Published : 14 Feb 2020 12:56 PM
Last Updated : 14 Feb 2020 12:56 PM

சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்

சந்திப்பு : மகராசன் மோகன்

‘தமிழ் ஓசை - இயற்றமிழ் இசைத் தமிழில்..’ என்ற பெயரில் சங்க காலத் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்து எளிமையாக அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சோர்வின்றிச் செய்துவருகிறார், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கு முன் இவரது இசையமைப்பில் வெளியான ‘பள்ளி விழாப் பாடல்கள்’ பெரும் கவனத்தை ஈர்த்தன.

தற்போது தேர்ந்தெடுத்த சங்கத் தமிழ்க் கவிதைகளுக்கு இவர் தந்திருக்கும் இசைவடிவம் உலகளாவிய தமிழர்களிடையே கவன ஈர்ப்பை பெற்றுவருகிறது. வரும் 23-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழ் நடத்தும் ‘அன்பாசிரியர்’ விருது விழா நிகழ்வில் ஜேம்ஸ் வசந்தனின் ‘தமிழ் ஓசை’ இசை நிகழ்ச்சி மேடையேற இருக்கிறது. இத்தருணத்தில் அவருடன் ஓர் உரையாடல்...
திரையிசை ஆக்கம், திரைப்பட இயக்கம் எனக் கவனம் செலுத்திக்கொண்டிருந்தீர்கள். தற்போது பள்ளி மாணவர்களுக்கான பாடல்,

சங்கத் தமிழுக்குச் சேர்ந்திசை வடிவம் என உங்கள் இசையின் திசை மாறியது ஏன்?

நாம் கொஞ்சி கொண்டாடும் தமிழுக்கு இசை வழியே ஏதாவது செய்ய வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு மட்டும் இருக்காதா? எனக்குள் நீண்ட காலமாகத் தேக்கி வைத்திருந்த எண்ணத்துக்கு இப்போது ‘தமிழ் ஓசை’ என்ற பெயரில் உயிர் கொடுத்து வருகிறேன். நாம் வியக்கும் சங்க காலத் தமிழ்ப் பாடல்களை எளிமையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஒரு முயற்சிதான் இது. முதலில் இதைத் தொடும்போது மாணவர்களுக்காகச் செய்ய வேண்டும், தமிழை மூச்சாகச் சுவாசிப்பவர்களுக்காகச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு இறங்கவில்லை.

இப்படி ஒரு வேலையைச் செய்யவிருக்கிறேன் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அவரது குழுவினருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, ‘இது மாணவர்களுக்கும் சேரும்விதமாக அமைக்கலாமே, இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு மிகவும் பயனளிக்குமே!’ என்று ஆர்வம் செலுத்தினார்கள். சங்க காலத் தமிழ்ப் பாடல்களுக்கு இசை வழியே ஒரு அணிகலன் சேர்க்கும் முயற்சியே இது.

சங்கத் தமிழ்ப் பாடல்களை எப்படித் தேர்வு செய்தீர்கள்; எவ்வளவு நேரம் இந்த இசை நிகழ்ச்சி அமையும்?

சங்க காலப் பாடல்கள் நம் சொத்துகள். பாடல்கள் தேர்வுக்காகச் சில மாதங்கள் ஆராய்ச்சியில் இறங்கினேன். அப்போதுதான் எனக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பிரேமலதாவின் தோழமை கிடைத்தது. சங்க காலப் பாடல்கள் குறித்து அவர் நிறைய ஆய்வு செய்திருக்கிறார்.

அத்தனையையும் சமூக வலைத்தளத்தில் பதியவும் செய்திருக்கிறார். எனதார்வத்தையும், பங்களிப்பு குறித்த தகவல் சேகரிப்பையும் அவரிடம் கொட்டினேன். அப்போது, ‘அடடே.. நீங்களே.. ஆராய்ச்சியில் இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்களே? இனிச் சொல்லித்தர ஒன்றுமில்லை!’ என்றார். திருக்குறளில் கடவுள் வாழ்த்து தொடங்கி புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, நாட்டுப்புறப் பாடலில் தாலாட்டு, ஒப்பாரி, மீனவர் பாடல்கள் என்று நீண்டு பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் வரைக்கும் இந்தப் பகுதியில் இடம்பெறும்.

எளிமைத் தமிழில் அமைந்துள்ள இந்த சங்கப்பாடல் நிகழ்ச்சி சுமார் 90 நிமிடங்கள் வரைக்கும் இருக்கும். பாடல்களுக்கு இடையே கலகலப்பான தொகுப்புரை, சம்பவங்கள் என நேரம் போவதே தெரியாத மாதிரி நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறோம். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே குழுவினரைக் கொண்டு சேர்ந்திசை வடிவத்தில் இதை மக்களுக்கு அளிப்பதுதான்.

இந்த நிகழ்வைச் சேர்ந்திசை வடிவத்தில் கொடுக்க என்ன காரணம்?

மூத்த இசையமைப்பாளர், எம்.பி.சீனிவாசன் இசைத்துறையில் ஒரு ஜீனியஸ். நம் இதழியல் துறையில், வழக்கத்தில் உள்ள மாணவர் பத்திரிகையாளர் திட்டம் மாதிரி, எண்பதுகளின் காலகட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைத்து சேர்ந்திசைக்குழு திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி மாணவர்களைப் பல இடங்களில் ஊக்கப்படுத்தினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வந்தபோது நானும் அங்கே அந்தக் குழுவில் சேர்ந்து பயின்றேன். அந்தத் தாக்கம்தான் முக்கியக் காரணம்.

உங்கள் பாடகர் குழுவினர் பற்றிச் சொல்லுங்களேன்?

எங்கள் சேர்ந்திசைக் குழுவில் 60-ல் இருந்து 70 பாடகர்கள் உள்ளனர். எல்லோரும் இளைஞர்கள். அனைவருமே நிகழ்ச்சியில் பாடும் பாடல்களை மனப்பாடம் செய்தவர்கள். தமிழர்களோடு, மலையாளம், இந்தி, மராட்டி, கன்னடம் எனப் பல மொழி பேசுபவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் தமிழின் பெருமையைக் கொண்டு சேர்ப்பதிலும் எனக்குத் தனி மகிழ்ச்சி.

‘தமிழ் ஓசை’ எனப் பெயர் வைக்க சிறப்புக் காரணம் உண்டா?

வானொலி நிகழ்ச்சி தொடங்கி நம் பயன்பாட்டில் பரவலாகச் சென்று சேர்ந்த சொற்கள் என்பதால் வைத்தோம். தமிழ் இசை என வைத்திருக்கலாம். அதையும் கடந்து தமிழ் ஓசை என்பது இன்னும் நெருக்கமாகத் தமிழின் புகழ் ஒலிக்க வேண்டும் என்று வைத்தேன். அதைக் கேட்கும் அனைவரும் உணர்ந்து வருகிறார்கள்.

இந்த முயற்சியின் பின்னணியில் உங்களுக்கு ஊக்கம் தந்தவர்கள்?

தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் ஜகத் கஸ்பர், கடந்த ஆண்டு நடத்திய தமிழ் மாநாடு ஒன்றின் நிகழ்வை முன்கூட்டியே அறிந்து செப்டம்பரிலேயே அவரைச் சந்தித்தேன். அப்போது என் திட்டத்தைக் கூறினேன். இரண்டாவது நாள் நிகழ்ச்சியே உங்களின் தமிழ் ஓசை நிகழ்ச்சிதான் என பெரும் உத்வேகத்தைக் கொடுத்துப் பாராட்டினார்.

அடுத்த ஒன்றரை மாத காலகட்டத்தில் சமூக வலைத்தளம் வழியே இசைக் கலைஞர்களை ஒன்று சேர்த்து பயிற்சி அளித்து, பாடல்களைத் தேர்வு செய்து உடனடியாக அரங்கேற்றிய நிகழ்வு இது. அடுத்து திருச்சியில் நிகழ்த்தினோம்.

இதில் அடுத்த கட்ட மேடையாக வரும் பிப்ரவரி 23-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘அன்பாசிரியர்’ நிகழ்வு கிடைத்திருப்பது மிகப் பொருத்தமானது. இதைப்போல அர்த்தமும் வீச்சும் மிக்க, பல மேடைகளை சர்வதேச இசைப் பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறோம். எங்களுடைய இப்போதைய தேவை நம் சங்கத்தமிழை மக்கள் முன் வைக்க நிறைய மேடைகள் அமைத்துத் தர வேண்டும் என்பதுதான். அதைத் தமிழ்ச் சமூகம் செய்யும் என்றே கருதுகிறோம்!

ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கினீர்களே?

பட வேலைகள் சிறப்பாக முடிந்தன. வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. கோடை விடுமுறைக்குக் கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x