Published : 10 Feb 2020 12:43 PM
Last Updated : 10 Feb 2020 12:43 PM

ஜெ ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய‘ஆல் நியூ கிரெடா’

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

இந்திய எஸ்யுவி சந்தையைப் பிடிக்க போட்டிப் போட்டுக்கொண்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்துமே மும்முரமாகக் களம் இறங்கியுள்ளன. சீன நிறுவனங்களான கியா, எம்ஜி மற்றும் தற்போது என்ட்ரி கொடுத்திருக்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் ஆகியவற்றின் அதிரடியான அறிமுகங்கள் இந்திய எஸ்யுவி சந்தையில் கடும் போட்டியை உருவாக்கி இருக்கின்றன.

இந்தப் போட்டியைச் சமாளிக்கும் வகையில் பல ஆண்டுகளாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல மாற்றங்களை நிகழ்த்தி வரும் ஹுண்டாய், மாருதி போன்ற நிறுவனங்களும் தங்களுடைய மாடல்களை வடிவமைத்துவருகின்றன. இதனால் இந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்யுவிகளே அதிகம் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் ஹுண்டாயின் ‘ஆல் நியூ கிரெடா’வும் ஒன்று.

ஹுண்டாய் கிரெடா ஏற்கெனவே இந்தியக் கார் பிரியர்களின் விருப்பமான காராக இருந்துவரும் நிலையில், இந்த ‘ஆல் நியூ கிரெடா’ மேலும் மேம்படுத்தப்பட்டு, வடிவமைப்பிலும், செயல்திறனிலும் சந்தையின் எல்லா எஸ்யுவி செக்மென்ட் மாடல்களுடன் போட்டிப் போடும் வகையில் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கடந்த வருடம் ஐஎக்ஸ் 25 என்ற மாடலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நியூ கிரெடா இந்தியாவுக்கென தற்போது வெளிப்புறம் மற்றும் உட்புறத் தோற்றத்தில் பல மாற்றங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் புதிய பிஎஸ் 6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

வெளிப்புறத் தோற்றத்தைப் பொருத்தவரை டிசைன் அட்டகாசமாக உள்ளது. முந்தைய மாடல் கிரெடாவைக் காட்டிலும் அதிக நீளமும், அதிக வீல்பேஸும் கொண்டிருக்கிறது. டிசைனில் ஒரு எஸ்யுவியில் எதிர்பார்க்கும் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இது உள்ளது.

இதன் கேஸ்கேட் கிரில் எப்போதும்போல இருந்தாலும், ஹெட்லைட் பொசிஷனிங் சிறப்பாக உள்ளது. பூமராங் வடிவ எல்இடி ஆர் எல், அதற்குள் ஹெட்லைட் என அழகாக உள்ளது. முன்பக்க பானெட் எஸ்யுவிக்கான மாஸ்குலின் தோற்றத்தை சிறப்பாகக் கொடுக்கிறது. மேலும் சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள் பானெட் உயரத்துக்கு ஏற்றப்பட்டு கூடுதல் ஈர்ப்பை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டூயல் டோன் பெயின்டிங் புதிய கிரெடாவின் தோற்றத்துக்கு மேலும் மெருகேற்றுகிறது. காரின் சி பில்லருக்கு சில்வர் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புற தோற்றம் மற்றும் வசதிகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை. அதேசமயம் ஐஎக்ஸ் 25 மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்களை இதில் எதிர்பார்க்கலாம். இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை இதன் போட்டி மாடல்களுக்கு நிகரான செயல்திறன்களுடன் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஆல் நியூ கிரெடாவை ஹுண்டாயின் பிராண்ட் அம்பாசிடர் ஷாருக்கான் அறிமுகப்படுத்தினார். 22 ஆண்டுகளாக ஹுண்டாயின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் ஷாருக்கான், தான் ஹூண்டாயின் தந்தையைப் போலவே உணர்வதாகக் கூறினார்.

22 ஆண்டுகள் தொடர்ந்து ஹுண்டாயுடன் பயணிக்க காரணம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சான்ட்ரோ முதல் இந்தப் புதிய கிரெடா வரை தொடர்ந்து ஹுண்டாய் புதிய மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. இந்தியக் கார் பிரியர்களை ஹுண்டாய் அவ்வளவு புரிந்துவைத்திருக்கிறது என்றார். இந்தப் புதிய கிரெடா வரும் மார்ச் மாதத்தில் அதிகாரப் பூர்வமாக இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x