Published : 14 Feb 2020 12:34 PM
Last Updated : 14 Feb 2020 12:34 PM

மாற்றுக் களம்: சென்னையில் பன்னாட்டுப் படவிழா!

திரை பாரதி

கைக்கு அடக்கமான திறன்பேசியின் திரைகள், நம் கையிலிருக்கும் திரையரங்குகள் போல் ஆகிவிட்டன. திறன்பேசிகளைக் கொண்டு குறும்படம், ஆவணப்படம் எடுக்கும் தலைமுறையை வந்தாகிவிட்டது. இருப்பினும் சர்வதேச அளவில் ஆவணப்பட, குறும்பட உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களும் உத்திகளும் அதில் இயங்க விரும்பும் ஆர்வலர்களை முழுமையாக எட்டுவதில்லை.

இதற்கான மேடையை அமைத்துக் கொடுத்து, கடந்த ஏழு ஆண்டுகளாக ‘சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவை நடத்தி வருகிறது மறுபக்கம் திரைப்பட இயக்கம். சிறந்த படைப்புகளைத் திரையிடுவதுடன் நின்றுவிடாமல், படைப்பாளிகளுடன் கலந்துரையாடலுக்கும் ஒழுங்கு செய்து வருகிறது மறுபக்கம் அமைப்பு. தற்போது சென்னையில் வரும் பிப்ரவரி 19 முதல் 23-ம் தேதி வரை இத்திரைப்படவிழாவின் 8-வது பதிப்பை (8th Chennai International Documentary and Short Film Festival) ஐந்து நாட்களுக்கு நடத்துகிறது.

இம்முறை ஜெர்மானியக் கலாச்சாரத் தூதரகமான மேக்ஸ்முல்லர் பவனுடன் இணைந்து, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, பெரியார் சுயமரியாதை ஊடக மையம், பனுவல் புத்தக அங்காடி, டிஸ்கவரி புக் பேலஸ் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் நடக்கிறது. முற்றிலும் இலவசமான இத்திரைவிழா, ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையின் பல இடங்களில் நடைபெற இருக்கிறது.

ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, கியூபா, அல்ஜீரியா, ஈரான், மால்டா, அரபு குடியரசு, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், குவாதலூப், துருக்கி, சிரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தலைசிறந்த ஆவணப்பட, குறும்பட இயக்குநர்களின் படங்கள், இந்தியாவின் புகழ்பெற்ற படைப்பாளிகளின் படங்கள் என 8 பிரிவுகளின் மொத்தம் 50 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. திரையிடல் பற்றிய முழுமையான நாள், இடம், நேரங்காட்டிப் பட்டியல், படைப்பாளிகளின் பங்கேற்பு ஆகியவற்றை http://chennaifilmfestival.blogspot.com என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

திரையிடல் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் படைப்பாளிகளில் அண்ணா போல்மார்க் (ஸ்வீடன்), ரஞ்சன் பாலித் (கொல்கத்தா), ராஜுலா ஷா (போபால்), அனுபமா சீனிவாசன் (டெல்லி), அனிர்பன் தத்தா (டெல்லி), அமித் மொஹந்தி (டெல்லி), ஸ்வரா தண்டேகர் (பெங்களூரு), ராமதாஸ் கடவல்லூர் (திருச்சூர்), சந்தீப் ரவீந்திரநாத் (திருவனந்தபுரம்) உள்ளிட்ட முக்கிய படைப்பாளிகள் தங்கள் படங்களை முன்வைத்து, திரையிடலுக்குப் பிறகான விவாதங்களில் பங்கேற்கிறார்கள். சமகால ஜெர்மானிய மாற்றுப் படைப்புகளைக் கொண்டாடக் கடந்த சில ஆண்டுகளில் வெளியான பத்து ஜெர்மன் குறும்படங்களும் ஆவணப்படங்களும் திரையிடலில் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழக ஆவணப்படப் படைப்பாளியும் இத்திரைவிழாவின் இயக்குநருமான ஆர்.பி.அமுதன், இந்திய, சர்வதேச படங்களைத் தேர்வுசெய்திருக்கிறார். சுயாதீனத் திரைப்பட இயக்குநர்எஸ்.பி.பி பாஸ்கரன், தமிழ் ஆவண, மற்றும் குறும்படங்களைத் தேர்வு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x