாக்கூரின் ஆக்ரோஷமான பேச்சு, பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் இமாச்சலப் பிரதேச உறுப்பினர் விப்லவ் தாக்கூர், “நாட்டில் கல்விக்கூடங்கள், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றை உருவாக்கியது யார்? கடந்த ஆறு ஆண்டுகளாக நீங்கள் (பாஜக) செய்தது என்ன? துரோகி என்றால் என்ன? நாடு விடுதலையடைந்தபோது இடதுசாரிகள் அதை ஏற்கவில்லை. அதற்காக அவர்கள் நான்கு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டனர். அப்போதுகூட நேரு அவர்களை துரோகி என்றழைக்கவில்லை. நேருவை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எதிர்த்துப் பேசியிருக்கிறார் அப்போதுகூட அவர் துரோகி என்றழைக்கப்படவில்லை. ஆனால், இன்றோ பிரதமர், உள்துறை அமைச்சர் பற்றி யாராவது பேசினாலோ அவர்களின் கொள்கை குறித்துப் பேசினாலோ அவர்கள் துரோகி என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆறு வயது சிறுவர்களாக இருந்தாலும் இந்த அரசு விடுவதில்லை.

பாகிஸ்தான் என்ற பெயரை எழுபது ஆண்டுகளில் உச்சரித்ததைவிடக் கடந்த ஆறு ஆண்டுகளில் அதிக முறை பயன்படுத்திவிட்டோம். இந்த நாட்டைப் பிரிக்காதீர்கள், இந்த நாடு அப்படியே ஒற்றுமையாக இருக்கட்டும். நாம் மதச்சார்பற்றவர்கள். தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்” என்றார். விப்லவ் தாக்கூரின் இந்தப் பேச்சு நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரின் பெற்றோர் பரஸ் ராம், சர்லா சர்மா ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள். விப்லவ் தாக்கூர் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கெண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x