Published : 12 Feb 2020 01:11 PM
Last Updated : 12 Feb 2020 01:11 PM

இது யாருடைய முட்டை?

உதயசங்கர்

வயலூரில் இந்த ஆண்டு நல்ல மழை. மாப்பிள்ளை சம்பா, கட்டிச்சம்பா, சீரகச்சம்பா, கம்பஞ்சம்பா, காட்டுச்சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, புழுதிச்சம்பா, இலுப்பைப்பூ சம்பா, துளசிச்சம்பா, கொட்டாரச்சம்பா, சன்னச்சம்பா, கிச்சலி சம்பா, நீலச்சம்பா, கருடன் சம்பா, கட்டைச்சம்பா, மிளகுச்சம்பா என்று நெல் வகையை விதைத்து நல்ல மகசூல் வந்தது.

அறுவடை முடிந்த வயலில் பறவைகளும் எலிகளும் எறும்புகளும் சுறுசுறுப்பாக அலைந்துகொண்டிருந்தன. எறும்புகள் கீழே சிந்திய நெல்மணிகளை முதுகில் சுமந்துகொண்டு வரப்பில் இருந்த புற்றுக்குள் கொண்டு போய்ச் சேமித்து வைத்தன.

சுள்ளான் எறும்பு தலையைக் குனிந்துகொண்டே போனதால் ஒரு பாறை மீது மோதியது. முன்னங்காலால் தலையைத் தடவிக்கொண்டது. அந்தப் பாறையின் மீது ஏறி மேலும் கீழும் அலைந்தது. அது பாறை கிடையாது. பறவையின் வாசனை வந்தது. உடனே சுள்ளான் கீழே இறங்கி தாத்தாவை அழைத்தது.

“அட! இது ஒரு பறவையின் முட்டை. அறுவடை நடக்கும்போது இந்த முட்டையை விட்டு விட்டுப் போயிருக்கும். வா, நம்ம வேலையைப் பார்ப்போம்“ என்று நடந்தது தாத்தா எறும்பு.

ஒரு கணம் யோசித்த சுள்ளான், “தாத்தா, இந்த முட்டையை உரியவரிடம் சேர்த்தால் என்ன? பாவமில்லையா அந்தப் பறவை?“ என்று கேட்டது.

“யாருடைய முட்டைனு தெரியாமல் எப்படிச் சேர்ப்பாய்?“

“பறக்கிற எல்லோரிடமும் கேட்போம்.”

தாத்தாவுக்கு மனமில்லை. ஆனால், சுள்ளான் பேச்சைத் தட்ட முடியவில்லை. சுள்ளானைப் போல அறிவாளி எறும்பு அவர்களுடைய கூட்டத்தில் இல்லை. உடனே செய்தி பறந்தது. எறும்புகள் எல்லாம் சேர்ந்து அந்த முட்டையைத் தூக்கிக்கொண்டு நடந்தன.

“கொண்டு சேர்ப்போம் அண்ணே

கொண்டு சேர்ப்போம்

முட்டையை அம்மாவிடம்

கொண்டு சேர்ப்போம்” என்று பாடிக்கொண்டு சுள்ளான் முன்னால் நடந்தது.

அப்போது எதிரே ஒரு காகம் எலியைப் பிடிப்பதற்காகப் பறந்து வந்தது. அது பிடிப்பதற்குள் அந்த எலி ஓடி வரப்பில் இருந்த வளைக்குள் ஒளிந்துகொண்டது. ஏமாந்து திரும்பிய காகத்திடம்,

“அக்கா அக்கா காக்காக்கா

உங்க முட்டையா பாருக்கா” என்றது சுள்ளான்.

காகம் அந்த முட்டையைப் பார்த்தது. “இல்லை. என்னோட முட்டையில இளநீல நிறத்தில புள்ளி இருக்கும். ரொம்பப் பெரிசு. நான் மரத்தில கூடு கட்டி முட்டையிடுவேன். இது என்னோட முட்டையில்லை“ என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.

எறும்புகள் மறுபடியும் முட்டையைச் சுமந்துகொண்டு சென்றன. வயல் வரப்பில் ஓர் ஓணான் கண்களை உருட்டி ஆசையோடு எறும்புகளைப் பார்த்தது. நாக்கைச் சப்புக் கொட்டி, முதுகைத் தூக்கிக்கொண்டு தலையை ஆட்டியது.

சுள்ளான் தூரமாக நின்றுகொண்டு,

“முட்டைக்கண்ணு ஓணானே

நாக்கு நீண்ட ஓணானே

முட்டையைப் பாரு ஓணானே

உன்னோடதானு சொல்லண்ணே“ என்று கேட்டது.

உடனே ஓணான் திரும்பி முட்டையை ஒரு கண்ணாலும் எறும்புகளை இன்னொரு கண்ணாலும் பார்த்தது. வாலை ஆட்டிக்கொண்டு எங்கோ பார்ப்பது போல பார்த்துக்கொண்டு, “என்னோட முட்டை ரொம்பச் சிறுசு. வெள்ளையா இருக்கும். இது என் முட்டை இல்லை“ என்று சொல்லிக்கொண்டே எறும்புகளைப் பிடிக்க நாக்கை நீட்டியது.

அதற்குள் எறும்புகள் வெகுதூரம் போய்விட்டன. நல்லவேளை பிழைத்தோம் என்று சுள்ளான் நினைத்தது. அப்போது எங்கிருந்தோ சர்ரென காட்டுப் புறாக்கள் கூட்டமாக வயலில் வந்திறங்கின.

“உயரே பறக்கும் புறாக்கா

உன்னைத் தானே பாருக்கா

உன்னோட முட்டையா சொல்லக்கா

உடனே தர்றோம் நில்லுக்கா” என்று சுள்ளான் பாடியது.

புறாக்கள் குனிந்து நெல்லைக் கொத்துவதிலேயே மும்முரமாக இருந்தன. சுள்ளான் காத்திருந்தது. தலை நிமிர்ந்த ஒரு புறா,

“இல்லை இல்லை

எங்க முட்டையில்லை..

அவ்வளவு பெரிசுமில்லை

இவ்வளவு சிறுசுமில்லை

இவ்வளவு அழுக்குமில்லை

அவ்வளவு வெள்ளையுமில்லை

எங்க முட்டையில்லை“ என்று சொல்லி விட்டு மறுபடியும் நெல்லைக் கொத்தத் தொடங்கியது.

எறும்புகள் மறுபடியும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. வரப்பில் ஒரு கவுதாரி தன் குஞ்சுகளுடன் கரையான் புற்றைக் கலைத்து, இரை எடுக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.

“அம்மா அம்மா கவுதாரி

சும்மா கொஞ்சம் பாரும்மா

உன்னோட முட்டையா சொல்லும்மா

சொன்னா தர்றோம் செல்லம்மா“

என்று சுள்ளான் கேட்க, கவுதாரி நிமிர்ந்து பார்த்து,

“முட்டையின் அம்மா நானில்லை

என் முட்டையில் புள்ளிகள் இருக்கா

நான் இட்ட முட்டைகள் அஞ்சு

பொரிச்ச குஞ்சுகளும் அஞ்சு

முட்டையின் அம்மா நானில்லை” என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்த்தது.

எறும்புகள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. அப்போது தாத்தா சுள்ளானுக்கு முன்னால் வந்து, “டேய் துடுக்குப் பயலே! நீ வேண்டாத வேலை பார்க்கிறாய். இப்படியே முட்டையைப் போட்டுட்டுப் போவோம். சொன்னால் கேளு” என்றார்.

அப்போது ஒரு பறவையின் அழுகுரல் கேட்டது.

“நான் போட்ட தங்கமுட்டை காணலயே

நான் போட்ட வைரமுட்டை காணலயே

நான் போட்ட பட்டுமுட்டை காணலயே

எங்கதைய யார் கேப்பா

எங்கண்ணீரை யார் துடைப்பா?”

அந்தப் பாட்டைக்கேட்ட சுள்ளான் அழுதுகொண்டிருக்கிற பறவையைத் தேடியது. புதர்ச் செடிக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு ஒரு காடை தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தது.

“அழாதே காடையக்கா

தேம்பாதே காடையக்கா

முட்டையைப் பாருக்கா

கண்ணீரைத் துடையக்கா“ என்று சொன்னதைக் கேட்டதும் காடை தலையைத் திருப்பி அந்த முட்டையைப் பார்த்தது.

புள்ளிகளுடன் அரக்கு வண்ண முட்டையைப் பார்த்ததும் அதன் கண்கள் மின்னின. கீச் கீச் கீச் என்று கத்திக்கொண்டு அந்த முட்டையைச் சுற்றிச் சுற்றி வந்தது. சுள்ளானுக்கும் தாத்தாவுக்கும் முட்டையைச் சுமந்துகொண்டு வந்த எறும்புகளுக்கும் நன்றி சொன்னது.

“என்னோட தங்க முட்டை

என்னோட வைரமுட்டை

கொண்டு வந்த எறும்புகளே

உங்களுக்குக் கோடி நன்றி”

என்று மகிழ்ச்சியில் கூத்தாடியது.

சுள்ளான் மற்ற எறும்புகளிடம், “இது காக்கா முட்டை இல்லை. ஓணான் முட்டை இல்லை, புறா முட்டை இல்லை, கவுதாரி முட்டை இல்லை. இது ஒரு காடை முட்டை“ என்று சொல்லிக்கொண்டிருந்ததைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x