Published : 15 Feb 2020 11:27 AM
Last Updated : 15 Feb 2020 11:27 AM

பயிர்ப் பாதுகாப்பில் விளக்குப் பொறியின் அவசியம்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

கடந்த வாரம் பூச்சிகளின் பல்வேறு வடிவங்களைப் பார்த்தோம். மேலும், அவற்றின் செயற்பாடுகளால் பயிர் சாகுபடியில் எவ்வாறு பாதிப்பு உண்டாகிறது என்பதைக் குறித்து அறிந்துகொண்டோம். தற்போது அதன் காரணத்தால் ஏற்படும் பொருளாதாரச் சேதத்தையும் பற்றிப் பார்ப்போம்.

கடந்த வருடத்தில் மானாவாரிப் பயிராகவும் எளிதில் சாகுபடி செய்து வரும் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களால் ஏற்பட்ட மகசூல் இழப்பைப் பற்றி அறிந்திருப்போம். அதனால் கால்நடைத் தீவனத்துக்கு இங்கே தட்டுப்பாடு ஏற்பட்டது. பிற நாடுகளிலிருந்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இவ்வருடம் கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் லோகஸ்டு எனக் கூறப்படும் பாலைவன வெட்டுக் கிளிகளால் கடுகு உள்பட்ட இதரப் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டது.

இவை பயிரை வெட்டித் துண்டு துண்டாக்கிச் சேதப்படுத்தும் வகையைச் சார்ந்தவை. இவ்வருடம் சம்பா பருவத்தில் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் நெற்பயிரில் ஆனைக்கொம்பன், புகையான் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் ஒரு வகை தத்துப் பூச்சிகளால் உண்டான பயிர் இழப்பையும் நாம் அறிவோம்.

இவ்வாறு பல்வேறு பயிர்களில் பூச்சிகளின் சேதம் ஏற்படும்போது பொருளாதார இழப்பு பேரளவு ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பூச்சி மருந்துகளால் மட்டுமே சாத்தியமாவதல்ல. பூச்சிக்கொல்லிகளால் முழுப் பயன் இல்லை என்று அறிந்த சமயம், பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலாது.

பூச்சிகளை மேலாண்மை மட்டுமே செய்ய இயலும் எனவும் பொருளாதாரச் சேதநிலை என்ற ஒன்றை வரையறுத்து அதன்படி பூச்சிக்கொல்லி தெளிப்பது நல்லது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதாவது பூச்சிகளால் ஏற்படும் மகசூல் இழப்பு, அதைக் கட்டுப்படுத்த தெளிக்கும் பூச்சிக்கொல்லி செலவைவிடக் குறைவாக இருந்தால் பூச்சிக்கொல்லி தெளிக்கத் தேவையில்லை. அதிகமாக இருந்தால் மட்டும் பூச்சிக்கொல்லி தெளித்தால் போதும்.

பின்னர் ஒரு கட்டத்தில் பூச்சிக்கொல்லி தெளித்த வயல்களைவிட அதைத் தெளிக்காத வயல்களில் விளைச்சல் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. தெளிக்காத வயல்களில் நன்மை செய்த பூச்சிகள் அதிகமாக இருந்து சமன் செய்து பயிரைக் காத்தது கண்டறியப்பட்டது.

அதற்குப் பிறகுதான் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலாவதாகப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறிவது முக்கியம் எனக் கண்டறியப்பட்டது. இது எவ்வாறு சாத்தியமெனில் இரவு நேரங்களில் தாய் அந்துப்பூச்சிகள், வண்டுகள் விளக்கு வெளிச்சத்துக்குக் கவரப்பட்டு அதைச் சுற்றியே வட்டமிடும். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி விளக்குப் பொறிகளை உருவாக்கி வயலின் ஆங்காங்கே வைத்து எவ்வகைப் பூச்சிகளின் நடமாட்டம் உள்ளன என்பதை அறியலாம்.

இவ்வகை விளக்குப் பொறிகளில் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் விளக்குப்பொறியை நோக்கி வரும்போது அதன் கீழ் நீரோடு மண்ணெண்ணெய் அல்லது பூச்சி மருந்து கலந்த நீரைத் தட்டில் வைப்பதன் மூலம் விளக்கால் கவரப்பட்ட பூச்சிகள் இதனுள் விழுந்து மடியும். இதனால் இப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியை ஓரளவு கட்டுப்படுத்த இயலும். தற்போது பல்வேறு வடிவங்களில் மின் விளக்குப் பொறிகள் மின் இணைப்பைப் பயன்படுத்தியும் சூரிய சக்தியைப் பயன்படுத்தியும் விற்பனைக்கு வருகிறது.

இத்துடன் பூச்சியினங்கள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தால் கவரப்படும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக மஞ்சள் நிறத்தில் அட்டைகள், தகர டின்கள் ஆகியவற்றில் மஞ்சள் பெயிண்ட் அடித்து அவற்றில் பூச்சிகள் ஒட்டுமளவுக்குப் பசையைத் தடவி வயலில்/ தோட்டத்தில் வைப்பதன் மூலம் பூச்சிகளின் சேதத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இவையல்லாது இயற்கையிலேயே ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளின் வாசனைகளுக்குக் கவரப்படும் தன்மை கொண்டுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திப் பெண் பூச்சிகளிலிருந்து ஒரு வகை திரவத்தை எடுத்து அதைப் பயன்படுத்தி பொறிகள் உண்டாக்கி வயல்களில் அமைப்பதால் பேரளவு ஆண் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

இதைத் தவிர பூச்சிகளை ஆரம்பம் முதலே கட்டுப்படுத்த ஐந்து வழிகள் உண்டு.

1) 5 செமீ முதல் 10 செமீ வரை கோடை உழவு செய்யும்போது அடிமண் கிளரப்படும். இதனால் பூச்சிகளின் பல பருவ நிலைகள் மண்ணுக்கு மேல் வரும். இவ்வகைப் பூச்சிகளின் பல்வேறு பருவ நிலைகள் அதிக சூரிய வெளிச்சத்தாலும் பறவைகள் கொத்தித் தின்பதாலும் அழிந்து விடும். வாழ்ககைச் சுழற்சியை முடக்கி அழிக்கலாம்.

2) வயல்களில் தனிப் பயிராகப் பயிரிடாமல், கலப்புப் பயிராகப் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்வதால் குறிப்பிட்ட பூச்சிகளை அழிக்கலாம்.

3) வரப்புகளில் தீமை செய்யும் பூச்சிகள் வரப்புகளிலும் சாகுபடி செய்யப்படாத வரப்புகளில் களையெடுத்து வயலைச் சுத்தமாக வைப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

4) ஒவ்வொரு பயிரையும் தோ்ந்தெடுக்கப்பட்ட இடைவெளியில் நட வேண்டும். இடை வெளி குறைவுபடுமாயின் நுண்ணிய சீதோஷ்ண நிலை தீமை செய்கிற பூச்சிகளின் பெருக்கத்துக்குச் சாதகமாகி விடும்.

5) அறுவடை செய்த பிறகு பயிர்க்கழிவுகளை எரிக்காமல் விட்டுவிட்டால் குறிப்பாக நெற்பயிர் அறுவடைக்குப் பின் அடுத்த பயிர் சாகுபடி செய்கிற வரை வைக்கோலில் சிலந்தி குடிகொண்டிருக்கும். சர்க்கரைப்பாகு, தேன் கலந்த தண்ணீரை வயல்களில் தெளிக்கும் போது நன்மை செய்யும் பூச்சிகளான சிவப்பு எறும்பு அதிகமாகப் பெருகி தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x