Published : 11 Feb 2020 01:08 PM
Last Updated : 11 Feb 2020 01:08 PM

காதலர் தினம்: உலகின் காதல் வைரஸ்!

எல். ரேணுகாதேவி

பிப்ரவரி 14 என்றலே, யுவன், யுவதிகளின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கத்தொடங்கிவிடும். காதலிப்பவர்கள், காதலிக்க தூதுவிட்டுக் கொண்டிருப்பவர்கள், ஒருதலையாகக் காதலிப்பவர்கள் என எல்லோருக்குமே அந்த நாள் குதூகலத்தைக் கொடுத்துவிடும். கரடி பொம்மை, சாக்லெட், பூங்கொத்து, வாழ்த்து அட்டை எனத் காதலர்கள் தங்களுக்குள் வித்தியாசமான ஆச்சரியப் பரிசுகளையும் மனத்தையும் பரிமாறிக்கொள்வார்கள்.

நம்மூர்களில் காதலர் தினம் என்பது பார்க், பீச், சினிமா, ரிசார்ட் எனக் காதலர்கள் சுற்றுவதோடு முடிந்துவிடுகிறது. அதுவும் இப்போது காதலர் தினத்துக்கு எதிராகக் கெடுபிடி செய்வோரும் களத்தில் குதித்துவிடுவதால், காதலர் தினம் என்பது எப்போதும் போலவே ஒரு நாளாகவே கழிந்துவிடுகிறது. ஆனால், வெளி நாடுகளில் அப்படி அல்ல. காதலர் தினத்தை ரசித்துக் கொண்டாடுவோர் உண்டு. உலகில் காதலர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் நாடுகள் எவை?

தேசிய விடுமுறை

காதலர் தினம் என்றால், நம்மூரில் கல்லூரியிலோ அலுவலகத்திலோ ஏதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு விடுப்பு எடுத்துக் கொள்வோர் உண்டு. ஆனால், டென்மார்க்கில் இப்படிப் பொய் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், அங்கு 1990-ம் ஆண்டு முதலே காதலர் தினத்துக்குத் தேசிய விடுமுறை அறிவிக்கப் படுகிறது. அன்றைய தினம் காதலன் ‘டேனிஷ் ட்விஸ்ட்’ என்ற பிரபலமான ரொட்டியைத் தன்னுடைய காதலிக்கு பரிசாக வழங்குவார். அதேபோல் பெயர் குறிப்பிடாமல் அனுப்பப்படும் காதலர் தின வாழ்த்து அட்டையில் நகைச்சுவைக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும். ஆனால், அதில் காதலனின் பெயர் இருக்காது. இந்த வாழ்த்து அட்டையைப் பெறும் காதலி தன்னுடைய காதலன் யார் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டால் ஆண்டின் இறுதியில் காதலிக்கு ஈஸ்டர் முட்டைகளைப் பரிசாக காதலன் வழங்குவார்.

90 நாள் கொண்டாட்டம்

உலகின் காதல் நகரம் என்ற சிறப்பைப் பெற்றது பிரான்ஸ். இந்நாட்டில்தான் முதன் முதலில் காதலர் தின வாழ்த்து அட்டை வெளியானதாகக் கருதப்படுகிறது. இந்த மொபைல் யுகத்திலும் அங்கே காதலர் தின வாழ்த்து அட்டைகள் வழங்குவது பிரபலமாகவே உள்ளது.

பொதுவாக காதலர் தினத்தைக் காதலிப்பவர்கள் சேர்ந்து அன்றைய தினத்தில் கொண்டாடுவார்கள். ஆனால், தென்கொரியாவில் பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கும் காதலர் தினக் கொண்டாட்டம் ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கிறது. முதலில் கொண்டாடப்படும் காதலர் தினத்தென்று பெண்கள் ஆண்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து மகிழ்வார்கள். அதேபோல் ‘வெள்ளை நாள்’ என்றழைக்கப்படும் மார்ச் 14 அன்று ஆண்கள் தங்களுடைய காதலிக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்கள்.

ஒருவேளை காதலியோ, காதலனோ இல்லாதவர்களுக்கு ஏப்ரம் 14-ம் தேதி உள்ளது. இந்நாளில் அவர்கள் தங்களுடைய தனிமையை கொண்டாடும் விதமாகக் கறுப்பு பீன்ஸில் செய்யப்பட்ட நூடுல்ஸ்ஸை உணவாக எடுத்துகொள்வார்கள். இப்படி பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை விதவிதமாகக் கொண்டாடுகிறார்கள்.

வானில் சந்திக்கும் காதலர்கள்

பொதுவாக பிப். 14-ம் நாள் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும் வேல்ஸ், சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் தங்களுக்கென தனியாகக் காதலர் தினத்தை வைத்துள்ளனர். வேல்ஸ் நாட்டில் செயின்ட் ட்வைன்வென் நினைவு நாளான ஜனவரி 25-ம் தேதியைக் காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். அந்நாளில் காதலிக்குக் கலைநயத்துடன் மரத்தால் வடிவமைக்கப்பட்ட ஸ்பூனைப் பரிசாக வழங்குவார்கள்.

இந்தக் காதல் ஸ்பூனை காதலிக்கு வழங்கும் வழக்கம் 17-ம்நூற்றாண்டிலிருந்து உள்ளதாம். இந்தக் காதல் ஸ்பூன் மூன்று விஷயங்களைக் குறிக்கிறது. குதிரையுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பூன் அதிர்ஷ்டத்தையும், சக்கரத்துடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பூன் காதலன் என்றும் துணையாக இருப்பான் என்பதையும் சாவி போல் வடிவமைக்கப்பட்ட ஸ்பூன் காதலனின் மனதை திறக்கும் என்ற அர்த்தத்தையும் கொண்டிருக்கின்றன.

அதேபோல் சீனர்கள் தங்களுடைய சீன நாட்காட்டியின் அடிப்படையில் சந்திர மாதத்தின் ஏழாவது நாளைக் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், சொர்க்கத்தில் உள்ள இளவரசரின் மகளான ஸின்யூ பூமியில் வசித்த ஏழையான நைவ்லங்கைத் திருமணம் செய்துகொள்கிறார். இதைக் கேள்விபட்ட சொர்க்க இளவரசர் ஷின்னு மகளைத் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறார்.

மனைவியைப் பிரிந்த நைவ்லங் தன் இரண்டு குழந்தைகளுடன் ஸின்யூவை நினைத்து அழுகிறான். இதனால் ஆண்டில் ஒரு நாள் மட்டும் இருவரும் சந்தித்துக்கொள்ள ஷின்னு அனுமதி அளிக்கிறார். ஸின்யூ தன் குடும்பத்தினரை நட்சத்திர வடிவில் சந்திர மாதத்தின் ஏழாம் நாள் வந்து சந்திக்கிறாள். அன்றைய தினம் இளம் சீனர்கள் தங்கள் காதலியுடன் கைகோத்தபடி வானில் நட்சத்திரங்களாக காட்சிதரும் அவர்களைப் பார்த்தவாறே காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

கனவில் தெரியும் காதலன்

இங்கிலாந்துப் பெண்கள் காதலர் தினத்ததென்று தலையணைக்கு அடியில் பிரியாணி இலையை வைத்துக்கொண்டு உறங்குவார்கள். தலையணையின் நான்கு முனைகள், நடுப்பகுதியில் பிரியாணி இலையை வைத்து உறங்கினால் கனவில் எதிர்காலக் கணவர் வருவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இதேபோல் வித்தியாசமான பழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர் இத்தாலிப் பெண்கள்.

அவர்கள் காதலர் தினத்தின்போது விடியற்காலை எழுந்து, அவர்கள் சந்திக்கும் முதல் ஆண் அவர்களின் கணவராக வருவார் என நம்புகிறார்கள். இவர்களைப் போல் தென் ஆப்பிரிக்கா பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆணின் பெயரை காதலர் தினத்தின்போது உடையில் எழுதிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு காதலர் தினத்தில் ஜகமே காதலால் நிரம்பியுள்ளது. இந்த மாசற்ற அன்பே மனிதத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x