Published : 12 Feb 2020 12:09 PM
Last Updated : 12 Feb 2020 12:09 PM

மாய உலகம்: ஒரு கப்பலால் என்ன செய்ய முடியும்?

மருதன்

ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் நான் காணும் கடைசிக் காட்சி, கப்பல். ஒவ்வொரு நாளும் விடிந்ததும் நான் காணும் முதல் காட்சி, கப்பல். இடைப்பட்ட பொழுதுகளிலும் நான் கப்பலைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். சாப்பிட அமர்ந்தால் கப்பல் என் அருகில் வந்து அமர்ந்துகொள்கிறது. புத்தகத்தை எடுத்துப் பிரித்தால் பக்கங்களுக்கு நடுவிலிருந்து கப்பல் உதித்து வருகிறது. நடந்தால் நிழல்போல் விடாமல் தொடர்கிறது. அமர்ந்து எழுதினால் என் தோளுக்குப் பின்னாலிருந்து என்னைக் குறுகுறுப்போடு கவனிக்கிறது.

நான் சாதிக்க விரும்புவது எல்லாம் ஒன்றுதான். என் கனவுகளிலும் நினைவுகளிலும் எப்போதும் நீந்திக்கொண்டிருக்கும் என் கப்பலுக்கு உயிர் கொடுத்து கடலில் மிதக்கவிட வேண்டும். ஒரு குட்டி யானைபோல் அது ஆடி ஆடி, அசைந்து அசைந்து செல்வதைக் கண்கொட்டாமல் கண்டு ரசிக்க வேண்டும்.

நான் மட்டுமல்ல என் உலகமும். வ.உ. சிதம்பரம் பிள்ளை என்னும் தனிமனிதனின் கப்பல் அல்ல அது. என் மக்களின் கப்பல். நான் வாழும் தமிழ் நிலத்தின் கப்பல். இந்தியர்களின் கப்பல். என் தேசத்தைப்போல் அகண்டும் நீண்டும் இருக்கும் கப்பல். ஆயிரம் மலர்களின் மலர்ச்சியை, ஆயிரம் மயில்களின் ஒய்யாரத்தை, ஆயிரம் காடுகளின் உறுதியைக்கொண்டிருக்கும் கனவுக் கப்பல்.

ஒரு குழந்தையைப்போல் காகிதத்தை எடுத்து மடித்து, மடித்து என் கப்பலை உருவாக்கிவிட முடியாது என்பதை நான் அறிவேன். நம் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. நாம் வாழும் இந்தியா என்பது நமது இந்தியா அல்ல. அது பிரிட்டனின் இந்தியா. நம் நிலம், நம் காடு, நம் மலை, நம் காற்று, நம் கடல் அனைத்துக்கும் பிரிட்டன் விலங்கு போட்டு பூட்டி வைத்திருக்கிறது. ஆசியா முதல் ஆப்பிரிக்காவரை பெரும்பகுதி அதன் உள்ளங்கைக்குள் இருக்கிறது. தூத்துக்குடியில் ஓர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு நம்மால் என்ன செய்ய முடியும்?

கப்பல் விட முடியும். கவனியுங்கள் நண்பர்களே, பிரிட்டன் உலகை ஆள்வதற்குக் காரணம் அது கடலை ஆள்வதுதான். பிரிட்டனை முறியடிக்க வேண்டுமானால் நாம் முதலில் நம் கடலை பிரிட்டனிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்குத் தேவை கப்பல். ஒரே ஒரு தமிழ்க்கப்பல். ஒரு காலத்தில் மேற்கே ரோம் தேசத்துக்கும் கிழக்கே ஜாவா, சுமத்ராவுக்கும் அவற்றுக்கு அப்பாலும் போய் வந்திருக்கிறது தமிழ்க்கப்பல்.

அப்படி ஒரு கப்பலை நாம் நம் காலத்தில் உருவாக்க வேண்டும். முழுக்க முழுக்க நம் கரங்களைக்கொண்டு உருவாக்கப்படும் சுதேசிக் கப்பலாக அது இருக்கும். கன்னடம், துளு, மலையாளம், உருது, மராத்தி என்று அத்தனை மொழிகளையும் அவற்றைப் பேசுபவர்களையும் நம் தமிழ்க்கப்பல் அரவணைத்துக்கொள்ளும். இலங்கை தொடங்கி அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆசிய மக்கள் அனைவரையும் நம் தமிழ்க்கப்பல் தன் முதுகில் சுமந்து செல்லும். உலகின் கப்பலாகவும் மனிதகுலத்தின் கப்பலாகவும் எதிர்காலப் பயணத்துக்கான கப்பலாகவும் நம் தமிழ்க்கப்பல் திகழும்.

நம் இதயத்தின் துணிவை, நம் தோளின் வலிமையை, நம் பார்வையின் தெளிவை, நம் மொழியின் அழகைத் தொகுத்து நம் கப்பலை நாம் கட்டுவோம். நமது கூட்டுக்கரங்களைக் கொண்டு கப்பலை உலகம் முழுக்கச் செலுத்துவோம். நம் பெருமிதத்தின் அடையாளமாகவும் நம் விடுதலை வேட்கையின் வெளிப்பாடாகவும் நம் கப்பல் இருக்கும். மழை, புயல், சூறாவளி, எது வந்து தாக்கினாலும் நம் கப்பல் கலங்காது. குண்டுகளைப் பொழிந்தாலும் நம் கப்பல் சரியாது.

எத்தனை ஆழத்தில் சென்றாலும் அது கவிழாது. எவ்வளவு இருள் வந்து சூழ்ந்தாலும் மின்னல் போல் கிழித்தெறிந்து நம் கப்பல் வெளிப்படும். இந்தியாவின் விடுதலையை நோக்கி, ஆசியாவின் விடுதலையை நோக்கி, உலகின் விடுதலையை நோக்கி நம் கப்பல் சீறிப்பாயும்.

நாம் அடிமைகள் அல்ல என்பதை உணர்த்த நமக்குத் தேவை ஒரு கப்பல். இது எங்கள் கடல், எங்கள் நிலம், எங்கள் தேசம் என்பதை பிரிட்டனுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்த நமக்குத் தேவை ஒரு கப்பல். நாம் மூழ்காமல் இருப்பதற்கும் விரும்பியடி கரை சேர்வதற்கும் நமக்குத் தேவை ஒரு கப்பல். கப்பலைக்கொண்டு கடலை மீட்போம். கப்பலைக்கொண்டு தேசத்தை மீட்போம். கப்பலைக்கொண்டு விடுதலையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை நிலைநிறுத்துவோம்.

என் வீடு, கல்வி, தொழில், சொத்து, குடும்பம் அனைத்தையும் நம் கப்பலுக்காக அளிக்க நான் தயாராக இருக்கிறேன். என் உடலையும் உயிரையும் அளித்தால் கப்பல் உயிர்பெற்றுவரும் என்றால் இரண்டையும் இப்போதே அளிக்கத் துடிக்கிறேன். சிறையோ சித்திரவதையோ என்னைத் தடுத்து நிறுத்தாது.

எதன் பொருட்டும் என் வேட்கையை, என் கனவை, என் கப்பலை விட்டுக்கொடுக்கத் தயாராக நான் இல்லை. ஒருவேளை என் வாழ்நாளில் அப்படி ஒரு கப்பலை என்னால் காண முடியாமல் போனால், என் கனவை நீங்கள் தொடருங்கள். என் போராட்டத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள். என் வேட்கையை நீங்கள் அள்ளிச் செல்லுங்கள். என் கப்பலை நீங்கள் கட்டுங்கள். ஒட்டுமொத்த மனிதகுலமும் விடுவிக்கப்படும்வரை உங்கள் கரம் கப்பலைச் செலுத்திக்கொண்டே இருக்கட்டும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x