Published : 16 Feb 2020 11:05 AM
Last Updated : 16 Feb 2020 11:05 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 45: அமாவாசை இரவு பதற்றம்

பாரததேவி

எப்போதும் பொறுமைகாக்கும் நாட்டாமைக்கே இப்போது எரிச்சல் வந்தது. “என்ன சங்கிலி நீயும் வாழ்க்கையில் அடிபட்டவன்தேன், அனுபவப்பட்டவன்தேன். ஊருக்காரக இம்புட்டுப் பேரும் உன் வாயிலருந்து ஒரு நல்ல சொல்லு வரணுமின்னுதேன் வேலைமெனக்கெட்டு கூட்டம் போட்டுட்டு உக்காந்திருக்கோம். இப்ப நேரம் எம்புட்டு ஆச்சு தெரியுமா?” என்றவர் அங்கே இருந்த திண்ணையின் நிழலைப் பார்த்துவிட்டு “நடுச்சாமத்துக்கும் மேல ஆச்சு” என்றார்.

கூட்டத்தின் நடுவில் நின்றிருந்த சங்கிலியாண்டி, “எல்லாரும் என்னப் பொறுத்துக்கிடணும். எனக்குச் சில்லறச் செலவு ரொம்ப இருக்கு. அதனால நானு நாலு வாய்க்கா கத்தரி நடப்போறேன்” என்று சொல்லிவிட்டு விறுவிறு வென்று நடந்தான். “ஏலேய் எரும மாட்டுப் பயலே. ஊருக்கெல்லாம் நானு தண்ணி தர மாட்டேன்னு இங்க கூடி இருக்கக் கூட்டத்துக்குக் கேக்கும்படியா சொல்லிட்டுப் போடா” என்று சன்னாசி கத்த, “இருண்ணே. அவன பொடதியில ஒரு அறை அறஞ்சிட்டு வாரேன். அப்பத்தேன் என் சினம் அடங்கும்” என்று முறுகி முறுகி ஓடிய தனிக்கொடியை நாலஞ்சு பேர், “அவன் பாவத்தில அவன் போறாம்பா. நாய அடிப்பானேன் நரகல சொமப்பானேன்னு பெறவு அவன் நீ அடிச்சதுக்கு ஒரு கூட்டம் போடுவான்” என்று சொல்லி தனிக்கொடியைப் பிடித்து வைத்தார்கள்.

சங்கிலியாண்டியின் பயம்

நிலாக்காலம் முடிந்து அமாவாசை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த விவசாயிகள் ஒரு நாளைக்கு நூறு தடவை வானத்தை அண்ணாந்து பார்த்தாலும் மீண்டும் மீண்டும் சின்னச் சின்ன நம்பிக்கையோடு வானத்தை அண்ணாந்துதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்று அமாவாசை என்பதால் எங்கும் இருட்டு அடர்த்தியாகப் பதுங்கியிருந்தது. வானத்தில் நெருப்புப் பொறியாய் நட்சத்திரங்கள். பெயருக்குக்கூட ஒரு மேகத்துணுக்கு இல்லை. வேர் வரையில் பட்டுப்போன மரங்கள் எல்லாம் இந்த இருட்டுக்குத் தலைவிரித்தாடும் பேய்கள் போலிருந்தன. அரசமரத்து மேடை நிறைய ஆட்கள் படுத்திருந்தாலும் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ‘கவலை கறியைத் திங்கும், விசனம் விதியைத் திங்கும்’ என்பதுபோல் மௌனமாகத் தங்களுக்குள்ளே உழண்டு கிடந்தார்கள்.

சங்கிலியாண்டி கிணற்றோரம் கமலைக் குழியில் கால் மடக்கி உட்கார்ந்திருந்தான். தண்ணிக்கு வேலையிருக்கு என்று தைரியமாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டானே தவிர, அவனுக்குள் நிறைய பயம் இருந்தது. தண்ணி தராத கோபத்தில் எவனாவது மறைந்து நின்று பின் மண்டையைத் தாக்கிவிடுவானோ என்று பயந்தார். அதுவும் நாம் வீட்டுக்குள் படுத்திருந்தால் ஊர்க்காரர்கள் பத்துப் பேர் போய்த் தண்ணியை கிணற்றிலிருந்து நாலு நடை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தவர் பொழுது செங்கமங்கலாக மசங்கும் முன்பே தூக்குப் போனியில் சோற்றோடு பிஞ்சைக்குப் போய்விடுவார்.

பேய்க்குப் பிடித்த பூ

அந்தக் காலத்தில் நிறையப் பேர் அதிலும் குறிப்பாகப் பெண்கள் எல்லோருக்கும் நீச்சல் தெரியுமென்பதால் தங்களோடு கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வார்கள். ஏனென்றால், வீட்டுக்குள் கயிற்றைப் போட முடியாது. பெரிய ஒற்றை மூங்கில் கம்போ வேறு ஏதும் கம்போதான் குடிசையின் குறுக்கே போடப்பட்டிருக்கும். அதில் கயிற்றைப் போட்டுத் தொங்கினால் அந்தக் கூரை வீடே ‘மளமள’வென்று சரிந்துவிடும். இரவிலும் பகலிலும் எப்போதும் ஆள் நடமாட்டம் இருப்பதால் மரங்களில் தூக்குப்போட்டுச் சாக முடியாது. அரளிக்காயையோ குன்னிமுத்துவையோ சிலர் அரைத்துக் குடித்துவிட்டுச் சரியான வைத்தியம் இல்லாததால் பத்து நாள் வரை உயிரும் மூச்சும் இழுத்தவாறு சித்ரவதைப்பட்டுச் செத்ததைக் கண்ணால் கண்டதால், இப்போது யாருமே அவற்றை அரைத்துக் குடிப்பதில்லை.

சங்கிலியாண்டி கிணற்றிலும் மூவர் விழுந்து செத்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எல்லோரும் விளக்கெண்ணெய்யைத்தான் தலைக்குத் தேய்த்தார்கள். ‘கரம்பை’ என்றொரு வகை மண்ணைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தார்கள். வேறு பூக்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் கிடைக்காது. அதனால், ஆவாரம்பூக்களை மட்டும் காலையிலும் மாலையிலும் பறித்துத் தலையில் சூடினார்கள். மாசி மாதம் மட்டும் ‘கொரண்டிப்பூ’ என்று ஒருவகை பூ பூக்கும். இது நீள நீள காம்புகளோடு வெள்ளை வெளேர் என்று இருக்கும். பிச்சிப்பூவைவிட அதிக மணமாயிருக்கும். ஆனால், அந்தப் பூ இரவில் மட்டும்தான் பூத்து வெண்மையும் மணமும் கூடி இருக்கும். விடியற்காலையில் பார்த்தால் பார்க்கச் சசிக்காது. சாம்பல் நிறத்தில் வாடி வதங்கிக் கிடக்கும். அதனால், அது பேய்க்குச் சொந்தமான பூ என்று எல்லாப் பெண்களும் பயப்படுவார்கள். இரவில் படுக்கும்போது ஞாபகமாக அதை எடுத்துவிடுவார்கள். ஒருவேளை பூவை எடுக்க மறந்துவிட்டால் பேய்கள் வந்து தங்களைப் பிறாண்டிவிட்டதாகக் கூறி அடுத்தவர்களைப் பயமுறுத்துவார்கள். அவர்கள் சொன்னதுபோல் நிஜமாகவே அவர்களின் உடலில் சிறு சிறு கீறல் சிவந்த முகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கும். இதற்குக் காரணம் பகலில் அவர்கள் வேலை செய்தபோது பயிர்களின் தோகைகள் அறுத்துவைப்பது, இவர்களும் உறக்கத்தோடு சொறிந்து வைப்பதும் ஒரு காரணம். யாரும் நகங்களை வெட்டுவதில்லை. இந்தக் கொரண்டிப்பூ விதைகளைக் கொண்டு வந்து செறட்டையில் போட்டு வெயிலில் வைத்தால் ‘டப் டப்’ பென்று வெடித்துச் சிதறும். சிறுவர்களுக்கு அது ஒரு விளையாட்டு.

பத்து வயதுவரைக்கும் மொட்டை

இப்படித் தலைக்குப் பெண்கள் விளக்கெண்ணெய், கரம்பை என்று போட்டுக் குளிப்பதாலோ என்னவோ ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைமுடி இருகை கொள்ளாமல் பின்னத்திக்கால் முட்டிவரைக்கும் தொங்கும்.

இதனாலேயே நிறையப் பிள்ளைகள் இருந்ததால் வேலை செய்வதோடு தலைமுடியையும் பராமரிக்க முடியாததால் வருசத்துக்கொரு முறை எதாவது கோயில், குளத்துக்குப் போகும்போது தங்கள் முடியையும் சிறு பெண்களின் முடியையும் நேத்திக்கடன் என்று பெண்கள் மொட்டையடித்துவிட்டு வருவார்கள். பத்து வயது வரைக்கும் பெண் பிள்ளைகளுக்கு மொட்டைதான். இல்லாவிட்டால் அவர்களின் தலையெல்லாம் ஈருக்கும் பேனுக்கும்தான் சொந்தமாகிப்போகும். பிள்ளைகள் சாப்பிடும் சாப்பாடெல்லாம் பேனுக்குத்தான் போய்ச் சேரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அன்றைய நாளில் இப்போதுள்ள சீப்பெல்லாம் கிடையாது. மரச்சீப்பும், ஈருளியும்தான் தெருவில் விற்கப்படும். இதோடு சிக்கெடுக்க ஈய சினுக்கோரியும் உண்டு.

இப்படி நிறைய முடி உள்ள குமரி ஒருத்தி சங்கிலியாண்டியின் கிணற்றில் தலைகுப்புற விழுந்து செத்துக்கிடந்தாள். அவள் முடி கிணறெங்கும் பரவிக்கிடந்தது. விடியற்காலையில் தோட்டத்துக்கு இறைப்பதற்காகக் கமலை கட்டப்போன சங்கிலியாண்டி கிணற்றுக்குள் எட்டி இந்த முடியைப் பார்த்தவன்தான் ‘அய்யோ’ என்று அப்படியே மயங்கி விழுந்தான். ஒரு வாரம் காய்ச்சலில் படுத்துவிட்டான். பிறகு செய்யாத வைத்தியமெல்லாம் செய்து பிழைக்கவைத்தார்கள். இப்போதும் அவனுக்கு அந்தப் பயம் நிறைய இருந்தது.

கிணற்று கமலைக்குழியில் உட்காராமல் பிஞ்சையின் வேறு எந்தப் பக்கமாவது உட்கார்ந்திருந்தால் எங்கே வேலிதாண்டி வந்து ஊர்க்காரர்கள் தண்ணியை எடுத்துக்கொண்டு போய்விடுவார்களோ என்ற பயத்தில் அங்கே இருந்த குத்துக்கால் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார். அன்று அமாவாசையாக இருந்ததால் அவருக்குப் பயம் இன்னும் அதிகமாயிருந்தது. தூரத்து ஒற்றைப் பனை மரத்திலிருந்து மயில் மகிழ்ச்சியுடன் அகவுவதாக நினைத்துக் கொடூரமாக அலறியது. அந்தக் குரலில் திகிலடைந்துபோன சங்கிலியாண்டி திக்திக்கென்று பதற்றத்தோடு உட்கார்ந்திருந்தான். அப்போது அவனுக்குப் பொண்டாட்டி அன்னத்தாயியை நினைத்துக் கோபம் வந்தது.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x